பி.ஜே.பி-யை வீழ்த்த காங்கிரஸ் புது வியூகம்?Sponsoredடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் பிரதமர் வேட்பாளராகத் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி அல்லது பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி ஆகிய இருவரில் ஒருவரை காங்கிரஸ் கட்சி முன்னிறுத்துமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுதொடர்பாக, மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், ``மம்தா அல்லது மாயாவதியை பிரதமர் வேட்பாளராகக் கட்சி முன்னிறுத்தும்பட்சத்தில், அவர்கள் இருவருக்கும் பி.ஜே.பி ஆதரவு அளிக்கக் கூடாது என்ற நிபந்தனையை விதிக்கும்" என்றார். 

காங்கிரஸ் கட்சியின் மாற்றியமைக்கப்பட்ட காரிய கமிட்டிக் கூட்டம், அண்மையில் டெல்லியில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், காங்கிரஸ் வட்டாரங்கள், "சங் பரிவார் அல்லது பி.ஜே.பி-யின் ஆதரவு இல்லாத சூழ்நிலையில், மாயாவதி அல்லது மம்தா பானர்ஜியை பிரதமர் பதவிக்கு காங்கிரஸ் ஆதரிக்கும்" என்று தெரிவித்தன.

"மம்தா பானர்ஜி அல்லது மாயாவதியை அடுத்த ஆண்டு தேர்தலுக்குப் பின் பிரதமராக்குவதற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவிக்குமா" என்ற செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளிக்கும் விதமாகக் காங்கிரஸ் தலைவர்கள் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளனர். பி.ஜே.பி மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரின், பெண்களுக்கு எதிரான செயல்பாடுகளைக் காங்கிரஸ் கட்சி அண்மைக்காலமாகக் கடுமையாக விமர்சித்து வருகிறது. வெகுவிரையில் அதிக அளவில் பெண்களை, முடிவெடுக்கக்கூடிய பதவிகளில் காங்கிரஸ் கட்சி அமர்த்தும் என்றும் காங்கிரஸ் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

Sponsored


Sponsored


"உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களில் பெறக்கூடிய எம்.பி-க்களின் எண்ணிக்கையே நரேந்திர மோடியின் தோல்வியைத் தீர்மானிக்கும். மோடியின் தன்னிச்சையான செயல்பாடுகள், அவருக்கு பி.ஜே.பி-யிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகளிடத்திலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. இதனால், மோடி மீண்டும் பிரதமராக வெற்றிபெறுவதற்கான எண்ணிக்கையைப் பெறுவது மிகவும் கடினம். மெஜாரிட்டிக்குத் தேவையான எண்ணிக்கையைப் பெறுவதும் சிரமம்" என்கிறார்கள் அவர்கள். இந்தியாவின் அண்டை நாடுகளுடனான நட்புறவை மேம்படுத்துவதிலும் பி.ஜே.பி கூட்டணி அரசு தோல்வியடைந்துவிட்டதாகக் காங்கிரஸ் கட்சி குறை கூறியுள்ளது.

மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின்மீது பேசி முடித்த பின் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடியைக் கட்டிப் பிடித்தது பற்றி கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர்கள், ``தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வதற்கு வாய்ப்பளித்தமைக்கு, பிரதமருக்கு அவர் நன்றி தெரிவித்த விதம் அது'' என்று அவர்கள் குறிப்பிட்டனர். ராகுல் காந்தியைப் பொறுத்தவரை விமர்சனங்கள் தொடர்பாக எந்தவிதச் சலனங்களையும் வெளிப்படுத்தாதவர் என்பதுடன், பி.ஜே.பி தலைவர்கள் அவரைக் குறிவைத்தே குற்றச்சாட்டுகளைத் தெரிவித்து வருகிறார்கள். 

2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மம்தா பானர்ஜி, மாயாவதி அல்லது வேறு ஏதாவது ஒருவரை பிரதமர் பதவிக்கான வேட்பாளராக முன்னிறுத்தும் நிலையில், சம்பந்தப்பட்ட நபர் பி.ஜே.பி அணியில் இடம்பெற்றிருப்பவராக இருக்கக் கூடாது என்பதில் காங்கிரஸ் கட்சி உறுதியுடன் உள்ளது. 

தவிர, கட்சித் தலைவராகக் ராகுல் காந்தி பொறுப்பேற்றுள்ள நிலையில், தேசிய அளவிலான ஒரு கட்சியின் தலைவர் என்ற முறையில், ராகுலைத் தவிர்த்து வேறு ஒருவரை பிரதமர் பதவிக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவிக்குமா என்ற கேள்வியும் எழாமல் இல்லை. ஒருவேளை, காங்கிரஸ் கட்சி தனிப் பெரும் கட்சியாக வெற்றிபெற்று, ஆட்சியமைக்கத் தேவைப்படும் எம்.பி-க்கள் இல்லாத நிலையில், மாயாவதி அல்லது மம்தா பானர்ஜி ஆகியோரில் யாருடைய கட்சி அதிக எண்ணிக்கையில் இடங்களைக் கொண்டிருக்கிறதோ, அவர்களைக் காங்கிரஸ் கட்சி ஆதரிக்கக் கூடும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். 

2014-ம் ஆண்டு தேர்தலில், அ.தி.மு.க தமிழகத்தில் தனித்துப் போட்டியிட்டு, 37 இடங்களைக் கைப்பற்றியது. ஆனாலும், மக்களவைச் சபாநாயகராக தம்பிதுரை தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தவிர, அ.தி.மு.க-வுக்கு தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணியை அமைக்கவோ அல்லது ஏற்கெனவே  ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அமைச்சரவையில் குறிப்பிட்ட துறைகளைத் தி.மு.க கேட்டுப் பெற்றதைப் போன்றோ எந்தவொரு சூழலும் உருவாகாமல் போனது. தவிர, அந்தச் சமயத்தில், கர்நாடக தனி நீதிமன்றத்தில் சொத்துக்குவிப்பு வழக்கையும் ஜெயலலிதா எதிர்கொண்டிருந்தார் என்பதும் கவனிக்கத்தக்கது. 

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகள் என்ன முடிவெடுக்கப்போகின்றன. ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டு, காங்கிரஸுடன் இணையப்போகும் கட்சிகள் எவை என்பதைப் பொறுத்தே அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் உத்திகள் இருக்கும்..!Trending Articles

Sponsored