அஸ்ஸாம் குடிமக்கள் பட்டியல் விவகாரம்... உச்ச நீதிமன்றம் புது உத்தரவு!Sponsoredஸ்ஸாம் மாநிலத்தில், குடிமக்கள் பட்டியலில் சேர்க்கும்படி 3.29 கோடி மக்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், 2.89 கோடி மக்கள் மட்டுமே பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இதனால், 40 லட்சம் பேரின் பெயர்கள் நிராகரிக்கப்பட்டது குறித்த விவகாரம், நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது. `சொந்த நாட்டிலேயே மக்களை அகதிகளாக ஆக்குவதா' என்று எதிர்க் கட்சிகள் அமளியில் ஈடுபட்டதுடன் வெளிநடப்பும் செய்தன. இந்த நிலையில், ``அஸ்ஸாம் மாநிலக் குடிமக்கள் பதிவேடு தொடர்பாக எந்தக் கட்டாய நடவடிக்கையும் எடுக்கக் கூடாது'' என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இதுகுறித்து மக்களவையில் பேசிய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ``தற்போது வெளியிடப்பட்டுள்ள அஸ்ஸாம் மாநிலக் குடிமக்கள் பதிவு பற்றி இரண்டு வரைவுப் பட்டியலும் இறுதியானது அல்ல... அதில், உள்ள குறைபாடு குறித்து விண்ணப்பிக்கலாம். தங்கள் புகாரையும் பொதுமக்கள் தெரிவிக்கலாம். இந்தப் பட்டியலில் இடம்பெற விரும்பும் அஸ்ஸாம் மக்களும் விண்ணப்பிக்கலாம். அதைச் சேர்ப்பதும், நிராகரிப்பதும் உச்ச நீதிமன்றத்தின் முடிவு'' என்றார்.

இந்த விவகாரத்தைக் கையிலெடுத்திருக்கும் திரிணாமுல் காங்கிரஸ், மத்திய அரசுக்கு எதிராகக் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து வருகிறது. குறிப்பாக அந்தக் கட்சியின் தலைவரும், மேற்கு வங்காள முதல்வருமான மம்தா பானர்ஜி, ``தனது அரசியல் லாபங்களுக்காக மோடி அரசு, லட்சக்கணக்கானவர்களை நாடு இல்லாதவர்களாக ஆக்க முயற்சி செய்கிறது. நாட்டு மக்களை இரண்டாகப் பிளக்க சதி செய்கிறது. இது நாட்டில், உள்நாட்டுப் போருக்கும், ரத்தகளரிக்கும் வழிவகுக்கும். இதேபோல், தேசியக் குடிமக்கள் பதிவேட்டை மேற்கு வங்காளத்தில் உங்களால் வெளியிட முடியுமா? அப்படிச் செய்தால், உங்களால் ஒருபோதும் மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க முடியாது'' என்று தெரிவித்துள்ளார். 

Sponsored


இதற்குப் பதிலளித்துள்ள பி.ஜே.பி. தேசியத் தலைவர், ``அஸ்ஸாமில் வெளியிடப்பட்ட தேசியக் குடிமக்கள் இறுதிவரைவுப் பதிவேடு நாட்டின் பாதுகாப்பு விவகாரத்துடனும், இந்தியர்களின் உரிமைகளுடனும் தொடர்புடையது. எனவே, இதற்கு நாங்கள் முன்னுரிமை அளிப்போம். மற்ற கட்சிகளும் இதுகுறித்து தங்களது நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டும்'' என்றார்.    

Sponsored


இந்த நிலையில், ``வங்காளதேசத்திலிருந்து அஸ்ஸாமில் குடியேறியவர்கள் வெளியேறாவிட்டால் சுட்டுத்தள்ள வேண்டும்'' எனத் தெலங்கானா பி.ஜே.பி. எம்.எல்.ஏ. ராஜாசிங் லோத் பேசியிருப்பது சர்ச்சையாகியிருக்கிறது. இதுகுறித்து தன் கருத்தைப் பதிவுசெய்து வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில், ``சட்டவிரோதமாகக் குடியேறிய வங்காளதேச மக்களும், ரோஹிங்யா சமூகத்தவரும் பண்புள்ள மனிதர்களாக அவர்களாகவே தங்கள் நாட்டுக்குத் திரும்பாவிட்டால், அவர்கள் மொழியிலேயே புரியவைக்க வேண்டிய தேவை ஏற்படும். அவர்களைச் சுட்டுத்தள்ள வேண்டும். அப்போதுதான் இந்தியா பாதுகாப்பாக இருக்கும். இந்தியாவை அழிக்கும் சதித் திட்டத்தின் ஒரு பகுதியாகவே அவர்கள் இங்கு வந்துள்ளனர். அவர்களைத் திருப்பியனுப்ப வேண்டிய பொறுப்பு அரசுக்கு வந்துள்ளது'' என்று கூறியுள்ளார். 

இதற்கிடையே, அஸ்ஸாம் மாநிலக் குடிமக்கள் இறுதி வரைவுப் பட்டியலின் தற்போதைய நிலை குறித்து, அம்மாநிலக் குடிமக்கள் பதிவேட்டின் ஒருங்கிணைப்பாளர் பிரதீக் ஹஜெலா உச்ச நீதிமன்றத்தில் ஒரு விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்திருந்தார். அதன்மீதான விசாரணை, நீதிபதிகள் ரஞ்சன் கோகாய் மற்றும் ஆர்.எஃப்.நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நடைபெற்றது. அப்போது இதுகுறித்து நீதிபதிகள், ``வரைவு இறுதிப் பதிவேடு தொடர்பாக மத்திய அரசு நிலையான இயக்க நடைமுறையை உருவாக்கி அதை கோர்ட்டின் ஒப்புதலுக்காக வருகிற 16-ம் தேதி தாக்கல் செய்யவேண்டும். மேலும், விடுபட்டுள்ளவர்களின் பெயர்களைச் சேர்க்க மற்றும் இதுதொடர்பான ஆட்சேபங்களைத் தெரிவிக்க உள்ளூர் பதிவாளர் ஒருவர் மூலம் நோட்டீஸ் அளிக்கப்பட வேண்டும். இந்தப் பதிவேடு தொடர்பாகக் கட்டாய நடவடிக்கையையும் எடுக்கக் கூடாது. ஏனென்றால், இது வெறும் ஒரு வரைவுப் பதிவேடுதான்'' என்று உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், ``நாட்டு மக்கள் மத்தியில் வெறுப்பு உணர்வு மற்றும் பதற்றமான சூழலை ஏற்படுத்தும் வகையில் எதிர்க்கட்சிகள் பேசி வருகின்றனர்'' என அஸ்ஸாம் பி.ஜே.பி. இளைஞர் அணியினர் அம்மாநில போலீஸாரிடம் புகார் அளித்துள்ளனர்.
அஸ்ஸாம் குடிமக்கள் பட்டியல், ஆளும் பி.ஜே.பி. அரசுக்குக் கிலியை ஏற்படுத்தியிருக்கிறது.
 Trending Articles

Sponsored