நான் பப்புவாகத் தெரியலாம்; உங்கள் மீது எனக்குக் கோபம் இல்லை! - மக்களவையில் விளாசிய ராகுல்Sponsoredமத்திய அரசுக்கு எதிராக மக்களவையில் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின்மீது பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மத்திய அரசைக் கடுமையாகச் சாடினார்.

மத்திய அரசுக்கு எதிராக மக்களவையில் தெலுங்கு தேச கட்சி நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்துள்ளது. நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது பேசிய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தி மத்திய அரசைக் கடுமையாகச் சாடினார். “இந்திய இளைஞர்கள் பிரதமர் மோடியை நம்பினார்கள். அவரது ஒவ்வொரு பேச்சிலும் 2 கோடி இளைஞர்களுக்கு வேலை அளிப்பதாக உத்தரவாதம் அளித்தார். ஆனால், 4 லட்சம் இளைஞர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு வழங்கியுள்ளார். சீனா 24 மணிநேரத்துக்கு 5,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குகிறது. ஆனால், இந்தியாவில் மோடி அரசாங்கம் 24 மணி நேரத்துக்கு 400 பேருக்கு மட்டுமே வேலைவாய்ப்பு வழங்கியுள்ளது. நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. சிறுபான்மையினர், பழங்குடியினர்கள் மீதான தாக்குதல்களும் அதிகரித்துள்ளன.

Sponsored


மோடி கோட் சூட் போட்ட தொழிலதிபர்களிடம் மட்டுமே பேசுகிறார். மோடியின் புகைப்படம் ஜியோ விளம்பரத்தில் வருகிறது. இதன் அர்த்தம் அவர் பணக்காரர்கள் மீது மட்டுமே அக்கறை கொண்டுள்ளார் என்பதே. சிறு வணிகர்களின் மீது அவருக்கு அக்கறை இல்லை. சிறு, குறு வணிகர்கள் சம்பாதிக்கும் பணத்தை நீங்கள் கொள்ளையடிக்கிறீர்கள். உண்மையில் நீங்கள் எதையும் மாற்றவில்லை. நீங்கள் பெரிய புள்ளிகளுக்கு மட்டுமே உதவிக்கரம் அளிக்கிறீர்கள், ஏழைகளுக்கு நீங்கள் எதையும் செய்யவில்லை. ஜி.எஸ்.டி, பண மதிப்பிழப்பு நடவடிக்கைகளால் பல கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்” எனக் கடுமையாகத் தாக்கிப் பேசினார்.

Sponsored


நான் இந்தியாவின் பிரதமரில்லை, பிரதம சேவகன் என்றார் மோடி. ஆனால், அமித் ஷா மகனின் சொத்துகள் 16,000 மடங்கு உயர்ந்துள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு மெளனம் காப்பது ஏன் எனக் கேள்வி எழுப்பினார். அப்போது அமித் ஷா மகன் குறித்த ராகுலின் பேச்சுக்கு பா.ஜ.க உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், ராகுல் தனது பேச்சை தொடர்ந்தார். ரபேல் போர் விமானங்கள் வாங்குதற்காக இந்தியா செய்துகொண்ட ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றஞ்சாட்டினார். நான் மோடியின் கண்களைப் பார்த்து பேசுகிறேன். அவர் என்னைப் பார்ப்பதை தவிர்க்கிறார். பிரதமரின் புன்னகையில் ஒரு பதற்றம் தெரிகிறது. உங்களுக்கு நான் பப்புவாகத் தெரியலாம். ஆனால், நான் எனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறேன். எனக்கு உங்கள் மீது கோபம் இல்லை. நான் காங்கிரஸ்காரன் எனக் கூறினார். மோடி தனது சீன சுற்றுப்பயணத்தின்போது அந்நாட்டு பிரதமருடன் கடற்கரை அழகை ரசித்துக்கொண்டிருந்தார். தோக்லாம் குறித்து எதுவும் பேசவில்லை. நமது நாட்டுக்காக வீரர்கள் போராடிக்கொண்டிருக்கின்றனர். அவர்களை மோடி ஏமாற்றிவிட்டார் என்றார். இறுதியாகத் தனது பேச்சை நிறைவு செய்யும்போது பிரமரின் இருக்கையை நோக்கிச் சென்ற ராகுல் அங்கு அமர்ந்திருந்த மோடியைக் கட்டித்தழுவினார். பதிலுக்கு மோடியும் ராகுலின் முதுகில் தட்டிக்கொடுத்தார்.
 Trending Articles

Sponsored