13 இந்திய மாநிலங்களில் எத்தனை பேர் மனிதக் கழிவுகளை அள்ளுகிறார்கள்? #VikatanInfographics



நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் தற்போதைய சமூகம் நாகரிகமடைந்து விட்டது, பகுத்தறிவுமிக்கது, டிஜிட்டல் இந்தியாவாக வளர்ந்து விட்டது எனப் பலர் சொல்லிக்கொண்டாலும், மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் இழிவுநிலை இன்னும் மாறவில்லை. இது போன்ற நிகழ்வுகள் நம் கண்முன்னே இன்றளவும் நடந்துகொண்டேதான் இருக்கிறது. இந்தியா சுதந்திரமடைந்து 48 ஆண்டுகளுக்குப் பிறகுதான் ஒரு மனிதன் கையால் மலம் அள்ளுவது தடுக்கப்பட வேண்டும் என்று சட்டமே இயற்றப்பட்டது. மனிதக்கழிவுகளை மனிதர்களே அகற்றும் அவலத்தைத் தடுக்கவும், கையால் மலம் அள்ளும் இழிவுநிலை தொடர்பான அனைத்துச் சிக்கல்களை கண்காணிக்கவும் `தேசியத் துப்புரவுப் பணியாளர் ஆணையம்' 1994-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 2013-ல் சட்டத் திருத்தம் செய்யப்பட்டது. அதன்படி, மனிதக் கழிவுகளை மனிதர்களே கையால் அள்ளுவதற்குத் தடை விதிக்கப்பட்டது. எனினும், இந்தியா முழுவதும் மனிதர்களை மலம் அள்ள வைக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கின்றன. குறிப்பாக, தமிழகத்தில் சென்னை, மதுரை போன்ற மாநகரப் பகுதிகளில் மழைபெய்தால் அதிகளவில் நீர்த் தேக்கம் ஏற்படும். இதைத் தடுக்க மக்கள் மனிதர்களைக் கொண்டு தங்கள் வீட்டு செப்டிக் டேங்குகளை தூர்வாரச் செய்யும் அவலம் அதிக எண்ணிக்கையில் நடக்கின்றன. 

Sponsored


இந்தியாவில், 18 மாநிலங்களில் 170 மாவட்டங்களில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், கழிவறைகள் சுத்தம் செய்யும் பணியாளர்கள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. கணக்கெடுப்புக்குப் பின், மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், 2018ம் ஆண்டு ஜூன் மாதப்படி இந்தியாவில் உள்ள 13 மாநிலங்களில் ஏறத்தாழ 13,657 பேர் கைகளால் மனிதக் கழிவுகளை அள்ளும் நபர்கள் உள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளனர். இந்தப் பட்டியலில் இந்தியாவிலேயே உத்தரப்பிரதேச மாநிலத்தில்தான் அதிகளவில், அதாவது 11,247 பேர் கையால் மனிதக் கழிவுகளை அள்ளுபவர்கள் உள்ளனர். இதைத் தொடர்ந்து, கர்நாடகாவில் 732 பேரும், ராஜஸ்தானில் 338 பேரும், தமிழகத்தில் 363 பேரும் மனிதக் கழிவுகளை அள்ளுகின்றனர். ஆந்திரப் பிரதேசத்தில் 78 பேரும், அசாம் மாநிலத்தில் 154 பேரும், பீகாரில் 137 பேரும், சத்தீஸ்கரில் 3 பேரும், ஒடிசாவில் 237 பேரும், பஞ்சாபில் 91 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 36 பேரும், உத்தரகாண்ட்-ல் 137 பேரும், மேற்கு வங்கத்தில் 104 பேரும் கையால் மனிதக்கழிவுகளை அள்ளுகின்றனர். 

Sponsored


Sponsored


உலகளவில் உள்ள ரயில் போக்குவரத்தில் மிகப்பெரிய அளவில் உள்ள ரயில் போக்குவரத்தாக இந்திய ரயில்வே துறை இயக்குகிறது. 13 லட்சம் தொழிலாளர்களோடு உலகின் அதிகமான தொழிலாளர்களைக் கொண்ட நிறுவனமாகப் பெயரெடுத்த ரயில்வே துறைதான், நாட்டில் அதிகமாக மலம் அள்ளும் தொழிலாளர்களையும் கொண்ட நிறுவனம் என்று தேசியத் துப்புரவுப் பணியாளர் ஆணையம் சொல்கிறது. ஒரு நாளைக்கு 2.3 கோடி பேரும், ஆண்டுக்கு 810 கோடி பேரும் பயணம் செய்யும் ரயில்களிலும், தண்டவாளங்களிலும், ரயில் நிலையங்களின் திறந்தவெளிகளிலும் சேரும் மனிதக் கழிவுகளை துப்புரவுப் பணியாளர்கள்தாம் அப்புறப்படுத்த வேண்டும். அவர்கள் தங்கள் பணியைச் செய்துகொண்டிருக்கும்போது, நாம் மூக்கைப் பொத்திக்கொண்டு வேகமாக நகர்ந்து சென்றிருப்போம். இதுபோன்று, நம்முடைய மலக்குழியில் இறங்கி தினம் தினம் செத்துப் பிழைத்து, திடீரென ஒருநாள் நிரந்தரமாகச் செத்துப்போகின்றனர். கையால் மலம் அள்ளும் இழிவுக்கு முடிவுகட்ட பல்வேறு இயக்கங்கள், தலைவர்கள் சார்பாக ஏராளமான முயற்சிகள் நீண்ட காலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும், நாடு முழுக்க மலம் அள்ளுவதையும், சாக்கடை சுத்தம் செய்வதையும், வீதிகளைக் கூட்டுவதையும் நாம் தொடர்ந்து பார்த்துக்கொண்டேதான் இருக்கிறோம். தினமும் அவர்களைக் கடந்துதான் வேறோர் இடத்துக்குச் செல்கிறோம். இந்தியாவில், ஆண்கள் மலக்குழிகளுக்குள் இறங்கி சுத்தம் செய்வதிலும், பெண்கள் துப்புரவுப் பணி செய்வதிலும் ஈடுபடுத்தப்படுகின்றனர். குறிப்பாக, வட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மனிதக் கழிவுகளை கூடைகளில் அள்ளித் தலையில் சுமந்து கொண்டுபோய் ஊருக்கு வெளியே கொட்டும் வேலையில் பல பெண்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

இது மட்டுமல்ல, கடந்த ஜூலை மாதம் 28-ம் தேதி கோவையில் செப்டிக் தொட்டிக்குள் தவறி விழுந்து மகேந்திரன் என்ற துப்புரவுப் பணியாளர் விஷவாயு தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விஷவாயு தாக்கி துப்புரவுப் பணியாளர் பலி. செப்டிக் டேங்கில் மூழ்கிப் பலி என்று, தினமும் செய்தித்தாளில் பார்க்கிறோம். கடந்த 4 ஆண்டுகளில், சென்னையில் மட்டும் பாதாளச் சாக்கடைப் பணியின்போது இறந்தவர்களின் எண்ணிக்கை 10 பேர் என்கிறது புள்ளிவிவரம். ஆனால், தினமும் செய்தித்தாள் படிப்பவர்களுக்குத் தெரியும். உண்மை கணக்கு எத்தனை என்று. இறப்புகளுக்கு முக்கியக் காரணம் அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் சரியாக வழங்காமல் இருப்பதே. 

 

சமூக நீதி மற்றும் மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில், துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவருக்கு மறுவாழ்வு தரும் வகையில் ``துப்புரவுப் பணியாளர்களுக்கான மறுவாழ்வு சுயதொழில் திட்டம்" கொண்டுவரப்பட்டுள்ளதாகக் கூறுகிறனர். இதன்மூலம், துப்புரவுத் பணியாளர்களுக்கு ஒரு தவணைப் பண உதவியாக 40,000 வழங்கப்படுகிறது. குறைந்த வட்டியில் 15 லட்சம் ரூபாய் வரை கடன் பெற உதவி செய்யப்படுகிறது. மேலும், மூலத்தனகடனாக 3,25,000 வரையும், 3000 ரூபாய் ஊக்கத்தொகையுடன் இரண்டு ஆண்டுகளுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சியும் வழங்கப்படுவதாகக் கூறுகிறது. மேலும், இந்த அமைச்சகத்தின் சார்பில் ``ஆரோக்கியத்துக்கு அபாயகரமான இடங்களில் துப்புரவுப் பணி செய்யும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு அடிப்படைக் கல்வி உதவித் தொகை" எனும் திட்டமும் விரைவில் கொண்டுவர முயற்சி செய்து வருவதாகவும் கூறியுள்ளது.

உதவித் தொகையோ, கடன் வசதியோ இவர்களுக்கான தீர்வு அல்ல, மனிதன் மலத்தை மனிதன் அள்ளுவது எந்தவிதத்திலும் ஏற்புடையது அல்ல. தொழில்நுட்பத்தைக் கண்டுபிடியுங்கள் அல்லது ஏற்கெனவே சிறிய அளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இயந்திரங்களுக்கு வாய்ப்பளியுங்கள். இந்தியாவைத் தூய்மை இந்தியாவாக மாற்றுவதெல்லாம் இருக்கட்டும் இவர்கள் வாழ்க்கையைத் தூய்மையாக மாற்றுவழிகளை செய்யுங்கள். இந்த 13,657 பேருக்கும் நீங்கள் சொல்லப்போகும் தீர்வு என்ன என்பதுதான் இங்குள்ள கேள்வி!



Trending Articles

Sponsored