`தமிழகத்துடன் பேசுவேன்; மேகதாது அணை கட்டுவேன்'- குமாரசாமி உறுதிகாவிரியின் குறுக்கே மேகதாது அணை நிச்சயமாக கட்டப்படும் என கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக தமிழகத் தலைவர்களைச் சந்தித்துப் பேசுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

Sponsored


2015-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் சித்தராமையா தலைமையிலான அரசு கர்நாடக மாநிலம் மேகதாது பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கான முயற்சியில் இறங்கியது. இதற்காக திட்ட அறிக்கை தயார் செய்து மத்திய சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதியும் கோரப்பட்டது. ஆனால், இத்திட்டத்துக்கு தமிழக தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும், கர்நாடகா முயற்சியை தடுக்கும் விதமாக தமிழக சட்டப்பேரவையில் தனித்தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், கர்நாடகாவில் தேர்தல் வந்ததால் இந்தப் பிரச்னை குறித்து பேச்சு எழவில்லை. ஆனால், தற்போது தேர்தல் முடிந்து நீண்ட இழுபறிக்குப் பிறகு குமாரசாமி கர்நாடக புதிய முதல்வராக பதவியேற்று விட்டார். இந்நிலையில், மேகதாது அணை நிச்சயம் கட்டப்படும் என குமாரசாமி தெரிவித்துள்ளார். 

Sponsored


எக்கனாமிக் டைம்ஸ் நாளிதழுக்கு இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், ``மேகதாது அணை திட்டம் என்பது புதியது ஒன்றும் கிடையாது. ஏற்கெனவே பரிசீலனையில் உள்ள திட்டம்தான். இதற்காக ஏற்கெனவே கடந்த காங்கிரஸ் ஆட்சியில் கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பெங்களூரு நகரின் குடிநீர் தேவையை காவிரி நடுவர் மன்றம் சுத்தமாகக் கண்டுகொள்ளவில்லை. பெங்களூரில் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படும். இந்த விவகாரத்தில் தமிழகத்தை சமாதானப்படுத்துவதற்காக விரைவில் தமிழக அரசியல் தலைவர்கள், விவசாயப் பிரதிநிதிகளைச் சந்தித்து அவர்களுடன் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவேன். 

Sponsored


அவர்களை சந்திக்க நான் ஆர்வமாக இருக்கிறேன். இந்த அணையால் இரு மாநிலங்களுக்குமே ஆதாயம்தான். குறிப்பாக காவிரி உபரி நீர் வீணாகக் கடலில் கலப்பதைத் தடுக்கலாம். தற்போது திறந்து விடப்பட்டுள்ள காவிரி நீரால் விரைவில் மேட்டூர், பவானி உள்ளிட்ட தமிழக அணைகள் முழுக்கொள்ளளவை எட்டிவிடுவதுடன் உபரி நீர் கடலில் கலக்கும். கூடுதலாக ஒரு அணை இருந்திருந்தால் வீணாக நீர் கடலில் கலப்பதைத் தடுத்திருக்கலாம்" என்றார். முன்னதாக தமிழக விவசாயிகள் குறித்த கேள்விக்குப் பதிலளித்த குமாரசாமி, ``ஒரு விவசாயி என்ற முறையில் அவர்களது கஷ்டத்தை அறிந்து கபினி அணை நிரப்புவதற்கு முன்பே, தமிழகத்துக்கு நீர் திறக்க உத்தரவிட்டுள்ளேன்" எனக் கூறினார். Trending Articles

Sponsored