பைக்கில் பறக்கும் தேவதைகள்... பெண் சமத்துவத்தை வலியுறுத்தி கொச்சி டு டெல்லி பயணம்!Sponsoredபெண் சமூகத்துக்கான சமத்துவத்தை வலியுறுத்தியும் பொதுமக்களின் மனதில் நீடிக்கும் பாலின பாகுபாட்டை அகற்றவும் கேரளாவைச் சேர்ந்த 6 வங்கி ஊழியர்கள் கொச்சி முதல் டெல்லி வரையிலும் பைக்கில் பயணம் தொடங்கி இருக்கிறார்கள். 

Photo Credits : tourismnewslive.com

Sponsored


ஃபெடரல் வங்கியில் பணியாற்றும் ஊழியர்களில் 40 சதவிகிதம் பேர் பெண்கள். அதனால் நாடு முழுவதும் நிலவும் பாலின பாகுபாட்டைக் களைய அந்த வங்கி நிர்வாகம் விழிப்பு உணர்வு நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்தது. அதற்காக முழுவதும் மகளிர் அணியினர் பங்கேற்கும் பைக் பிரசார பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. அதில் பங்கேற்க விரும்புவோர் பெயர்களைப் பதிவு செய்ய வலியுறுத்தப்பட்டது. 

Sponsored


வங்கி நிர்வாகத்தினர் அதிசயிக்கும் வகையில் 100-க்கும் அதிகமானோர் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பெயர்களைப் பதிவு செய்தார்கள். அதிலிருந்து தகுதியும் திறமையும் வாய்ந்த 6 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் இன்று கொச்சியில் உள்ள மரைன் டிரைவ் முன்பிருந்து தங்களுடைய பயணத்தைத் தொடங்கினார்கள். வழிநெடுகிலும் பல்வேறு நகரங்களிலும் பிரசாரம் மற்றும் விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொள்ளும் இந்தக் குழுவினர் ஆகஸ்ட் 20-ம் தேதி டெல்லி சென்றடைகின்றனர். 

இந்தக் குழுவில் 20 வயது முதல் 40 வயது வரையிலான பெண் ஊழியர்கள் இடம்பெற்றுள்ளனர். திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சீதா நாயர் இந்தக் குழுவிலேயே அதிக வயது (40) கொண்ட மூத்த உறுப்பினர். பெங்களூருவைச் சேர்ந்த லாவண்யா (வயது 21) இந்தக் குழுவிலேயே மிகவும் இளையவர். இவர்களைத் தவிர, திருச்சூரின் சூர்யா ரவீந்தரன் (24), கோழிக்கோடு நகரின் சங்கீதா சிகாமணி (32), மெர்லின் ஹேம்லெட் (27) ஆலுவாவை சேர்ந்த ஃபெபினா (34) ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். 

இந்தக் குழுவினரின் பயணத்துக்காக அனைவருக்கும் புதிய ராயல் என்ஃபீல்ட் புல்லட்-350 வழங்கப்பட்டுள்ளது. இரு வாரங்களுக்கு முன்பாகவே இந்த வாகனங்கள் வழங்கப்பட்டதால் அனைவரும் அதனை பயன்படுத்தி சாதகமான நிலைக்கு கொண்டுவந்துள்ளனர். இந்த புல்லட் தேவதைகளின் பயணம் குறித்து பேசிய ஃபெடரல் வங்கி அதிகாரிகள், ‘’பெண்களின் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த குழுவினர், வழியெங்கும் உள்ள மக்களுக்கு பாலின சமத்துவம் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்துவார்கள்.

இந்த நிகழ்ச்சிக்காக மே மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டதுமே பலரும் ஆர்வத்துடன் பங்கேற்க முன்வந்தார்கள். தற்போது தேர்வாகி இருக்கும் அனைவருமே பைக்கில் தினமும் பயணம் செய்து பயிற்சி எடுத்துக் கொண்டதால் அவர்களின் பயணத்தில் எந்தச் சிரமமும் இருக்காது. அவர்கள் திட்டமிட்டபடி 20-ம் தேதி டெல்லிக்குச் சென்றடைவார்கள். அதற்கு ஏற்ற வகையில் அவர்களது பயணம் திட்டமிடப்பட்டு இருக்கிறது’’ என்றார்கள்.  Trending Articles

Sponsored