சதுரங்கவேட்டை சிலைக் கடத்தல்... புத்தர் சிலை இந்தியா வந்த கதை!



சீனா, ஜப்பான் தொடங்கி தென் கிழக்கு ஆசிய நாடுகளில் புத்தருக்கு வைக்கப்பட்ட சிலைகளின் எண்ணிக்கை எண்ணிலடங்காதவை. கற்சிற்பங்கள் முதல் வெண்கலச் சிற்பங்கள் வரை பல நூற்றாண்டுகளாகப் புத்தருக்கு சிலை வைக்கப்பட்டிருக்கின்றன. இப்போது வரை உலக அளவில் அதிகமாக விற்பனையாகும் சிலைகளில் புத்தர் சிலையும் ஒன்று.

Sponsored


`ஆசையே துன்பத்துக்குக் காரணம்' என்ற புத்தரின் கொள்கைகள், கி.பி மூன்றாம் நூற்றாண்டில் இந்தியா, இலங்கை, திபெத் எனக் தேசங்கள் கடந்து பரவியது. உலகெங்கிலும் புத்தருக்கு எத்தனையோ கோயில்கள் மிகப் பிரமாண்டமாகக் கட்டப்பட்டிருந்தாலும் புத்தர் ஞானம் அடைந்த, `புத்தகயா' புண்ணியஸ்தலமாகக் கருதப்படுகிறது. பீகார் மாநிலத்தில் உள்ள புத்தகயாவுக்கு இன்றுவரை லட்சக்கணக்கான மக்கள் வந்து தரிசித்து வருகிறார்கள். பீகார் மாநிலத்தில் மட்டும் ஆயிரக்கணக்கான புத்த சிலைகள் நிறுவப்பட்டிருக்கின்றன. அதில் ஒன்றுதான் லண்டனில் மீட்கப்பட்டு தற்போது இந்தியா வரவிருக்கும் புத்தர் சிலை.

Sponsored


பீகார் மாநிலம் நாளந்தாவில், சுமார் 60 வருடங்களுக்கு முன் இந்தியத் தொல்பொருள் துறையினர் அகழ்வாராய்ச்சி மேற்கொண்டனர். நூற்றுக்கணக்கான சிலைகள் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்டன. அதில் ஒன்றுதான் 12-ம் நூற்றாண்டில் செய்யப்பட்ட மூன்று அடி வெண்கல புத்தர் சிலை. அந்தச் சிலைகள் அனைத்தும் நாளந்தாவில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டன. 1961-ல் 14 சிலைகளும் 1962-ல் 2 சிலைகளும் திருடுபோயின. சிலைகளை மீட்க இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும், திருடுபோன எந்தச் சிலைகளும் கடந்த 50 ஆண்டுகளில் மீட்கப்படவில்லை. 

Sponsored


இந்திய அரசு ஒருபுறம் தேடுதல் பணியைத் தொடர்ந்தாலும், மறுபுறம் கலைப் பொக்கிஷங்களை மீண்டும் இந்தியாவுக்கு மீட்டுக் கொண்டுவர வேண்டும் என்ற தன்னார்வத்தில் பல குழுக்கள் உலக அளவில் செயல்பட்டு வருகின்றன. அப்படிப்பட்ட குழுக்களில் ஒன்றுதான் `இந்தியா பிரைட் புரோஜெக்ட்' (India Pride Project). இந்த அமைப்பின் பெரு முயற்சியால்தான் இந்தப் புத்தர் சிலை மீட்கப்பட்டிருக்கிறது.

 உலகளவில் கலைப்பொக்கிஷங்களின் ஏலம் எங்கு நடந்தாலும் அதில் இந்தியப் பொக்கிஷங்கள் இருக்கிறதா என்பதைக் கண்டறியப்படும் என்கிறார், `இந்தியா பிரைட் புராஜெக்ட்'டின் நிறுவனர் விஜயகுமார். சிங்கப்பூரில் வசித்து வரும் விஜயகுமார் மற்றும் அவரது நண்பர்களின் முயற்சியால்தான் உலக அளவில் பல இந்தியச் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டு, அதில் சில சிலைகள் மீட்கப்பட்டிருக்கின்றன.

விஜயகுமார் கூறுகையில், ``சிலைக் கடத்தல்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அதைத் தடுக்க வேண்டும். மீண்டும் சிலைகளை மீட்டுக்கொண்டு வரவேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். ஒருமுறை இந்தியத் தொல்லியல் துறையின் ஓய்வுபெற்ற அதிகாரி பிஸ்வாஸை டெல்லியில் சந்தித்தேன். அப்போது, `நாளந்தாவில் காணாமல்போன சிலை ஒன்று அமெரிக்காவில் இருப்பதாகத் தெரியவருகிறது. ஆனால், அதற்கான எந்தவித சாட்சியும் நம்மிடம் இல்லை' என்றேன். சில நாள்களுக்குப் பின் பிஸ்வாஸ் என்னைத் தொடர்புகொண்டு, `பணியில் இருந்தபோது, நாளந்தாவில் இருந்த சிலைகளைப் புகைப்படம் எடுத்திருக்கிறேன்' என்று கூறி சிலைகளின் படத்தை எனக்கு அனுப்பிவைத்தார். அமெரிக்காவில் உள்ள சிலையை மீட்கும் முயற்சியில் இருந்த சமயத்தில்தான் லிண்டா என்பவர் என்னைத் தொடர்புகொண்டார்.

உலக அளவில் சிலைக் கடத்தலுக்கு எதிராக இயங்கிவரும் குழுவில் லிண்டாவும் ஒருவர். இந்த மார்ச் மாதம், நெதர்லாந்தில் நடக்கும் கலைக் கண்காட்சிக்குச் சென்ற லிண்டாவிடம், இந்தியச் சிலைகள் ஏலம் விடப்பட்டால் புகைப்படம் எடுத்து அனுப்புமாறு கூறியிருந்தேன். அவரும் சில புத்தர் சிலைகள் ஏலத்தில் இருப்பதாகத் தெரிவித்து புகைப்படம் எடுத்து அனுப்பினார். அதில் இருந்த ஒரு புத்தர் சிலை மட்டும் எங்கேயோ பார்த்ததுபோல் இருந்தது. பிஸ்வாஸ் கொடுத்த சிலைகளின் படம் நினைவுக்கு வர, லிண்டா அனுப்பிய படத்தையும் பிஸ்வாஸ் கொடுத்த புகைப்படத்தையும் பார்த்தபோது, இரண்டும் ஒரே சிலை என்ற முடிவுக்கு வந்தோம். ஆனால், அந்தச் சிலையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு விற்பனைக்கு வந்திருப்பதையும் உறுதி செய்தோம். புத்தரின் வலது பக்கத்தில் இருந்த இலைகளை ஒடித்து, இடதுபக்கம் ஒட்டவைத்திருக்கிறார்கள். 40,000 யூரோவுக்கு புத்தர் சிலையை விற்க இருந்தனர் லண்டன் விற்பனையாளர்கள்'' என்றார்.

நெதர்லாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட புத்தர் சிலை குறித்து இந்தியத் தொல்பொருள் துறைக்கு உடனடியாகத் தகவல் கொடுக்கப்பட்டது. லிண்டாவும், டட்சு போலீஸைத் தொடர்புகொண்டு, புத்தர் சிலையின் உண்மைத்தன்மையை எடுத்துரைத்தார். ஆனால், லண்டன் சிலை விற்பனையாளர்கள் இதை மறுத்ததால், லண்டனில் உள்ள மெட்ரோபாலிட்டன் போலீஸுக்குத் தகவல் தரப்பட்டது.

சிலைகளை ஆய்வு செய்யும் நிபுணர்கள் மெட்ரோபாலிட்டன் போலீஸ் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டு, புத்தர் சிலையை ஆய்வு செய்தனர். பழைய புகைப்படத்தோடு ஒப்பிட்டுப் பார்த்து, இது இந்தியச் சிலைதான் என்று சான்றளித்தனர். பலபேர் கைமாறி, தற்போது இந்த லண்டன் விற்பனையாளருக்குச் சிலை வந்தடைந்திருக்கிறது. தாங்கள் திருடர்கள் இல்லை, நாங்களும் சிலையை விலைக்குத்தான் வாங்கியிருக்கிறோம். ``சிலையை ஒப்படைப்பதில் எந்தவித தயக்கமும் இல்லை'' என்று சிலையை லண்டன் போலீஸிடம் ஒப்படைத்திருக்கிறார்கள், சிலை விற்பனையாளர்கள். ``இந்தச் சிலை எங்கிருந்து வந்ததோ, அதை மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்கிறோம்'' என்று பிரிட்டனின் கலை, பாரம்பர்ய மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் மைக்கேல் எல்லிஸ் தெரிவித்தார். இதையடுத்து, அந்தச் சிலை இந்தியாவின் 72-வது சுதந்திர தினத்தில் லண்டனில் உள்ள இந்தியத் தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டது.



Trending Articles

Sponsored