இந்தியாவில் ஒரு நாளில் குழந்தைகளுக்கு எதிராக 293 குற்றங்கள்!#VikatanInfographics



Sponsored



மீபத்தில் வெளியான ஒரு சர்வே முடிவில் `இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இந்தியா பெண்களுக்குப் பாதுகாப்பற்ற நாடாக உள்ளது' என்று தெரிவித்திருந்தது. தற்போது, அந்த நிலை குழந்தைகளுக்கும் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. சென்னையில் 7ம் வகுப்பு மாணவியை 17 பேர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 

இந்தியாவில் 2014ம் ஆண்டு 89,423-ஆக இருந்த குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் இரண்டே ஆண்டுகளில் ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது. இதன்படி பார்த்தால் இந்தியாவில் ஒரு நாளில் குழந்தைகளுக்கு எதிரான சராசரியாக 293 குற்றங்கள் நடக்கின்றன. இதில் 154 குற்றங்கள் பாலியல் துன்புறுத்தல்களாக உள்ளது. தமிழகத்தில் மட்டும் ஓர் ஆண்டில் போக்ஸோ சட்டத்தின் கீழ் 1567 வழக்குகள் குழந்தைகளுக்கு எதிரான குற்றமாகப் பதிவாகியுள்ளன. 

2016 தேசிய குற்றப்பிரிவு ஆணைய தகவலின்படி மொத்த இந்தியாவிலும் குழந்தைகளுக்கு எதிராக நடந்துள்ள பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களின் எண்ணிக்கை 55,787. அதில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை - 56,241. இது தவிர 763 குழந்தைகள் கடத்தப்பட்டும், பாலியல் தொழிலுக்காக 135 குழந்தைகள் விற்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2016-ம் ஆண்டு மட்டும் 1775 குழந்தைகள் கொலை செய்யப்பட்டுள்ளன. குழந்தைகள் பாதுகாப்புக்காகப் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வந்தாலும் இன்னமும் குழந்தைகள் மீதான குற்றங்கள் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கின்றன. 

Sponsored


Sponsored


தமிழ்நாட்டில் மட்டும் 2016ம் ஆண்டு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் வழக்குகளின் எண்ணிக்கை 336, பாலியல் தொல்லை வழக்குகள் 27 பதிவாகியுள்ளது. தமிழகத்தில் சென்னை, விழுப்புரம், வேலூர் ஆகிய மாவட்டங்கள்தாம் குழந்தைகள் மீதான குற்றங்களில் முன்னிலை வகிக்கின்றன. சென்னையில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் FIR பதிவு செய்து, விசாரணையில் 180 வழக்குகள் நிலுவையில் உள்ளன. குழந்தைகள் விஷயத்தில் பாலியல் தொந்தரவுகளுக்கு அடுத்தபடியாக, ஆள்கடத்தல்கள் அதிக அளவில் நடைபெறுகின்றன. ஆள்கடத்தலுக்கான முக்கியக் காரணங்களில் பணம் பறிப்பதும், பாலியல் துன்புறுத்தல்களும்தாம் அதிகமாக உள்ளன. இந்தியாவில் மட்டும் ஆள் கடத்தலுக்கு உள்ளான குழந்தைகளின் எண்ணிக்கை மட்டும் 700ஐ தாண்டுகிறது. 

போலீஸ் சிசிடிவி உதவி இருப்பதால் 75 சதவிகித வழக்குகளில் குற்றவாளியை எளிதாக அடையாளம் காண முடிகிறது என்று சமீபத்திய புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால், சிசிடிவிகள் பொது இடங்களில் அமைக்காமல் இருப்பதற்கும், அப்படியே அமைத்திருந்தாலும் அவை செயல்பாட்டு நிலையில் இல்லாததும் குற்றங்களுக்கு மேலும் வழிவகுக்கின்றன. இதனாலேயே பல குற்றங்களை கண்டறிவதில் தொடர்ந்து சிக்கல் ஏற்படுத்துவதாக உள்ளது. 

காஷ்மீரில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட சிறுமி, சென்னையில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு கொலையுண்ட சிறுமி ஹாசினி என குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இது போன்ற கொடூர குற்றங்களுக்கு தண்டனைகளை அதிகப்படுத்துவது மிகவும் அவசியமானதாக உள்ளது. சிசிடிவி கேமரா போன்ற தொழில்நுட்பங்கள் இருக்கும்போதும் இந்தக் குற்றங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. விழிப்போடு செயல்பட்டால் இந்தக் குற்றங்களை குறைக்க முடியும். விழிப்பு என்பதைத் தாண்டி தனிநபர் ஒழுக்கத்தை போதிப்பதும், அதை கடைபிடிப்பதும் மிகஅவசியம். இந்தியாவைக் குறைந்தபட்சம் குழந்தைகளுக்குப் பாதுகாப்பான நாடாக மாற்ற வேண்டும் என்பதை அரசு உறுதியாகக் கொண்டு செயல்பட வேண்டிய தருணத்தில் உள்ளது. 



Trending Articles

Sponsored