‘வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளா’ -பாஸ்போர்ட் இழந்தவர்களுக்கு இலவச பாஸ்போர்ட்! Sponsoredதென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கேரளாவில் வரலாறு காணாத கனமழை பெய்துள்ளது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தால் பலர் வீடுகளை இழந்துள்ளனர். சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. கன மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 37 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கியோரை மீட்கும் பணியில் தொடர்ந்து ராணுவம் மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். 

எர்ணாகுளம், மலப்புரம், இடுக்கி, கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்களை அதிகளவில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவில் பலர் காணாமல் போயிருப்பதாக கூறப்படுகிறது. இதனால், வீடுகளை இழந்த சுமார் 58,000 பேர் பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர். இதில் பலர் தங்களது உடைமைகளை இழந்துள்ளனர். 

Sponsored


வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு அனைத்துத் தரப்பினரும் நிதியுதவி செய்து வருகின்றனர். வெள்ளத்தால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கும் வீடுகளை இழந்தோருக்கும் இழப்பீட்டுத் தொகைகள் மாநில அரசால் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், வெள்ளத்தால் பாஸ்போர்ட் சேதமடைந்திருந்தால் அதற்கு மாற்றாக, புதிய பாஸ்போர்ட்டை இலவசமாக வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

Sponsored


இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். ``கேரளாவில் மிகப் பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், பலரது வீடுகளில் புகுந்த வெள்ள நீரால் உடைமைகள் சேதமாகியுள்ளன. இங்கு நிலைமை இயல்புக்குத் திரும்பியதும் மழைநீரால் சேதமடைந்த பாஸ்போர்ட்டுக்குப் பதிலாக, புதிய பாஸ்போர்ட்டை இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளோம். பாதிக்கப்பட்டோர் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளார். Trending Articles

Sponsored