`நிபா’வைத் தொடர்ந்து `ஷிகெல்லா’ பாக்டீரியா ! கேரளாவில் அடுத்தடுத்து சோகம்



Sponsored



நிபா வைரஸ் பாதிப்பிலிருந்து முழுமையாக மீண்டுவந்துள்ள கேரளாவை, தற்போது ஷிகெல்லா தொற்று அச்சுறுத்திவருகிறது. வேகமாகப் பரவும் இந்த தொற்று காரணமாக, ஒரு குழந்தை உயிரிழந்துள்ளது. 

கடவுளின் தேசமான கேரளா, கடந்த சில மாதங்களாகவே தொல்லைகளை எதிர்கொண்டுவருகிறது. ஒகி புயலின் பாதிப்பால் ஏற்பட்ட சோகத்திலிருந்து மீண்டுவந்த கேரள மக்களை நிபா வைரஸ் தாக்கியது. கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களைத் தாக்கிய நிபா வைரஸுக்கு ஒரு செவிலியர் உள்ளிட்ட 17 பேர் உயிரிழந்தனர். இந்த வைரஸ் பாதிப்பு காரணமாக, பொதுமக்களிடம் பெரும் பதற்றம் ஏற்பட்ட நிலையில், அந்த மாநில அரசின் தீவிர நடவடிக்கையால் முற்றிலுமாக இந்த வைரஸ் தாக்குதல் தடுக்கப்பட்டது.

Sponsored


கடந்த சில வாரங்களாக, கனமழையால் கேரளாவின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கின்றன. வெள்ளத்தின் காரணமாக       35,000-க்கும் அதிகமானோர் வீடுகளை விட்டு வெளியேறி, பாதுகாப்பான இடங்களில் தங்கி இருக்கிறார்கள். கனமழையால் கேரளாவில் 41 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. வெள்ளத்தின் பாதிப்புகளிலிருந்து மக்களை மீட்கும் நடவடிக்கையில் மாநில அரசு தீவிரம் காட்டிவருகிறது. 

Sponsored


இந்த நிலையில், கேரள மக்களை ’ஷிகெல்லா’ என்ற புதிய தொற்று தாக்கிவருகிறது. உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய இந்த பாக்டீரியா, குழந்தைகளை வேகமாகத் தாக்குகிறது. கோழிக்கோடு மாவட்டத்தில் இதன் தாக்குதல் இருப்பது தெரியவந்துள்ளது. கோழிக்கோடு மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தாமரசேரி கிராமத்தைச் சேர்ந்த அஷ்ரஃப் என்பவரது இரண்டு வயது மகனான ஷியான், இந்தப் பாக்டீரியா பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அத்துடன், மேலும் இரு குழந்தைகள் இந்தப் பாதிப்பால் சிகிச்சைபெற்றுவருகிறார்கள். 

கேரள அரசு, ஜூலை 1-ம் தேதி நிபா முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுவிட்டதாக அதிகாரபூர்வமாக அறிவித்தது. ஷிகெல்லா தொற்று  காரணமாக ஏற்கெனவே இரு குழந்தைகள் உயிரிழந்த நிலையில், தற்போது மேலும் சிலருக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தப் பாக்டீரியா தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு காய்ச்சல், வயிற்றோட்டம் ஏற்படும். கைகளைச் சுத்தமாகக் கழுவாவிட்டால், இந்த நோய் எளிதாகப் பிறருக்கும் தொற்றிக்கொள்ளும் என்பதால், எப்போதும் சுத்தமாக இருப்பதுடன், குழந்தைகளிடம் கைகளை கழுவச்சொல்வது அவசியம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கேரளாவில் பரவிவரும் இந்தப் புதிய ஆட்கொல்லி பாக்டீரியா காரணமாக மக்களிடம் அச்சம் ஏற்பட்டுள்ளது.      



Trending Articles

Sponsored