நாடாளுமன்றத்தில் புயலைக் கிளப்பிய அஸ்ஸாம் குடிமக்கள் பட்டியல்!



Sponsored



அஸ்ஸாம் மாநிலத்தில், குடிமக்கள் பட்டியலில் சேர்க்கும்படி 3.29 கோடி மக்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், 2.89 கோடி மக்கள் மட்டுமே பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இதனால், 40 லட்சம் பேரின் பெயர்கள் நிராகரிக்கப்பட்டது குறித்த விவகாரம், நாடாளுமன்றத்தில் நேற்று எதிரொலித்தது. சொந்த நாட்டிலேயே மக்களை அகதிகளாக ஆக்குவதா என்று எதிர்க் கட்சிகள் அமளியில் ஈடுபட்டதுடன் வெளிநடப்பும் செய்தன.

கடந்த பல ஆண்டுகளாக வங்கதேசத்தில் இருந்து லட்சக்கணக்கான மக்கள், அஸ்ஸாம் மாநிலத்துக்குச் சட்ட விரோதமாகக் குடியேறி வருகின்றனர். இதனால், உண்மையான குடிமக்கள் யார் என அடையாளம் காண முடியாமல் அதிகாரிகள் அவஸ்தைக்குள்ளாகி வருகின்றனர். இதன் காரணமாக, பல்வேறு சிக்கல்கள் எழுந்த நிலையில், இந்தியாவிலேயே முதல்முறையாக இந்த மாநிலத்தில் மட்டும்தான், `தேசியக் குடிமகன் பதிவு' பட்டியல் தயாரிக்க அஸ்ஸாம் அரசு முடிவு செய்தது. இதற்காக, கடந்த 1951-ம் ஆண்டிலிருந்து பட்டியல் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், அஸ்ஸாமில், சட்ட விரோதமாகக் குடியேற்றம் நடப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், கடந்த 2013-ல் மீண்டும் தேசியக் குடிமகன் பதிவுப் பட்டியலைத் தயாரிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, கடந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி முதல் தேசியக் குடிமகன் பதிவு அறிக்கை வெளியிடப்பட்டது. குடிமகன் பட்டியலில் சேர்க்க 2.29 கோடி பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில், 1.90 கோடி பெயர்கள் இடம்பெற்றிருந்தன. இந்தப் பட்டியல்களைத் தயாரிக்கும் பணியைத் தேசிய குடிமக்கள் பதிவேடு அலுவலகம் செய்துவந்தது. இந்நிலையில், குடிமக்கள் பதிவின் 2-வது வரைவுப் பட்டியல் நேற்று காலை (30-ம் தேதி) வெளியிடப்பட்டது. இப்பட்டியல் வெளியிடப்படுவதற்கு முன், அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டிய அம்மாநில முதல்வர் சார்பானந்தா சோனோவால், "அஸ்ஸாம் வரலாற்றின் மிக முக்கிய தருணமாகக் கருதப்படும் இந்த நிகழ்வால் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுக்க போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், வன்முறைகளைத் தூண்டக்கூடிய எந்தவொரு வதந்திகளையும் மக்கள் நம்ப வேண்டாம்'' என்று கேட்டுக்கொண்டார். 

Sponsored


Sponsored


இந்த நிலையில், அந்த மாநில அரசு வெளியிட்ட குடிமக்கள் பதிவின் 2-வது வரைவுப் பட்டியலில், 3.29 கோடி மக்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், 2.89 கோடி மக்கள் மட்டுமே பட்டியலில் இடம்பெற்றிருந்தனர். இதில், 40 லட்சம் மக்களின் பெயர்கள் விடுபட்டிருந்தன. இதையடுத்து, மாநிலத்தில் வன்முறைச் சம்பவங்கள் ஏதேனும் நிகழலாம் என்பதால் அங்கு போலீஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டனர். 

பட்டியலில் 40 லட்சம் மக்களின் பெயர்கள் இல்லாதது குறித்து கருத்து தெரிவித்த தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலக அதிகாரிகள்,``இது இறுதிப் பட்டியல் இல்லை; மக்கள் இதுகுறித்து அச்சப்படத் தேவை இல்லை. பட்டியலில் இடம்பெறாதவர்கள் தண்டிக்கப்படமாட்டார்கள். இறுதிப் பட்டியலில் விடுபட்டவர்களுக்கு மட்டும் தனிப்பட்ட கடிதம் வழங்கப்படும்'' எனத் தெரிவித்தனர். 

இதுகுறித்து பதிலளித்த இந்தியாவின் பதிவாளர் ஜெனரல் சைலேஷ், ``1971 மார்ச் 25-ம் தேதிக்கு முன்பிருந்து அஸ்ஸாமில் வசித்துவரும் இந்தியக் குடிமக்களின் பெயர்கள் பதிவேட்டில் இடம்பெற்றுள்ளது. பதிவேட்டில் இடம்பெறாதவர்கள் வருகிற ஆகஸ்ட் 30-ம் தேதியிலிருந்து செப்டம்பர் 28-ம் தேதிவரை மீண்டும் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது'' என்று தெரிவித்துள்ளார். 
இந்த விவகாரம் நேற்று நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது. இதுதொடர்பாக மக்களவையில், திரிணாமுல் காங்கிரஸ் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவந்ததுடன், அதுகுறித்து விசாரிக்கவும் வலியுறுத்தியது. இதை, மக்களவைச் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஏற்கவில்லை. இதனால், எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தன.  

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சுதீப் பந்தோபாத்யாயா, ``அஸ்ஸாமில் நடந்தது மனிதத் தன்மையற்ற செயல். இது, அங்கு வசிக்கும் மக்களைக் கொடுமைப்படுத்துவதுபோல் உள்ளது. மத்திய அரசின் சட்டத்தால் அஸ்ஸாமைவிட்டு விலக்கி வைக்கப்பட்டுள்ள 40 லட்சம் மக்களை மீண்டும் அங்கு குடியமர்த்த வசதியாக நிரந்தரப் பதிவு வழங்க வேண்டும்'' என்றார்.

மக்களவைக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனே கார்கே, ``அஸ்ஸாம் மாநிலத்தின் உண்மையான குடிமக்களிடம்கூடக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. சாதி மற்றும் மத அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்தும் வேலை அங்கு நடக்கிறது'' என்றார்.
சி.பி.ஐ.எம். கட்சியைச் சேர்ந்த எம்.பி. சலிம், ``அஸ்ஸாம் இப்போது உடைக்கப்பட்டுள்ளது. மனித உரிமை மற்றும் ஜனநாயக உரிமைகள் மக்களிடமிருந்து பிரிக்கப்பட்டுள்ளன'' என்றார்.

இப்படி எதிர்க்கட்சி எம்.பி.-க்கள் வைத்த குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ``அஸ்ஸாமில் நடைபெற்றுவரும் உணர்வுபூர்வமான விஷயத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்யக்கூடாது. உச்ச நீதிமன்ற உத்தரவு அடிப்படையில்தான் அங்கு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், மத்திய அரசின் பங்கு எதுவுமில்லை. அஸ்ஸாம் குடிமக்களின் தேசியப் பதிவை மேற்கொள்வது தொடர்பான கோரிக்கை நீண்டகாலமாக இருந்துவந்தது. அஸ்ஸாமில் அமைந்த முந்தைய அரசும் உச்ச நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் வெளிநாட்டு ஆணையம் அமைத்தது. எனவே, தற்போது வெளியாகியிருக்கும் பட்டியலில் அரசின் பங்கு எதுவுமில்லை. மத்திய அரசுமீது எதிர்க் கட்சிகள் சுமத்தும் குற்றச்சாட்டு ஆதாரமற்றது. எனவே, எதிர்க் கட்சி எம்.பி-க்கள் உணர்வுபூர்வமான இந்த விஷயத்தில் பதற்றத்தை உருவாக்க வேண்டாம்'' என்றார். 

ஆனால், இந்தப் பதிலில் திருப்தியடையாத எதிர்க்கட்சி எம்.பி.-க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். ``சொந்த மாநிலத்திலேயே மக்களை அகதிகளாக ஆக்குவதா'' என்று கோஷமிட்டனர். பின்னர், அவர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். இதே விவகாரம் மாநிலங்களவையிலும் எதிரொலித்தது. அங்கேயும் திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ், சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி-க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் நாள் முழுவதும் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் இதுகுறித்து தன்னுடைய முகநூல் பக்கத்தில் கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார். மேலும், அக்கட்சி இந்த விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.



Trending Articles

Sponsored