"லஞ்சம் கொடுத்தால் சிறை... புதிய சட்டம் ஊழலுக்கே வழிவகுக்கும்!'' - சமூக நல இயக்கங்கள்Sponsored"லஞ்சம் கொடுப்பவர்களுக்கும் ஏழு ஆண்டு சிறைத்தண்டனை என்று மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் புதிய சட்டம், ஊழல்வாதிகளைக் காக்கவே வழிவகுக்கும்" என்கின்றன சமூக நல இயக்கங்கள்.

1988-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ஊழல் தடுப்புச் சட்டத்தில், ஊழல் குற்றங்களும், அவற்றுக்கான தண்டனை விவரங்களும் வரையறுக்கப்பட்டிருந்தன. ஆனால், லஞ்சம் கொடுப்பவர்களுக்குத் தண்டனை விதிக்கும் ஷரத்துப் பற்றிச் சொல்லப்படவில்லை. மேலும், இந்தியாவில் இயற்றப்பட்ட எந்தச் சட்டத்திலும் இதற்கான விதிமுறைகள் இல்லை. இதனையடுத்து, நாட்டில் முதல்முறையாக லஞ்சம் கொடுப்பவர்களுக்கும் தண்டனை விதிக்கும் வகையில், ஊழல் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதற்கான திருத்த மசோதா, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. பின்னர் அந்தச் சட்டத்திருத்த மசோதா, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டது. அதற்கு தற்போது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்ததையடுத்து, இந்தச் சட்டம் கடந்த 26-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. 

இந்தச் சட்டத்தின்படி, அரசு அதிகாரிகள் மற்றும் பொதுத்துறை ஊழியர்களுக்கோ அல்லது ஆதாயம் பெறுவதற்காக வேறு யாருக்குமோ லஞ்சம் கொடுத்தாலோ, லஞ்சம் கொடுப்பதாக உறுதி அளித்தாலோ 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும். இருப்பினும், லஞ்சம் கொடுக்குமாறு நிர்பந்தத்தில் சிக்குபவர்களைப் பாதுகாக்கும் அம்சமும், இந்தச் சட்டத்தில் உள்ளது. அப்படி நிர்பந்தத்துக்கு ஆளானவர்கள், காவல் துறை உள்ளிட்ட சட்ட அமலாக்க அமைப்புகளிடம் 7 நாட்களுக்குள் புகார் தெரிவித்தால், எந்தச் சிக்கலும் வராது. 

Sponsored


Sponsored


லஞ்சம் கொடுப்பவர்களுக்கும் சிறைத் தண்டனை விதிக்க வகைசெய்யும் மத்திய அரசின் இந்தச் சட்டம் குறித்து சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் மாநிலத் தலைவர் சிவ.இளங்கோவிடம் பேசினோம். ``லஞ்சம் கொடுப்பதிலும், வாங்குவதிலும் இருதரப்பினரும் பயனடையும்போது, அது வெளியே வருவதில்லை. அதில், யாரோ ஒருவர் உடன்படவில்லை என்றால்தான், அந்த விஷயம் வெளியில் வருகிறது. ஆனால், இதுவரை எனக்குத் தெரிந்து எந்தவொரு அதிகாரியும், `இவர் எனக்கு லஞ்சம் கொடுக்க வருகிறார்' என்று லஞ்ச ஒழிப்புத் துறைக்குத் தகவல் சொல்லி வீடியோ மூலம் யாரும் பிடிபட்டதில்லை. அதேநேரத்தில், இப்படியான சட்டத்தை நடைமுறைப்படுத்துவது என்பது நல்ல விஷயம்தான். இதை நடைமுறைக்குக் கொண்டுவரும்போது லஞ்சம் கொடுப்பவர்களுக்கும் பயம் ஏற்படும். இதனால் இருதரப்பிலும் தவறுகள் குறைய வாய்ப்பிருக்கின்றன. எப்படி நாம் லஞ்சம் வாங்கினால் மாட்டிக்கொள்வோம் என்ற பயம் அரசு ஊழியர்களுக்கு இருக்கிறதோ, பொதுமக்களுக்கும் அதுபோன்ற பயம் இந்தச் சட்டத்தால் உருவாகும். இதற்காகப் பாடுபடும் இயக்கங்களுக்கு அரசு, கூடுதல் பாதுகாப்பு தரவேண்டும். லஞ்சம் தொடர்பான புகார்களை காவல் துறை உள்ளிட்ட சட்ட அமலாக்க அமைப்புகளிடம் தெரிவிப்பதற்கான கால அவகாசம் 7 நாட்கள் என்றிருப்பதை ஒரு மாதமாக அதிகரித்தால், இன்னும் வசதியாக இருக்கும்'' என்றார் மிகத் தெளிவாக.

இதுதொடர்பாக அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன், ``இது, ஊழல் தடுப்புச் சட்டம்-1988-ல் திருத்தம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டிருக்கும் சட்டமாகும். அதில், `லஞ்சம் கொடுப்பவர்களுக்கும் 7 ஆண்டு ஜெயில்' என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதற்குச் சில விதிமுறைகளையும் கொடுத்துள்ளனர். குறிப்பாக, ஓர் அதிகாரிக்கு லஞ்சம் கொடுப்பவர்கள், அந்த அதிகாரியின் வற்புறுத்தலின்பேரிலேயே கொடுத்ததாகத் தெரிவித்தால், லஞ்சம் கொடுத்தவர் தண்டனையில் இருந்து தப்ப முடியும் என்று சட்ட விதிகளில் சொல்லப்பட்டிருக்கிறது. அதேநேரத்தில், கட்டாயத்தின்பேரில் ஒருவர் லஞ்சம் கொடுக்கும்போது, பயத்தினால்தான் அவர் லஞ்சம் கொடுக்கிறார் என்று எடுத்துக்கொண்டால், ஒரு புரிதல் இல்லாத சூழலும், ஊழலை ஒழிக்க வழியில்லாத நிலையும்தான் ஏற்படுகிறது. இதனால், இந்தச் சட்டம் ஊழல்வாதிகளைக் காப்பாற்றவே வழிவகுக்கும். பொதுவாக, சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், பட்டா சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்களை வாங்குவதற்கு மக்கள் லஞ்சம் கொடுக்க வேண்டிய சூழல் உள்ளது. இதன் காரணமாக, இப்போது அமலுக்கு வந்துள்ள இந்தச் சட்டத்தால் அவர்கள் எல்லாம், லஞ்சம் கொடுத்தது தொடர்பாக ஒருவாரத்தில் புகாரே சொல்ல முடியாத நிலைக்கு ஆளாகலாம். ஆக, உண்மையிலேயே லஞ்சத்தை ஒழிக்க வேண்டும் என்றால், சேவை வரி உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

அதாவது, மேலே சொன்ன சான்றிதழ்களை 15 நாட்களுக்குள் அதிகாரிகள் தரவில்லை என்றால், அவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஒரு சட்டம் இயற்றப்பட்டால், உண்மையிலேயே ஊழல் ஒழிய வழிபிறக்கும். இதைத் தவிர்த்துவிட்டு, மக்கள் மீது இப்படியான சட்டங்களைத் திணிப்பதால் பிரச்னைகள்தான் அதிகரிக்கும். அதேநேரத்தில், லஞ்சம் கொடுப்பவர்கள்மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது கார்ப்பரேட் நிறுவனங்களுக்குப் பொருந்தக் கூடியதாகும். லோக் ஆயுக்தா சட்டமும் மக்களைப் பயமுறுத்துவதாகத்தான் உள்ளது. தற்போது ஊழல் தடுப்புச் சட்டத்திலும் அதுபோன்ற நிலையே காணப்படுகிறது. இதன்மூலம் யாரையும் ஊழல் சட்டத்தின் மூலம் விசாரிக்க முடியாத நிலையை ஏற்படுத்தி விட்டனர்'' என்றார். 

அரசின் புதியச் சட்டங்கள் நடைமுறைக்கு வருவது மக்களைப் பாதுகாக்கவா... பதைபதைப்புக்குள்ளாக்கவா என்பதுதான் இப்போதைய கேள்வியாக இருக்கிறது. Trending Articles

Sponsored