திருச்சியில் பரவும் டெங்கு... மருத்துவமனையில் மாணவர்கள்... அக்கறை காட்டுமா அரசு?



Sponsored



கருநீல கால்கள்... அதில் வெள்ளை வரிகள்... இவை  ஏற்படுத்தும் ஆபத்து அலறவைக்கிறது. ‘எங்கே... எல்லையில் சீன ராணுவம் எற்படுத்தி வரும் அச்சுறுத்தலா...’ என்கிறீர்களா? இல்லை. டெங்குக் காய்ச்சலைப் பரப்பும் கொசுக்கள்தான் இப்போது நம்மை அலறவைத்துக்கொண்டிருக்கின்றன.

 

டெங்குவைப் பரப்பும் ஏடிஸ் கொசுக்கள், கருநீலக் கால்களையும், அதில் வெள்ளை வரிகளையும் கொண்டவை எனக் கண்டறியப்பட்டுள்ளன. அப்படிப்பட்ட கொசுக்களிடமிருந்து தூர விலகி வாழ்வதுதான் நமக்கு பாதுகாப்பு. என்றாலும், நம்மால் அவற்றிடம் இருந்து விலகி ஓட முடிவதில்லை என்பதே யதார்த்தம்.

Sponsored


திருச்சியில் உள்ள அரசு மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பலர் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களிலும் பெரும்பாலானவர்கள் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

Sponsored


மருத்துவமனையில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு கடுமையான காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுவரும் பலரையும் சந்தித்தோம். அவர்களில் ஒருவர், காரைக்குடியைச் சேர்ந்த மாணவர் கிறுஸ்து ராஜ். கல்லூரியில் தங்கிப் படித்துக்கொண்டிருக்கிறார். அவர் சிகிச்சை பெறும் வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த 10பேரில் ஆறு பேர் மாணவர்கள். “டெங்குனு உறுதி செஞ்சுட்டாங்களா?’’ என்று அந்த மாணவரிடம் கேட்டோம். “வைரஸ் காய்ச்சல்னு சொல்லித்தான் எங்களுக்கு சிகிச்சை குடுக்குறாங்க. ஆனா, டெங்கு காய்ச்சலா இருக்குமோனு பயமா இருக்கு’’ என்றார்.

 

அந்த மாணவர் பயப்படுவது நியாயமாக இருந்தாலும், காய்ச்சல் வந்ததும் அது டெங்குதானா என்பதை உடனடியாக அறிந்துகொள்ள முடியாது. காய்ச்சல் வந்து ஒரு வார காலம் ஆன பிறகுதான் அது உறுதி செய்யப்படும். அதிலும் காய்ச்சல் வந்த மூன்று நாள்களுக்குப் பிறகு செய்யப்படும் முழு ரத்த அளவு பரிசோதனைகளில்தான் இது உறுதி செய்யப்படும். அதனால்தான், சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுபவர்கள் தங்களுக்கு வந்திருக்கும் காய்ச்சல் என்ன என்பதை அறிய முடியாமல் பயத்திலேயே இருக்கிறார்கள்.

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுவரும் 103 பேர்களில் 11 பேருக்கு டெங்குதான் என்பது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக மருத்துவமனையின் டீன் பொறுப்பில் இருக்கும் டாக்டர் அனிதாவிடம் பேசினோம்.  “இந்த மருத்துவமனையில் தீவிர காய்ச்சலுக்காக சிகிச்சை பெறுபவர்களுக்கு ஆறு சிறப்பு மருத்துவக் குழுக்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை பெறுபவர்களில் 35 குழந்தைகளும் இருக்கிறார்கள். குறிப்பிட்ட சில பருவங்களில் மட்டுமே வந்துகொண்டிருந்த டெங்குக் காய்ச்சல் இப்போது எல்லாக் காலத்திலும் வருகிறது. எனவே, நாம்தான் பாதுகாப்பாக இருக்க வேண்டும். குடியிருக்கும் வீடுகளிலும், சுற்றியிருக்கும் இடங்களிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளவேண்டியது மிக அவசியம். காய்ச்சல், தலைவலி, மூட்டுவலி, வாந்தி... என டெங்குவுக்கான அறிகுறிகளுடன் இங்கே வருபவர்கள் தொடர்ந்து அதற்கான சிகிச்சைகளுடன் காண்காணிக்கப்படுகிறார்கள்’’ என்று குறிப்பிட்டார். 

திருச்சியில் டெங்கு காய்ச்சல் பரவுவது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரனிடம் பேசினோம். “டெங்குக் காய்ச்சலைத் தடுப்பதற்கு திருச்சி மாநகராட்சியில் இருக்கும் அத்தனை வார்டுகளிலும் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்காலிக பணியாளர்களைக் கொண்டு ஆறு நாள் திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில், திருச்சியில் உள்ள வீடுகளில் கொசு ஒழிப்பு பணியை செய்ய அவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள்’’ என்றார் ரவிச்சந்திரன்.

தமிழ்நாட்டில் சென்ற ஆண்டு டெங்கு காய்ச்சலால் 2,531பேர் பாதிக்கப்பட்டு அதில் ஐந்து பேர் இறந்ததாகவும், இந்த ஆண்டு ஜூன் மாதம் வரையிலான ஆறு மாதங்களில் 4,654 பேர் பாதிக்கப்பட்டு அதில் இருவர் உயிரிழந்ததாகவும் அரசு அறிவித்துள்ளது. இன்று கோவையில் 11-ம் வகுப்பு பள்ளி மாணவி ஹேமவர்தினி டெங்குக் காய்ச்சலால் உயிரிழந்த செய்தி, திருச்சியில் சிகிச்சை பெறும் மாணவர்களை கலக்கமடையவைத்திருக்கிறது. 

இதற்கிடையே “டெங்குவைப் பரப்பும் கொசுக்களை ஒழிக்க வாய்ப்பே இல்லை” என குறிப்பிட்டிருக்கிறார் தமிழக சுகாதாரத்துறையின் முன்னாள் இயக்குநர் இளங்கோ. “அவற்றைக் கட்டுப்படுத்த மட்டுமே முடியும். டெங்குவை பரப்பும் ஏடிஸ் கொசுக்களின் ஆயுள்காலம் 20 நாள்களில் இருந்து 40 நாள்களாக உயர்ந்துள்ளது” என்கிறார்.

தமிழ்நாட்டில் கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து டெங்கு பாதிப்பு அதிகரித்துவருவதாக குறிப்பிட்டிருக்கும் அவர், “யானைக்கால், மலேரியா போன்ற நோய்களைக் கட்டுப்படுத்த நிரந்தர அமைப்புகள் இருப்பதுபோல் டெங்கு ஒழிப்புக்கும் ஏற்படுத்தப்பட வேண்டும்’’ என்றார்.

வழக்கம்போல், `கொசு ஒழிப்பில் கவனம் செலுத்துகிறோம்’ எனச் சொல்லி சமாளிக்காமல், ஒருங்கிணைந்த திட்டமிடல் மூலம் உண்மையான அக்கறையை அரசு காட்ட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு!



Trending Articles

Sponsored