முதல்முறையாகத் திறக்கப்பட்ட இடுக்கி அணையின் 5 மதகுகள் - கேரளாவை எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்Sponsoredகேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி அணை வரலாற்றில் முதல் முறையாக 5 மதகுகளும் தற்போது திறக்கப்பட்டுள்ளன. பெரியாறு ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். 

கேரளாவில் தென்மேற்குப் பருவமழை மிகவும் தீவிரம் அடைந்துள்ளது. மாநிலம் முழுவதும் விடாமல் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால், அங்குள்ள 24 அணைகள் நிரம்பியதால், அவற்றின் மதகுகள் (ஷட்டர்கள்) திறக்கப்பட்டுள்ளன. இடுக்கி அணையும் கடந்த 26 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது திறக்கப்பட்டுள்ளது. கடந்த 9-ம் தேதியன்று இடுக்கி அணையின் ஒரு மதகுமட்டும் திறக்கப்பட்டது. அப்போதே, அணையின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

Sponsored


தற்போது, வரலாற்றில் முதல் முறையாக இடுக்கி அணையின் ஐந்து மதகுகளும் திறக்கப்பட்டுள்ளன. வினாடிக்கு 35,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும், பெரியாறு நதியின் நீர்மட்டமும் அபாயக் கட்டத்தை எட்டியுள்ளது. இதனால், இடுக்கி அணைக்கு மிகுதியான நீர் வந்துகொண்டிருக்கிறது. இடுக்கி அணையிலிருந்து திறக்கப்படும் நீர் செறுதோணி ஆற்றில் பாய்ந்து எர்ணாகுளம் மாவட்டம் வழியாக அரபிக் கடலை சென்றடையும். 

Sponsored


வயநாடு, கோட்டயம், இடுக்கி, ஆலப்புழா, எர்ணாகுளம், பாலக்காடு, மலப்புரம் மற்றும் கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கண்ணூர், கோழிக்கோடு, வயநாடு மற்றும் இடுக்கி ஆகிய மாவட்டங்களில் ராணுவத்தினர் மீட்புப்பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஏராளமானோரைக் காணவில்லை. பெரும்பாலான மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் உள்ள முகாம்களில் சுமார் 53,500 மக்கள் பாதுகாப்பாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், அடுத்த 48 மணி நேரத்தில் கேரளாவின் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இது தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. வெள்ளம் மற்றும் மண் சரிவால் இதுவரையிலும் 29 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளன. தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் மீட்புப்பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளம் பாதித்த இடங்களைப் பார்வையிட நாளைக் கேரளா செல்கிறார் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். Trending Articles

Sponsored