விபத்துகள் அதிகரிக்க ‘சாலை வெறி’காரணமா? #DataStory



Sponsored



சாலை விபத்துகளால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. இந்தியாவில் நாளொன்றுக்கு 400 பேர்  சாலை விபத்துகளால் உயிரிழக்கின்றனர். கடந்த ஆண்டு கணக்கெடுப்பின்படி, அதிகமாக விபத்துகள் ஏற்படும் பட்டியலில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. முதல் இடம் உத்தரப்பிரதேசத்துக்கு. 

வாகனப் பெருக்கம், சாலை நெரிசல், மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படாத மனோபாவம், சாலை விதிகளை மீறுதல், குறுகலான பாதையில் எதிரெதிரே செல்லுதல், அதீத வேகத்தில் வாகனங்களை ஓட்டிச் செல்லுதல் போன்ற பல காரணங்களால் விபத்துகள் ஏற்படுகின்றன.

Sponsored


ஆயினும், ‘விபத்துகளுக்கு மிக முக்கியக் காரணங்களாக இருப்பது Road rage எனப்படும் சாலை வெறியே’ என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்.

Sponsored


இதுகுறித்து உளவியல் நிபுணர் ஶ்ரீனிவாசன் விரிவாகப் பேசுகிறார். 

“எதிர்பாராத தருணங்களில் விபத்துகள் நடப்பது இயல்பு. ஆனால், அண்மைக்காலமாக விபத்துகள் அதிகரிக்கக் காரணம் சாலை வெறி தான். இந்த வார்த்தை கொஞ்சம் பயங்கரமாகத் தெரியலாம். ஆனால், இது ஒரு உளவியல் பிரச்னை. பிற வாகனங்களில் செல்பவரின் மீதும், சாலையில் செல்பவரின் மீதும் தாக்குதல் நடத்துதல், ஹாரன்களை ஒலித்து, அதிக இரைச்சலை ஏற்படுத்துதல், திட்டுதல், சண்டை போடுதல், வாகன நெரிசலினால் ஏற்படும் உணர்ச்சிப்பெருக்கு, சைகைகள் மூலமாக உணர்ச்சிகளை வெளிப்படுத்துதல் போன்றவை சாலைவெறி என்னும் 'ரோட் ரேஜ்' அறிகுறிகள். இது பெரும்பாலும் 18 முதல் 25 வயது வரை உள்ள இளைஞர்களை அதிகமாகப் பாதிக்கிறது. இதனால், பெண்களைவிட ஆண்களே அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள்.

சாலை வெறி ஏற்பட சில காரணங்கள்

மனஅழுத்தம்

விட்டுக்கொடுக்கும் தன்மை இல்லாதது 

கவனமின்மை

அறியாமை

சாலை வெறி இருக்கிறதா என்பதைக் கண்டறிய உதவும் அறிகுறிகள்...

*  சிவப்பு விளக்கை மதிக்காமல் செல்வது

* அதிவேகத்தில் வாகனங்களை ஓட்டுவது.

* பிறரைக் காரணமின்றி முறைப்பது, திட்டுவது, சண்டைபோடுவது.

* நமக்கு முன் செல்லும் வாகனம் மெதுவாகச் செல்கிறது என்று நினைத்து, அவற்றை முந்த முயற்சிப்பது. 

* நடந்து செல்லும் பாதசாரிகளைத் தகாத வார்த்தைகளில் திட்டுவது. 

இவற்றில் ஏதேனும் ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்ட செயல்பாடுகளோ இருந்தால் அவர்கள் சாலை வெறியால் பாதிக்கப்பட்டவர்கள். தொடர்ந்து பல நாள்களாக இப்படியான செயல்பாடுகளில் ஈடுபட்டால் உடனடியாக மனநல மருத்துவரை அணுகுவது நல்லது. 

மது அருந்தி இருக்கும்போது அல்லது வேறு ஏதேனும் போதைப் பொருள் உபயோகப்படுத்தி இருக்கும்போதும் தன்னிலை மறந்து சிலருக்கு சாலை வெறி ஏற்படுவதுண்டு. சாலை வெறியால் பெர்சனாலிட்டி பாதிப்புகள் ஏற்படும். அதிக உணர்ச்சிவசப்படுதல்,  நாடகத்தன்மையோடு நடந்துகொள்பவர்களுக்கு 'க்ளஸ்டர்- பி பெர்சனாலிட்டி டிஸ்ஆர்டர்’ (cluster b personality disorder) என்றப் பிரச்னை இருக்கும். அவர்களுக்கு சாலைவெறி வருவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு. 

சாலை வெறியால் பாதிக்கப்பட்டவர்கள் அமைதியாகவே இருப்பார்கள். ஆனால், பல சந்தர்பங்களில் அதீத கோபத்தை வெளிப்படுத்துவார்கள். இது அதிகப்பட்சம் ஒரு மணிநேரத்தில் சரியாகிவிடும். அதைப்பற்றி பின்னால் யோசித்து வருத்தம் கொள்வார்கள். இதை ’டிஸ்ட்ரப்டிவ் இம்ப்ளஸ் கன்ட்ரோல் அண்ட் டிஸ்ஆர்டர்’ (disruptive impulse control and conduct disorder) எனக்கூறுவர். 

மேனியா போன்ற “மூட்  டிஸ்ஆர்டர்” உள்ளவர்களுக்கும் சாலைவெறி ஏற்படும். இந்த டிசார்டர் உள்ளவர்கள் திடீரென வாகனத்தில் நீண்ட தூரம் பயணம் செய்வார்கள். அதீத வேகத்தில் பயணிக்கவும் ஆசைகொள்வார்கள். இவர்கள் தாங்கள் செய்யும் செயல்களின் பின்விளைவுகளைப் பற்றி அதிகம் யோசிக்க மாட்டார்கள். தனக்குள் அதிக ஆற்றல் உள்ளது என்று எண்ணம் கொள்வார்கள்.

சாலை வெறியால்  ஹைபர் டென்ஷன் ஏற்படும். அதுவே விபத்துக்குக் காரணமாக இருக்கிறது. 

சாலை வெறி ஏற்படாமல் இருக்க சில ஆலோசனைகள்!

* மிகுந்த கோபம் அல்லது மனஉளைச்சலில் வாகனம் ஓட்ட நேர்ந்தால் ஒரு நிமிடம் சாலையின் ஓரமாக நின்று, நிதானமாகியபின் மீண்டும் பயணத்தைத் தொடரலாம். 

* நீண்ட நேரம் தூங்காது கண் விழித்து வாகனம் ஓட்டினால், சாலையின் ஓரமாக வாகனத்தை நிறுத்தி முகம் கழுவிவிட்டு சில மணி நேரம் ஓய்வெடுத்தபின், பயணத்தைத் தொடரலாம்.

* பசியோடு பயணம் செய்வதைத் தவிர்க்கலாம். அனைத்தையும்விட பசி மிகவும் ஆபத்தானது. பசி எளிதில் கோபத்தை உண்டாக்கும். 

* அதிகமாக உணர்ச்சிவசப்படுகிறோம் என்று உணர்ந்தால், 5 முறை மூச்சை நன்றாக இழுத்துவிட வேண்டும். இது நம் மனநிலையை நிதானமாக வைத்திருக்க உதவும்.

* பயணத்தை முன்கூட்டியே திட்டமிடுவது நல்லது. பதற்றம்தான் சாலை வெறிக்கான அடிப்படை. 

* மற்றைவரைத் திட்டும்முன்,  நாம் செய்வது சரிதானா என்று ஒரு நிமிடம் யோசித்துப் பார்க்கலாம்.

* வாகனம் ஓட்டும்போது  உடன் பயணிப்பவர்கள் கோபமாக பேசினால் அதை கண்டுகொள்ளாது விட்டுவிடுங்கள். 

* சாலை விதிகளை மீறக்கூடாது.

*  குழந்தைகளோடு பயணிக்கும்போது அவர்கள் மேல் கூடுதல் கவனத்தோடு இருப்பது நல்லது.



Trending Articles

Sponsored