ருவாண்டா உட்பட 3 நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம்: பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பு!Sponsoredருவாண்டா, உகாண்டா, தென்னாப்பிரிக்கா ஆகிய மூன்று நாடுகளில் பிரதமர் மோடி வரும் 23-ம் தேதி முதல் சுற்றுப்பயணம் செய்யவிருக்கிறார். இந்த நாடுகளில் அவர் ஐந்து நாள்கள் பயணம் மேற்கொள்ளவிருப்பதாக டெல்லியில் வெளியுறவுத்துறைப் பொருளாதார உறவுகளுக்கான செயலாளர் திருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

தமது பயணத்தின் முதல்கட்டமாக ருவாண்டா செல்லும் பிரதமர் மோடி, அந்நாட்டில் இரண்டு நாள்கள் தங்கியிருக்கிறார். வேளாண்துறை மற்றும் தொழில்துறையில் வளர்ச்சி குறித்து ருவாண்டா தலைவர்களுடன் பேச்சு நடத்தும் மோடி, அந்நாட்டில் வாழும் இந்தியர்களுடன் உரையாடுகிறார்.

Sponsored


ருவாண்டாவில் பிரதமர் மோடிக்கு பாரம்பர்ய முறையிலான வரவேற்பு அளிக்கப்படுவதுடன், அந்நாட்டு தலைவர்களுடன் இருதரப்பு உறவுகள் குறித்து பேசுகிறார். இந்தியாவின் சகோதரத்துவம் மற்றும் அந்நாட்டின் முன்னேற்றத்தை உணர்த்தும் வகையில், ருவாண்டாவுக்கு 200 பசுக்கள் வழங்கப்பட உள்ளன. பிரதமர் மோடியுடன் உயர்நிலை வர்த்தகக் குழு ஒன்றும் ருவாண்டா உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்லவிருக்கிறது. 
 
வரும் 24-ம் தேதி உகாண்டா செல்லும் மோடி, அந்நாட்டு அதிபரைச் சந்தித்து பேச்சுகள் நடத்துகிறார். உகாண்டாவில் வாழும் இந்திய சமுதாயத்தினரையும் மோடி சந்தித்துப் பேசவுள்ளார். தொடர்ந்து உகாண்டா, நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

Sponsored


தமது இந்தப் பயணத்தின் நிறைவாக வரும் 25-ம் தேதி அன்று தென்னாப்பிரிக்கா செல்லும் பிரதமர் மோடி, ஜோகனஸ்பர்க்கில் நடைபெறும் 10 வது பிரிக்ஸ் நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். மேலும், தென்னாப்பிரிக்க அதிபரையும் பிரதமர் சந்திக்கவுள்ளார்.

வளர்ச்சி, உலகளாவிய ஆட்சி நிர்வாகம், சுகாதாரம் மற்றும் தடுப்பூசி, அமைதியைப் பராமரித்தல், நிலையான முன்னேற்றம் போன்ற அம்சங்களுடன் இந்த ஆண்டு பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெறுகிறது. மேலும் பிரிக்ஸ் அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளின் தலைவர்கள், தங்கள் நாடுகளின் எதிர்கால முன்னேற்றங்கள் பற்றி பேச்சு நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த நாடுகளின் தலைவர்கள், பிரதமர் மோடியுடன் தனித்தனியாகவும் சந்தித்துப் பேச திட்டமிடப்பட்டுள்ளது.Trending Articles

Sponsored