அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட 300 குழந்தைகள்... நடிகை ப்ரீத்தியின் நண்பரால் சிக்கிக்கொண்ட சர்வதேசக் கும்பலின் தலைவன்Sponsoredகுழந்தைகளைக் கடத்தும் சர்வதேச கொள்ளைக்கூட்டத் தலைவனை மும்பை போலீஸார் கைதுசெய்துள்ளனர். இந்தியாவிலிருந்து குழந்தைகளை அமெரிக்காவுக்குக் கடத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது. 

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர், காம்ளேவால அக ராஜூபாய். இவர், கள்ளக்கடத்தல் உள்ளிட்ட மோசடிச் செயல்களில் ஈடுபட்டுவந்திருக்கிறார். இந்த நிலையில், முப்பை போலீஸார் ராஜூபாயைக் கைதுசெய்து விசாரித்துவருகின்றனர். 

Sponsored


இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``பாலிவுட் நடிகை ப்ரீத்தி சூட் அளித்த புகாரை அடுத்தே குழந்தைகளைக் கடத்தி விற்கும் கும்பலை அடையாளம் காண முடிந்தது. வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ள குழந்தைகளை மட்டுமே இவர்கள் குறிவைத்துக் கடத்தியுள்ளனர். அதுவும் குஜராத் மாநிலத்திலிருந்துதான் பெரும்பாலான குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளனர். பெற்றோர்களிடம் குழந்தைகளை விலைக்கு வாங்கி, அமெரிக்காவில் உள்ள கும்பலிடம் விற்றுவிடுவார்கள். 11 முதல் 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளைக் கடத்துவது இவர்களது வழக்கம். ஒரு குழந்தையை ரூ.45 லட்சம் வரை விற்பனைசெய்துள்ளனர். கடந்த 2007-ம் ஆண்டிலிருந்து இதுவரை 300 குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளனர். இதில், திடுக்கிடும் தகவல் என்னவென்றால், இந்தியாவிலிருந்து குழந்தைகளை அமெரிக்காவுக்குக் கொண்டுசெல்ல பாஸ்போர்ட் தேவை. இதிலும் நூதன முறையில் மோசடிசெய்தது ஆச்சர்யமாக உள்ளது. 

Sponsored


அதாவது, வாடகைக்குக் குழந்தைகளின் பாஸ்போர்ட்டுகளை விற்பனைசெய்ய முன்வருபவர்களை அடையாளம் கண்டு, அவர்களிடம் பாஸ்போர்ட்டை இரவல் வாங்குவார்கள். பாஸ்போர்ட்டில் உள்ள குழந்தைகளின் புகைப்படத்தின் முகச் சாயலில் உள்ள குழந்தைகளைத் தேர்வுசெய்வதுதான் பிரதான வேலை. அதன்பின்னர், குழந்தைகளுக்கு மேக்கப் போட்டு அமெரிக்காவுக்குக் கடத்தியுள்ளனர். குழந்தைகள் அமெரிக்காவுக்குச் சென்றவுடன், உரியவர்களிடம் பாஸ்போர்ட்டை ஒப்படைத்துவிடுவர். ஆனால், விமான நிலைய குடியுரிமை அதிகாரிகளிடமிருந்து இவர்கள் எப்படித் தப்பினார்கள் என்பது தற்போதுவரை தெரியவில்லை. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். 

நடிகை ப்ரீத்தியின் நண்பர் ஒருவரின் அழகுநிலையத்தில், கடந்த மார்ச் மாதம் இரண்டு பெண்களுக்கு மேக்கப் போட்டுள்ளனர். அவர்களுடன் மூன்று ஆண்கள் வந்துள்ளனர். அப்போது, இவ்வாறு மேக்கப் போடுங்கள் என அழகு நிலையத்தின் ஊழியர்களிடம் அறிவுறுத்தியுள்ளனர். இதனால், அவர்களது நடவடிக்கை சந்தேகத்தை எழுப்பியது. பாலியல் தொழிலுக்காகப் பெண்களை விற்பனை செய்வார்களோ என்ற சந்தேகத்தின் பேரில், ப்ரீத்திக்கு போன் செய்துள்ளார். அதன்பின், அழகுநிலையத்துக்கு விரைந்த ப்ரீத்தி, அந்த நபர்களிடம் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு, `அமெரிக்காவில் உள்ள அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப் போறோம்' எனக் கூறியுள்ளார். போலீஸ் நிலையத்துக்குப் போகலாம் என்று சொன்னவுடன், அவர்கள் பதற்றமடைந்து, அங்கிருந்து தப்பிக்க முயன்றுள்ளனர். அப்போது, அவர்களை ப்ரீத்தி தடுத்துள்ளார். இருப்பினும், இரண்டு குழந்தைகளுடன் ஒருவர் தப்பித்துச் சென்றுவிட்டார். 

இந்த விவகாரம் தொடர்பாக மூன்று நபர்களைக் கைதுசெய்தோம். இதில், போலீஸ் அதிகாரியின் மகன் ஒருவருக்கும் தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது. அவர்களது மொபைல் போன் கால்கள், வாட்ஸ்அப் ஆகியவற்றைத் தொடர்ந்து கண்காணித்துவந்தோம். இதைவைத்து குழந்தைகளை சர்வதேச அளவில் கடத்திவந்த கொள்ளைக்கூட்டத் தலைவன் ராஜூபாயைக் கைதுசெய்துள்ளோம். இந்த விவகாரம் தொடர்பான விசாரணையைத் துரிதப்படுத்தியுள்ளோம்'' என்றார்.  வரும் 18-ம் தேதிவரை ராஜூபாயை காவலில் எடுத்துள்ள போலீஸார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர். இவர்மீது, சிறார்களைத் தவறான வழியில் பயன்படுத்துவது உள்ளிட்ட இரண்டு பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. Trending Articles

Sponsored