``கல்வி மட்டும்தான் எங்களுக்கு ஒரே வழி'' கல்லூரியில் படிக்கும் திருநங்கை நெகிழ்ச்சி!



Sponsored



கேரள அரசு மேற்படிப்புக்காக திருநங்கைகளுக்கு இட ஒதுக்கீடு செய்துள்ளது. முதற்கட்டமாக எர்ணாகுளம் மஹாராஜாஸ் கல்லூரியில் திருநங்கை இணைந்துள்ளார்.

கேரள அரசு திருநங்கைகளுக்கு கல்வியில் இட ஒதுக்கீடு வழங்கியதைத் தொடர்ந்து, பிரவீண் நாத் என்ற திருநங்கை முதன்முதலாக கல்லூரி வகுப்பில் சேர்ந்துள்ளார். இங்கிலீஷ் லிட்ரேச்சர் பிரிவில் முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகளின் பலத்த கரகோஷத்துக்கு மத்தியில் திருநங்கை பிரவீண் முதல்நாள் வகுப்புக்குச் சென்றார். கல்லூரியில் இணைந்த மகிழ்ச்சியில் இருக்கும் பிரவீண் நாத் கூறும்போது, ``என் இயற்பெயர் பிரவீணா. பாலக்காடு தென்மாற என்.எஸ்.எஸ். கல்லூரியில் பி.ஏ.எக்கனாமிக் படித்துவந்தேன். நான் ஒரு திருநங்கை என்பதை வெளிப்படுத்தியதால் படிப்பை பாதியில் கைவிடவேண்டிய நிலை ஏற்பட்டது. என்னை திருநங்கை என்று சொல்லிக் கொள்ளாத வரை எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை. திருநங்கை என்று என்னை வெளிப்படுத்தியதும் கல்லூரி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் எனக்கு பல இன்னல்கள் ஏற்பட்டன.

Sponsored


Sponsored


இரண்டு ஆண்டுகளில் படிப்பை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. அதன்பிறகு நான் படிப்பை தொடருவேன் என நினைத்துக்கூடபார்க்கவில்லை. ஆனால், படிக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு இருந்தது. திருநங்கைகளுக்கு அரசு தனி கவனம் கொடுத்து கல்லூரியில் இட ஒதுக்கீடு செய்திருப்பது எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. கல்வி மட்டும்தான் எங்களைப் போன்றவர்கள் முன் உள்ள ஒரே வழி. மகாராஜாஸ் கல்லூரியில் இட ஒதுக்கீடு இருப்பதை அறிந்துகொண்டு நான் விண்ணப்பித்து, இப்போது வகுப்பில் இணைந்துவிட்டேன். அரசின் இந்த இட ஒதுக்கீடு எங்களைப் போன்றவர்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை" என்றார்.

``ஒரு திருநங்கை எங்கள் வகுப்பில் இணைந்திருப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது" என மஹாராஜாஸ் கல்லூரி மாணவ மாணவிகள்  தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கல்லூரி முதல்வர் கிருஷ்ணகுமார் கூறும்போது, ``மகாராஜாஸ் கல்லூரியில் மொத்தம் மூன்று திருநங்கைகள் சேர்ந்துள்ளார்கள். இட ஒதுக்கீட்டில் திருநங்கைகள் இணைந்துள்ள முதல் கல்லூரி எங்களுடையது. அவர்களுக்காக தனி டாய்லெட் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மற்ற மாணவர்கள் அனைவரும் இவர்களை வரவேற்பதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது" என்றார்.



Trending Articles

Sponsored