ஒருநாளைக்கு 57 பேரின் உயிரைப்பறிக்கும் `ஹிட் & ரன்' விபத்துகள்! #VikatanInfographics



44 விநாடிகள் கொண்ட அந்த சிசிடிவி வீடியோவின் கடைசி 3 விநாடிகள் நம்மைப் பதைபதைக்க வைக்கிறது. சாலையோரமாக நின்றுகொண்டிருந்த ஒரு பெரியவர் எதையோ கண்டு பயந்து ஒதுங்க முயற்சி செய்கிறார், அந்த நொடிப் பொழுதே அவரை அடித்துத் தூக்குகிறது ஒரு ஆடி கார். அதன் பிறகு சாலையோரமாக நின்றுகொண்டிருந்த ஆட்டோவை நொறுக்கிவிட்டு, பூக்கடை வைத்திருக்கும் பெண் உட்பட 4 பெண்களின் உயிரைப் பறித்திருக்கிறது அதிவேகமாக வந்த அந்த கார். காலை 9:55 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில் பேருந்து நிறுத்ததில் பூக்கடை வைத்திருக்கும் அம்சவேணி (35), பேருந்துக்காக நின்றுகொண்டிருந்த இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி சுபாஷினி(18), குப்பாத்தாள்(70), ருக்மணி(65), ரங்க தாஸ்(65) மற்றும் நாராயணன்(70) ஆகியோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். இது போன்ற சம்பவங்கள் இந்தியாவுக்கோ, தமிழ்நாட்டுக்கோ புதிதல்ல. இந்தியாவில், சல்மான் கான் தொடங்கி பல அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள், சாலையோரத்தில் இருக்கும் சாதாரண மனிதர்களின் உயிரைப் பறித்த சம்பவங்கள் ஏராளம்.

Sponsored


இந்தியாவில், ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 7 `ஹிட் & ரன்' எனச் சொல்லப்படும், விபத்துகளை ஏற்படுத்திவிட்டு தப்பிச் செல்வது நடைபெறுகிறது. இது அரசுப் பேருந்து ஓட்டுநர் தொடங்கி, லாரி, இருசக்கர வாகனம், சொகுசு கார் என அனைத்து வகையான வாகனங்களை ஓட்டி வருபவர்கள் அனைவரும் செய்யும் தவறாக உள்ளது. வாகனத்தை அங்கேயே விட்டு விட்டு தப்பிச் செல்வதும் சில சமயங்களில் நடைபெறும். அதிவேகமாக ஓட்டுவதால் 90% விபத்துகள் ஏற்படுகின்றன என்கிறது மத்திய குற்ற ஆவணக் காப்பகம். இந்த வகையான விபத்துகளை ஏற்படுத்துபவர்களில் அநேகமானோர் சொகுசு கார் மற்றும் பைக்குகளில வருபவர்களாகவே உள்ளனர். இரவு நேரங்களில் குடித்துவிட்டு சாலையில் இருக்கும் உயிர்களைப் பறிப்பதும் இந்த சொகுசு கார்களில் வருபவர்களாகத்தாம் இருக்கிறார்கள். மும்பை, டெல்லி, சென்னை,கோவை போன்ற பெருநகரங்களில் இதுபோன்ற சம்பவங்கள் அதிக அளவில் நடைபெறுகின்றன.

Sponsored


Sponsored


இந்தியாவில், விபத்துகளை நிகழ்த்திவிட்டு தப்பிச் செல்பவர்கள் மற்றும் அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்கள் மீது ஐபிசி 279, 304(ஏ) மற்றும் இந்திய வாகனச் சட்டத்தின் படி 134(ஏ) மற்றும் 134(பி) ஆகிய பிரிவுகளில் வழக்குகளை பதிவு செய்யலாம். அதிவேகமாக வாகனம் ஓட்டியதால் ஏற்படும் விபத்துகள் மற்றும் நடைப்பாதைகளில் வாகனம் ஓட்டியதால் ஏற்பட்ட விபத்துகள் என்றால் ஐபிசி 279 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் குறைந்தது 6 ஆண்டுகால சிறைத்தண்டனை வழங்கப்படும். இந்த வழக்கில் குற்றவாளிக்கு ஜாமீன் பெறும் தகுதியுண்டு.

 

இதுபோன்ற விபத்துகளில் மரணம் ஏற்பட்டிருந்தால் ஐபிசி 304(ஏ) பிரிவின் படி குறைந்தது இரண்டு ஆண்டு தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும். இந்த வழக்கிலும் குற்றவாளி ஜாமீன் பெற முடியும். விபத்தில் சிக்கியவருக்குப் படுகாயம் ஏற்பட்டிருந்தால் ஐபிசி 338ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும். குறைந்தது இரண்டு ஆண்டு தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும். ஜாமீன் பெறமுடியும். இந்திய வாகனச் சட்டம் 134(ஏ) மற்றும் 134(பி) ஆகிய பிரிகளின் கீழும் வழக்குகள் பதிவு செய்யப்படும், வழக்கின் தன்மையைப் பொறுத்து 3 மாதங்கள் முதல் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படும். இந்தச் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதியப்பட்டிருந்தாலும் ஜாமீன் பெறமுடியும்.

அதிக வேகத்தின் காரணமாக ஏற்படும் விபத்துகள், பெரும்பாலும் சொகுசு கார்களில் வருபவர்களாலேயே ஏற்படுகின்றன. இதில் உயிரிழப்புகளும் அதிகம் ஏற்படுகின்றன. இந்த விபத்துகளை நிகழ்த்தியவர்கள் அனைவரும் பணக்காரர்கள் என்பதனால், எத்தனை உயிர்கள் போயிருந்தாலும் மிக எளிதாகச் சட்டங்களிலிருந்து தப்பித்துவிடுகிறார்கள். உதாரணத்துக்கு, பாலிவுட் நடிகர் சல்மான் கான் ஏற்படுத்திய கார் விபத்து வழக்கில் 14 ஆண்டுகள் கழித்தே தீர்ப்பு வழங்கப்பட்டது. 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. பின்னர் அவர் மேல்முறையீடு செய்தார், அதைத் தொடர்ந்து மும்பை உயர்நீதிமன்றம் சல்மான் கானை விடுதலை செய்தது. இதுபோன்ற விபத்துகள் நடைபெறாமல் தடுப்பதற்கு சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். சாலையோரத்தில் இருப்பவர்களோ, சாலையில் நடந்து செல்பவர்களோ யாரோ ஒருவரின் தவறுக்காக உயிர் இழப்பது என்பது எந்த விதத்திலும் நியாயமற்றது. இதற்கு இழப்பீடாகக் கிடைக்கும் உதவித் தொகையோ, அவர்களுக்குக் கிடைக்கும் தண்டனையோ அவர்களுக்கு என்றுமே ஈடாக அமையாது. கவனமாக வாகனத்தை இயக்க வேண்டியது அவசியம். இது பல உயிர்கள் தொடர்புடைய விஷயம். வாகனம் ஓட்டுபவர்களும் சாலை விதிகளை மதித்து வாகனம் ஓட்டினால் மட்டுமே இந்த நிலை மாறும். 



Trending Articles

Sponsored