`ராஸி' திரைப்படமும்...அஸ்ஸாம் குடியுரிமைச் சிக்கலும்! - வரலாற்றுத் தவற்றைச் சரி செய்வோமா?Sponsored`ராஸி'..., ஆலியா பட் நடிப்பில் அண்மையில் பாலிவுட்டில் வெளிவந்துள்ள திரைப்படம். 1971-ம் ஆண்டில் நிகழ்ந்த இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போரைப் பின்னணியாகக் கொண்டு இயக்கப்பட்ட திரைப்படம். இந்தியாவுக்கான உளவாளியாக இருப்பதற்காக ஒரு காஷ்மீரிப் பெண் தன்னுடைய மணவாழ்க்கையைப் பணயமாக வைத்ததுதான் கதையின் கரு என்றாலும், அந்தப் போரின் வரலாற்றையும் இந்தியா எதற்காக அந்தப் போரில் தலையிட்டது என்பது பற்றியும் அந்தப் படம் பேசுகிறது.

1947-க்குப் பிறகு பாகிஸ்தானின் கிழக்குப் பகுதியாகவே இருந்தது பங்களாதேஷ். ஆனால், 1970-களில் கிழக்கு பாகிஸ்தானில் இருந்த வங்காளர்களுக்கும், மேற்கு பாகிஸ்தானைச் சேர்ந்த மக்களுக்கும் இடையே ஆட்சிக்கான போர் உருவானது. இதன் பின்னணியில் இந்திய விமான தளங்கள் சிலவற்றில் பாகிஸ்தான், குண்டுவீசியதை அடுத்து கிழக்கு பாகிஸ்தானுக்கு ஆதரவாக இந்தியா களத்தில் இறங்கியது. அந்தச் சமயத்தில்தான் 10 லட்சத்துக்கும் மேலான வங்காளத்தவர்கள், அங்கிருந்து இந்தியாவுக்கு இடம்பெயர்ந்தார்கள். 1965-ல் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போரின்போதே கிழக்கு பாகிஸ்தானிலிருந்து மக்கள் இந்தியாவுக்குள் நுழைந்தாலும், கிழக்கு பாகிஸ்தான் பங்களாதேஷாகச் சுதந்திரம் பெற்றபோது நிகழ்ந்த இடப்பெயர்வு, பங்களாதேஷைச் சுற்றியுள்ள இந்தியப் பகுதி மாநிலங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

Sponsored


தேசிய வரைபடத்தைக் கவனித்தால் தந்தையின் கரங்களைப் பற்றிக்கொண்டிருக்கும் குழந்தை போன்ற வடிவத்தில் பங்களாதேஷ் இந்தியாவை ஒட்டியிருக்கும். அதன் 95 சதவிகித எல்லைப்பகுதியானது இந்திய மாநிலங்களால் சூழப்பட்டுள்ளது. வெறும் 5% எல்லை மட்டுமே மற்றோர் அண்டை நாடான மியான்மருடன் சர்வதேச எல்லையாக இருக்கிறது.

Sponsored


இந்த நிலையில் அஸ்ஸாம் மாநிலத்தில் முதன்முறையாக ஆதார் எண் போன்ற தேசிய குடிமக்களுக்கான பதிவு என்கிற முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காகப் பதிவுசெய்த மூன்று கோடிக்கும் மேலான மக்களில் இரண்டு கோடியே 59 லட்சம் பேருக்கு மட்டுமே தற்போது குடியுரிமைப் பட்டியலில் இடம் கிடைத்துள்ளது. மீதமுள்ள 40 லட்சம் மக்கள் பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்கிற அடிப்படையில் அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து வெளியேற்றப்பட்டு, பங்களாதேஷ் அனுப்பப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

`அண்டை நாட்டிலிருந்து அஸ்ஸாம் மாநிலத்துக்குக் குடியேறினாலும், நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக இங்கேயே வசித்துக் கொண்டிருப்பவர்களை, வெளியேற்றுவது வளர்ந்துவரும் நாடான இந்தியாவுக்கு அழகல்ல. அது ரத்த ஆற்றினை ஓடச்செய்யும்’ என்று அந்த மாநிலத்தை ஆளும் பி.ஜே.பி. அரசையும், மத்திய பி.ஜே.பி-யையும் எச்சரித்துள்ளார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பனர்ஜி. இதுபோல பல்வேறு தரப்பிலிருந்தும் அஸ்ஸாம் தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு எதிராகக் குரல்கள் எழுந்துள்ளன. `பழங்குடிகளின் மாநிலமான அஸ்ஸாமில் 1960-களில் தேயிலைத் தோட்டத் தொழிலுக்கு ஆட்கள் தேவையாக இருந்தபோது, அப்போதைய கிழக்கு பாகிஸ்தானிலிருந்து பெரும்பாலானவர்கள் இடம்பெயர்ந்து வந்தனர். அந்த மாநில அரசு தற்போது மேற்கொண்டிருக்கும் இந்த வேலை தேவையற்றது' என்று எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி.

அதிக மக்கள் தொகை பெருக்கத்தால் மாநில அரசின் மீது ஏற்றப்படும் சுமையைக் குறைக்கவும் மாநில வளர்ச்சியைக் கருத்தில் கொண்டுமே இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகக் கூறப்பட்டாலும் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி ஃபக்ருதீன் அலி அகமதுவின் உறவினர் ஒருவருடைய பெயரும் இந்தப் பட்டியலிலிருந்து விடுபட்டிருப்பது, இந்தத் திட்டம் குறித்தான சர்ச்சையை மேலும் பரபரப்பாக்கியுள்ளது. மாநிலக் குடியுரிமைப் பட்டியலுக்கான பெயர்கள் சரியான முறையில் சேர்க்கப்பட்டதா என்கிற கேள்வியையும் எழுப்பியுள்ளது. 

மத்தியில் வாஜ்பாய் அரசு ஆட்சியில் இருந்த சமயத்தில் அஸ்ஸாம் மாநிலத்தில் `மல்டி பர்பஸ் கார்டு’ திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் அந்த மாநிலக் குடியுரிமை இல்லாதவர்களுக்கும் மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கும் வழங்கப்படும் அத்தனை சலுகைகளும் கிடைக்கும்படியாகச் செய்யப்பட்டது. இதுவரை இந்திய மக்கள் 120 கோடிக்கும் மேலானவர்களுக்கு ஆதார் எண் வழங்கப்பட்டிருக்கும் நிலையில் அஸ்ஸாமில் இன்னும் ஆதார் திட்டம் அமல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் நாடாளுமன்றத்தில் அஸ்ஸாமின் இந்தப் புதிய குடியுரிமை பட்டியல் குறித்த சலசலப்பு ஏற்பட்ட நிலையில் அதற்கு விளக்கமளித்த இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்புத் துறையைச் சேர்ந்த பதிவாளர் சைலேஷ், ``இது இறுதிப் பட்டியல் அல்ல; இறுதிப்பட்டியல் வெளியிடப்படும் நிலையில் அவர்கள் தண்டிக்கப்பட மாட்டார்கள். அவர்களுக்கு மட்டும் தனிப்பட்ட அளவில் கடிதம் அனுப்பப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்குப் பதில் அளித்துள்ள பத்திரிகையாளரும், வரலாற்று ஆய்வாளருமான மாதவன் நாராயணன், ``அஸ்ஸாம் மாநிலம் தற்போது மேற்கொண்டிருக்கும் இந்த நடவடிக்கை இதே வேகத்தில் தொடருமானால், மெக்ஸிகோவுக்கு எதிராக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், எல்லையில் சுவர் எழுப்பத் திட்டமிட்டிருப்பதற்கு சற்றும் சளைக்காதத் திட்டமாக இது மாறிவிடும். அஸ்ஸாமில், அந்த நாற்பது லட்சம் மக்களையும் வெளியேற்றாமல் வேறு சில வகையில் இந்தப் பிரச்னையை மத்திய அரசு கையாளலாம். அஸ்ஸாம் மாநிலத்துக்கான சிறப்புப் பொருளாதாரச் சலுகையை மத்திய அரசு வழங்குவதன் வழியாகவோ, இதுவரை செயலில் இல்லாத ஆதார் எண் திட்டத்தை இந்தக் குடியுரிமைப் பட்டியல் திட்டத்துடன் இணைப்பதன் வழியாகவோ, பங்களாதேஷ் அரசு தனது நாட்டில் தொழிற்சாலைகளைத் தொடங்கி அங்கே வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கு இந்தியா உதவி செய்வதன் வழியாகவோ இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வை எட்டமுடியும்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.Trending Articles

Sponsored