மாடல்ஸ் டு ரோல் மாடல்ஸ்... 72 இல்லத்தரசிகள் பங்கேற்கும் மிஸஸ் இந்தியா போட்டி! #MrsIndia2018Sponsoredதிருமணமான பெண்களுக்கென்று இந்தியாவில் நடைபெறும் மாபெரும் போட்டி `Mrs.India' அழகிப்போட்டி. இதன் இறுதிச்சுற்றில் தகுதி பெற்றவர்களின் அணிவகுப்பு, கடந்த 26.7.2018 அன்று சென்னை மணப்பாக்கம் ஃபெதர்ஸ் ஹோட்டலில் கோலாகலமாக நடைபெற்றது. 72 இல்லத்தரசிகள் இறுதிச்சுற்றுக்குத் தேர்வாகியிருப்பது இதுவே முதல்முறை! #MrsIndia2018

டயட், ஜிம், நடைப்பயிற்சி என உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள எந்தளவுக்கு முயற்சியை மேற்கொள்கின்றனர் இந்தக் காலத்து இளைஞர்கள்! இவ்வளவு கஷ்டப்பட்டு என்னதான் உடலை மெலிதாக வைத்திருந்தாலும் திருமணத்துக்குப் பிறகு, இந்த உடலமைப்பு மாறிவிடுமே என்கிற பயம் அனைவருக்கும் இருக்கத்தான் செய்கிறது. அதிலும், பெண்களுக்கு இந்தக் கவலை கொஞ்சம் அதிகம்தான். அந்த வகையில், அழகிப் போட்டி என்றாலே `ஒல்லி பெல்லி இடை அழகிகளுக்குத்தான் என்ற கோட்பாட்டை உடைத்தெறிந்திருக்கிறது இந்த `Mrs.இந்தியா அழகிப்போட்டி'. மாடல்களை மட்டும் உருவாக்காமல் `ரோல்மாடல்களை' உருவாக்க வேண்டும் என நினைத்து, 2013-ம் ஆண்டு தீபாளி பட்னிஸ் (Deepali Phadnis) என்பவரால் தொடங்கப்பட்டதுதான் இந்த மிஸஸ் இந்தியா அழகிப்போட்டி. இதில் கலந்துகொள்பவர்களுக்கென்று உடலளவில் எந்தவிதமான தடையும் கிடையாது.

Sponsored


வெள்ளை நிற ஆடையில் ஒய்யாரமாக நடைபோட்டு வந்த 72 அழகிகளைப் பார்க்கும்போது ஆச்சர்யமாக இருந்தது. 60 வயது நிரம்பிய அழகிகள் வரை துணிச்சலாக, தன்னம்பிக்கையோடு இருப்பதைப் பார்க்க `ரோல் மாடல்கள்'போலத்தான் தோன்றியது. `இந்த வயதிலும் இதில் கலந்துகொள்வதற்கான நோக்கம் என்னவாக இருக்கும்' என்ற கேள்வியை என்னுள் மட்டும் வைத்துக்கொள்ளாமல், பஞ்சாபிலிருந்து வந்திருக்கும் ஜோதி டோக்ராவிடமும் கேட்டேன்.

Sponsored


``எனக்கு 61 வயது ஆகிறது. அம்மா, மாமியார், பாட்டி போன்ற பட்டங்களுக்குச் சொந்தக்காரி. 30 வருடம் ஆசிரியராகப் பணியாற்றி, ஓய்வும் பெற்றுவிட்டேன். அடிப்படை வசதிகள்கூட கிடைக்காமல், தந்தை இல்லாமல் அம்மாவின் அரவணைப்பில் மட்டும் வளரும் குழந்தைகளுக்கு என்னால் முடிந்தவரை உதவிகள் செய்துகொண்டிருக்கிறேன். என்னுடைய இந்தச் சேவையை மெருகேற்றிக்கொள்ள இந்த அழகிப்போட்டித் தளம் எனக்குக் கிடைத்த ஒரு சந்தர்ப்பம். இதுமட்டுமல்லாமல், குறிப்பிட்ட வயதை எட்டியவுடன், பெண்கள் பல வேலைகளைச் செய்யத் தயங்குகிறார்கள். வயதானால் என்ன. வயது என்றைக்குமே, எதுக்குமே தடை இல்லை என்பதை பல பெண்களுக்கு உணர்த்துவதற்காகவும் இந்தப் போட்டியில் கலந்துகொண்டேன். என்னோடு சேர்ந்து என் குடும்பமும் என் வெற்றியைக் கொண்டாடுகிறார்கள். சந்தோஷமாக இருக்கிறது" என்றார் ஜோதி.

இத்தனை அழகிகளில், தமிழக அழகி யார் என்ற தேடலின்போது, ``வணக்கம்'' என்றபடி பேசத் தொடங்கினார் லட்சுமி ஷ்ரவன்.

``காலேஜ் படிக்கிறப்போவே அழகிப்போட்டில கலந்துக்கணும்னு ரொம்ப ஆசை. ஆனா, அப்பா கொஞ்சம் ஸ்ட்ரிக்ட்.

அதனால பண்ணமுடியலை. அப்பாவை பொறுத்தவரைக்கும் இந்த மீடியா சம்பந்தப்பட்ட துறை தவிர மற்ற எதுன்னாலும் பண்ணலாம். படிப்பாகட்டும் பரதநாட்டியமாகட்டும் எல்லாத்துலயுமே நம்பர் 1. அந்த நம்பிக்கையிலதான் இப்போ, என்னோட கணவர் எனக்கு எல்லாவிதத்துலயும் சப்போர்ட் பண்றாரு. `உனக்கு பிடிச்சதை நீ பண்ணு'னு என்கரேஜ் பண்ணுவார். இந்தக் களம் எனக்கு ரொம்பப் புதுசா இருக்கு. சமூகத்துக்கு என்னால முடிஞ்ச நல்லது செய்யணும்கிற நோக்கத்தோடு வந்திருக்கேன். நல்ல நோக்கம் என்னைக்கும் தோற்காது. ஜெயிச்சாலும் சரி, தோற்றாலும் சரி 100 சதவிகிதம் என்னோட பெஸ்ட் கொடுப்பேன்" என்று கூறி விரைந்தார் லட்சுமி. 

72 போட்டியாளர்கள், வயது சார்ந்து மூன்று குழுக்களாகப் பிரித்து, Mrs.இந்தியா இறுதிச்சுற்று ஜூலை 30-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது

.Trending Articles

Sponsored