3 குறும்படங்களுக்கு தேசிய மனித உரிமை ஆணையத்தின் விருது!தேசிய மனித உரிமை ஆணையத்தின் சார்பில் நடத்தப்பட்ட குறும்படப் போட்டியின் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

Sponsored


மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பான குறும்படங்களை எடுப்பதை ஊக்கப்படுத்துவதற்காக தேசிய மனித உரிமை ஆணையமானது இந்தப் போட்டியைத் தொடங்கியது. நான்காவது ஆண்டாக இந்த ஆண்டும் போட்டி அறிவிக்கப்பட்டது. நாளடைவில் மொத்தம் 53 குறும்படங்கள் இந்தப் போட்டிக்காக அனுப்பப்பட்டன; அவற்றில் 48 படங்கள் தகுதியுடையவையாகக் கருதப்பட்டு, விருதுக்குரிய படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. 

Sponsored


இமாசலப்பிரதேசத்தைச் சேர்ந்த தேவ் கன்யா எடுத்துள்ள ‘பிகைண்ட் தி பார்ஸ்’ குறும்படத்துக்கு முதல் பரிசும் விருதும் கிடைத்துள்ளது. இது, ஒரு லட்ச ரூபாய் ரொக்கப் பரிசையும் கொண்டது. சிறைச் சீர்திருத்தத்தின் முக்கியத்துவம் பற்றிய பார்வையைத் தருகிறது எனும் அடிப்படையில், இப்படம் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது. 

Sponsored


மகாராஷ்டிர மாநிலம், மும்பையைச் சேர்ந்த பிப்லாப் மஜூம்தாரின் ‘மூன்றாம் பாலினம்’ குறும்படத்துக்கு இரண்டாவது பரிசு வழங்கப்படுகிறது. இதில், ரூ.75,000 ரொக்கமும் அடங்கும். மாற்றுப்பாலினத்தவரின் உரிமைகள் மறுக்கப்படுவதைப் பற்றியும் அவர்களுக்கான சவால்களைப் பற்றியும் இந்தப் படம் பேசுகிறது. 

கேரளத்தைச் சேர்ந்த ஜெயஜோஸ் ராஜின் ‘அது சாத்தியம்’ எனும் படமானது, மூன்றாவது பரிசை வென்றுள்ளது. இந்த விருதுடன் ரூ.50 ஆயிரம் ரொக்கமும் அடங்கும். சுற்றுச்சூழல் தூய்மையைப் பேணுவது குறித்துப் பேசுகிறது, இந்தக் குறும்படம்! 

மேலும், சிறப்புத் தேர்வாக நான்கு படங்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது. தத்தகத்தா சட்டர்ஜியின் டிரிட்டியோ சாட் எனும் வங்காளப் படம், தேவ் கன்யாவின் நோ உமன்ஸ் லேண்ட் எனும் இந்திப் படம், ஹமோம் அசிஷ்குமாரின் ‘எல் அமாசங் எய்ஹக்’ எனும் மணிப்புரி மொழிப் படம், அலோக் ராஜ்புத்தின் நசரியா எனும் இந்திப் படம் ஆகியவையே சிறப்புத்தேர்வுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. 

வரும் செப்டம்பர் 5 அன்று டெல்லியில் நடைபெறும் விழாவில், விருதுகள் வழங்கப்படும் என்றும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.Trending Articles

Sponsored