``மனைவி அழுதபோது மகிழ்ச்சியாக இருந்தது!’’ - கோமாவிலிருந்து மீண்ட மனைவி... நெகிழும் கணவர்



Sponsored



தாய்மைக்கு மிகப்பெரிய தவ வலிமை இருக்கிறது என்பதைக் கண்கூடாக நிரூபிக்கும் சம்பவம் அண்மையில் கேரள மாநிலத்தில் நடந்திருக்கிறது.

கோட்டயம் மாவட்டம், வழூவூரைச் சேர்ந்தவர் பெத்தனா. மூன்று மாத கர்ப்பிணியாக இருந்த நேரத்தில் பாத்ரூமில் வழுக்கி விழுந்துவிட்டார். தலையில் அடிபட்டதில், பெத்தனா கோமா ஸ்டேஜுக்குச் சென்றுவிட்டார். டாக்டர்கள் கண்காணிப்பில் இருந்த அவருக்குக் கடந்த 14-ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. அதன் பிறகு பெத்தனாவிடம் ஏற்பட்ட மாற்றம் டாக்டர்களுக்கே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இப்போது குழந்தைக்கு முத்தம் கொடுத்து மகிழ்ச்சியடையும் அளவுக்கு பெத்தனாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது.

Sponsored


இது குறித்து பெத்தனாவின் கணவர் அனூப்பிடம் பேசினோம்... ``நான் கேரள மின்சார வாரியத்தில் பணிபுரிகிறேன். எனக்கும் பெத்தனாவுக்கும் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. பெத்தனா, தனியார் பள்ளியில் ஆங்கில ஆசிரியராகப் பணிபுரிகிறாள். மகிழ்ச்சியாகச் சென்றுகொண்டிருந்த எங்கள் இல்லற வாழ்க்கைக்குப் பரிசாக, மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் எங்களுக்கு ஒரு மகன் பிறந்தான். `நேபல் மாத்யூ’ என்று பெயர்வைத்தோம். இரண்டாவதாக என் மனைவி பெத்தனா கர்ப்பமானதும், இரட்டிப்பு மகிழ்ச்சியில் திளைத்தோம். ஆனால், பெத்தனா கருத்தரித்த மூன்றாவது மாதம் அந்தச் சோக சம்பவம் நிகழ்ந்தது...’’ சொல்லும்போதே அனூப்பின் குரல் கம்முகிறது.

Sponsored


``பாத்ரூமுக்குச் சென்ற பெத்தனா நிலைதடுமாறி வழுக்கி விழுந்தாள். சுவரில் தலை மோதியதில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்தாள். உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம். மிகவும் ஆபத்தாக இருப்பதாகவும், உயிர் பிழைப்பதே கடினம் எனவும் டாக்டர்கள் தெரிவித்தார்கள். நினைவு திரும்பாமல் பல நாள்கள் வென்டிலேட்டரில் இருந்தாள் பெத்தனா. அதன் பிறகு கோமா ஸ்டேஜில் இருந்த பெத்தனாவை வீட்டுக்கு அழைத்து வந்து கவனித்துவந்தேன்.

இரண்டு ஜீவன்களை பராமரிப்பது என்பது எனக்குச் சிரமமாக இருந்தது. கோமா நிலையில் இருந்த மனைவியையும், அவள் வயிற்றில் இருந்த குழந்தையையும் எந்தப் பாதகமும் ஏற்படாமல் நல்லபடியாகக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணமே எனக்கு இருந்தது. இப்படியே ஏழு மாதங்கள் கடந்தன. பத்தாவது மாதம் பெத்தனாவை டெலிவரிக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். கடந்த 14-ம் தேதி எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு `எல்வின்’ என்று பெயர் வைத்திருக்கிறோம். குழந்தை அழும்போதும் பால் குடிக்கும்போதும் என் மனைவி பெத்தனாவின் முகத்தில் மகிழ்ச்சி வெளிப்பட்டது. கோமா நிலையில் இருந்த என் மனைவியின் முகத்தில் பல உணர்ச்சிகள் தென்படத் தொடங்கின. அது, எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. குழந்தை பிறந்த பிறகு என் மனைவியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. மருத்துவர்களுக்கே இது ஆச்சர்யத்தைத் தந்திருக்கிறது. கோமா ஸ்டேஜில் இருந்த வேறு யாருக்கும் இது போன்ற மாற்றம் ஏற்பட்டதில்லை என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இப்போது மருந்து எதுவும் கொடுப்பதில்லை, பிசியோதெரபி சிகிச்சை மட்டுமே நடக்கிறது. வீட்டில் உள்ள ஒவ்வொருவரையும் எனது மனைவி அடையாளம் கண்டுகொள்கிறாள்.

பெத்தனாவுக்குப் பழைய நினைவு திரும்பியிருக்கிறது. எந்தக் கணவனுக்கும் மனைவி அழுதால் மகிழ்ச்சி ஏற்படாது. ஆனால், என் மனைவி அழுதபோது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பிறந்த குழந்தையின் அழுகைச் சத்தம் கேட்பதுபோல இருந்தது. எந்த உணர்வும் இல்லாமல் இருந்தவளின் முகத்தில் அழுகை என்ற உணர்வு வெளிப்பட்டதுதான் என் மகிழ்ச்சிக்குக் காரணம். இப்போது சிரிப்பு, அழுகை என தனது உணர்ச்சிகளை வெளிக்காட்டுகிறாள். இரண்டாவது மகனால் நினைவு திரும்பப் பெற்ற என் மனைவி இப்போது முதல் மகனையும் அடையாளம் கண்டுகொள்கிறாள். குழந்தைகளுக்கு முத்தம் கொடுக்கச் சொன்னால், உடனே முத்தம் கொடுக்கும் அளவுக்கு முன்னேறியிருக்கிறாள். படுத்த படுக்கையாக இருந்த அவள் இப்போது வீல் சேரில் உட்காருகிறாள். என் மனைவி பெத்தனாவும் எனக்குக் குழந்தையாகவே மாறிவிட்டாள். பழையநிலைக்கு மீண்டும் திரும்பிவிடுவாள் என்று நினைக்கும்போதே அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது’’ அதற்கு மேல் பேச முடியாமல், விழியோரம் வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொள்கிறார் அனூப். பெத்தனா விரைவில் குணமடைவார் என்று நம்பிக்கை வார்த்தைகளை உதிர்த்துவிட்டு நாமும் விடைபெற்றோம்.
 



Trending Articles

Sponsored