வாக்குப்பதிவு இயந்திரங்களை எதிர்க்கும் எதிர்க்கட்சிகள்! தேர்தல் ஆணையத்தின் முடிவு என்ன?



Sponsored



டுத்தாண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்குப் பதிலாக, வாக்குச்சீட்டு முறையைப் பின்பற்ற வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 17 எதிர்க்கட்சிகள், தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்த முடிவு செய்துள்ளன.

இந்தியாவில் அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் 2019-ம் ஆண்டு மே மாதம்வாக்கில் நடத்தப்படும் என்று தெரிகிறது. தற்போது மத்தியில் ஆளும் பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, மக்களவைத் தேர்தலை முன்கூட்டியே நடத்தக்கூடும் என்று பரவலாகச் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. எனினும் பி.ஜே.பி. தரப்பிலிருந்து அதுபற்றி எந்தத் தகவலும் இல்லை.

இதற்கிடையே, அண்மைக்காலமாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடப்பதாகவும், அந்த இயந்திரங்களில் எந்தப் பட்டனை அழுத்தினாலும் குறிப்பிட்ட ஒரு கட்சியின் சின்னத்திலேயே வாக்குகள் பதிவு செய்யப்படுவதாகவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. உத்தரப்பிரதேம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில், பி.ஜே.பி வெற்றிபெற்ற நிலையில், மீண்டும் வாக்குச்சீட்டு முறையைக் கொண்டுவர வேண்டும் என பல்வேறு எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.

Sponsored


Sponsored


ஆனால், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் எவ்வித முறைகேடும் செய்ய முடியாது; அவை நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருவதாகவும், முறைகேடு செய்ய முடியும் என்று யாராவது நிரூபிக்கலாம் என்று பல்வேறு கட்சிகளின் தலைவர்களுக்கும் தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்தது. அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டத்திலும் ஈ.வி.எம். முறைகேடுகள் தொடர்பாக விவாதம் நடைபெற்றது. ``அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில்கூட இப்போதும் வாக்குச்சீட்டு முறையே பயன்படுத்தப்பட்டு வருகிறது; எனவே, இந்தியாவில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்" என்பது எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு. 

``மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்குப் பதிலாக, வாக்குச்சீட்டு முறையைக் கொண்டுவந்தால், தேர்தலுக்காக அதிகளவில் ஊழியர்களைப் பணியமர்த்த வேண்டிவரும். வாக்கு எண்ணிக்கையும் வெகுநேரம் மேற்கொள்ள வேண்டும். பாதுகாப்பு ஏற்பாடுகளிலும் சிக்கல் ஏற்படும்" இந்தியத் தேர்தல் ஆணையம் சொல்லும் காரணங்களாக உள்ளது.

இந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைமையில் 17 கட்சிகளின் பிரதிநிதிகள், டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையரைச் சந்தித்து, மீண்டும் வாக்குச்சீட்டு முறையைக் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்த முடிவு செய்துள்ளனர்.

மீண்டும் வாக்குச்சீட்டு முறையைப் பின்பற்ற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவரான டெரக் ஓ'பிரையன் கூறுகையில், ``2019 நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குச்சீட்டு முறையைப் பின்பற்ற வேண்டும் என்ற கோரிக்கையை அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒப்புக்கொண்டுள்ளன. இதுதொடர்பாக, ஆலோசனை நடத்த அடுத்த வாரம் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெறவுள்ளது. எதிர்வரும் மக்களவைத் தேர்தலை, வாக்குச்சீட்டு மூலமே நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை தேர்தல் ஆணையத்திலும் வலியுறுத்தத் திட்டமிட்டுள்ளோம்" என்றார். 

திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உட்பட பல்வேறு எதிர்க்கட்சிகளையும் சந்தித்து, பி.ஜே.பி-க்கு எதிராக ஓரணியில் அனைத்துக் கட்சிகளும் திரள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பி.ஜே.பி அரசை வீழ்த்துவதே எதிர்க்கட்சிகளின் ஒரே நோக்கம் என்றும் மம்தா கூறியிருந்தார்.

இந்தச் சூழலில் வாக்குச்சீட்டு முறையை நாடாளுமன்றத் தேர்தலில் கொண்டுவர வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் ஒன்று திரள்வது, தேர்தல் ஆணையத்தை மட்டுமல்ல, மத்திய பி.ஜே.பி. அரசையும் நெருக்குதலுக்கு உள்ளாக்கும். அதிலும், வாக்குச்சீட்டு முறையைக் கொண்டுவரும் தங்களின் கோரிக்கைக்கு ஆதரவு அளிக்குமாறு பி.ஜே.பி. கூட்டணியில் உள்ள சிவசேனாவையும் மம்தா பானர்ஜி கேட்டுக்கொண்டுள்ளார். வாக்குச்சீட்டு முறையைக் கொண்டுவர வலியுறுத்தி, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஏற்கெனவே கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

வாக்குச்சீட்டு முறை மீண்டும் கொண்டுவரப்பட வேண்டும் என்ற கோரிக்கை குறித்து, தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் இதுவரை எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. அ.தி.மு.க. பொதுச் செயலாளராகவும், தமிழக முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா, 2011 சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு, வாக்குச்சீட்டு முறையையே மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். ஆனால், அதன் பின்னர் அந்தக் கோரிக்கையை அவர் தொடர்ந்து வலியுறுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளுமா அல்லது 'மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களே தொடர்ந்து பயன்படுத்தப்படும்' என தேர்தல் ஆணையம் தெரிவிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.



Trending Articles

Sponsored