வழுக்கிய பாறை... நான்கு பக்கமும் வெள்ளம்... மூடப்பட்ட அணை... 24 மணி நேரம் தவித்த யானை!காட்டுப்பகுதியில் உள்ள யானையை வெள்ளம் அடித்துச்செல்லாமல் இருக்க, அணையின் ஷட்டர்களை அதிகாரிகள் மூடியுள்ள சம்பவம் கேரளாவில் நிகழ்ந்துள்ளது. 

Sponsored


Photocredits  : Twitter@sakshinews

Sponsored


கேரளாவில் பெய்துவரும் வரலாறு காணாத மழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிப்போயுள்ளது. அம்மாநிலத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பி, பல அணைகளின் மதகுகள் திறந்துவிடப்பட்டுள்ளன. 2403 அடி கொள்ளளவு கொண்ட இடுக்கி அணை 26 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பி, அதன் அனைத்து மதகுகளும் திறந்துவிடப்பட்டுள்ளன. இதனால், கேரள மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. 

Sponsored


இது இப்படியிருக்க, திருச்சூரில் உள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி மிகவும் புகழ்பெற்ற அருவியாகும். இங்கு, பல பாலிவுட் பிரபலங்கள் வந்து செல்வர். விக்ரம் நடித்த 'ராவணன்', ராஜமௌலியின் 'பாகுபலி' போன்ற படங்களின் சில காட்சிகள் இந்த இடத்தில்தான் படமாக்கப்பட்டது. இந்த அழகுமிகு அதிரப்பள்ளியில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

நேற்று காலை, யானை ஒன்று அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு அருகில் சல்லகுடி நதியில் நின்றுகொண்டிருந்தது. அதிக மழையால் பாறைகள் வழுக்க, யானை நகர முடியாமல் நீண்ட நேரமாக ஒரே இடத்தில் இருந்துள்ளது. முதலில் அதைக் கண்ட அப்பகுதி மக்கள், என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து, உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர், சுமார் நான்கு மணி நேரமாகப் போராடி யானையை காட்டுக்குள் விரட்டியடித்தனர். 

“காட்டுப் பகுதியில் இருந்து வழி தவறி வந்த யானை, அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு அருகே மிகச் சோர்வாக நின்றுகொண்டிருந்தது. அது,        24 மணி நேரமாக இங்கு இருப்பதாகத் தெரிகிறது. முதலில் நாங்கள் அங்கிருந்து யானையை அப்புறப்படுத்தவே முயன்றோம். ஆனால், யானையைச் சுற்றி நீர் இருந்ததாலும், பாறை மிகவும் வழுக்கியதாலும் அதனால் நகரமுடியவில்லை. இதையடுத்து, நாங்கள் பெரிங்கால்குத்து அணை நிர்வாகிகளிடம் ஒரு இரண்டு மணி நேரம் அணையின் கதவுகளை மூடிவைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டோம். அவர்களும்  அதற்குச் சம்மதித்தனர். நீரின் வருகை சற்று தணிந்த பிறகு, பட்டாசுகளை வெடித்து யானையைக் காட்டுக்குள் அனுப்பினோம்” என மூத்த வனத்துறை அதிகாரி கூறினார். தனித்த ஒரு யானைக்காக அணையின் மதகுகள் மூடப்பட்டது அப்பகுதியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.Trending Articles

Sponsored