ஸ்டாலின்.. டிடிவி.. எடப்பாடி.. 14 வி.ஐ.பிக்களுக்கு மிரட்டல் விடுத்தது யார்?! #VikatanInfographicsSponsored'வெடிகுண்டு மிரட்டல்' என்கிற செய்தியை அவ்வப்போது தினசரிகளில் படித்துக்கொண்டுதான் இருக்கிறோம். முதலமைச்சர் வீட்டில், ஜவுளிக்கடையில், பள்ளிக்கூடத்தில், கல்லூரியில், நடிகர் வீட்டில், ரயில் நிலையத்தில், பேருந்து நிலையத்தில், டிஜிபி அலுவலகத்தில், விமான நிலையத்தில் இப்படி ஏதாவதொரு இடத்தில் குண்டு வைத்ததாக ஒரு மர்ம நபர் தொலைபேசியில் மிரட்டல் விடுப்பார். மறுநாள் அது செய்தித்தாள்களில் வரும். யார் இந்த மர்ம நபர்கள்? இவர்களின் நோக்கம்தான் என்ன, இதுகுறித்து சென்னை காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் ஐ.பி.ஸ் அவர்களுடன் பேசினேன்.

"நேற்றுகூட சுதந்திர தின நிகழ்ச்சிக்கான வேலைகளில் இருக்கும்போது எங்கள் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு அழைப்பு வந்தது. 'கோட்டையில் குண்டு வெடிக்கும். எடப்பாடி பழனிசாமி கொடி ஏற்ற முடியாது" என்று சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்து விட்டார். உடனே அவசர பாதுகாப்புகளை முடுக்கிவிட்டோம், இதில் ஏதேனும் வெளிநாட்டு சதி இருக்கிறதா என்று ஆராயத் தொடங்கியது இன்னொரு குழு. இதற்கிடையே அலைபேசியில் பேசியவரை கண்டுபிடித்து விசாரணை நடத்தினால் "என்னோட டிஎன்ஏ-ல சாட்டிலைட் அட்டாச் பண்ணியிருக்கு. அதான் அப்படி பண்ணேன்னு ஏதேதோ உளறினார். அவரைக் கைதுசெய்து மனநிலை பாதிக்கப்பட்டவரா என்பதற்கான விசாரணைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதுமாதிரி வெடிகுண்டு மிரட்டல் அவ்வப்போது வரும். மிரட்டல் விட்டதும், ஒருபுறம் பாதுகாப்பு பணிகளைத் துரிதப்படுத்துவோம், இன்னொரு புறம் மிரட்டல் விட்டவரை 'ட்ரெஸ்' செய்வோம். மிரட்டல் விட்டவரைப் பிடித்து விசாரித்துப் பார்த்தால், பெரும்பாலும் மனநிலை பாதிக்கப்பட்டவராகத்தான் இருக்கிறார்கள். அதேசமயம் ஒவ்வொருமுறை அழைப்பு வரும்போதும் போன் செய்தவர் மனநிலை பாதிகப்பட்டவராகத்தான் இருப்பார் என்று மெத்தனமாக இருக்க முடியாது. இதை ஒருவகையில் எங்களுக்குக் கொடுக்கப்பட்ட சவால் மிகுந்த ஒத்திகையாக எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்" என்றார்.

Sponsored


Sponsored


இம்மாதிரி குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள்தான் அதிகம் என்று தெரியவர அதுகுறித்து மேலும் தெரிந்து கொள்வதற்காக உளவியல் மருத்துவர் அசோகன் அவர்களிடம் பேசினேன்..

"தொலைபேசி வழியாக வெடிகுண்டு மிரட்டல் விடுபவர்களின் மனநிலையை மூன்றுநிலைகளாக பிரிக்கலாம். 

முதல்நிலை; ஒரு மோசமான தோல்வியை அல்லது நம்பிக்கை துரோகத்தை வாழ்க்கையில் சந்தித்திருப்பார்கள். அது வெளியே சொல்ல முடியாததாக இருக்கும். அல்லது வெளியே பகிர்வதற்குக்கூட யாரும் உடன் இருக்க மாட்டார்கள். ஒருகட்டத்தில் அது அதீத மனஅழுத்தமாக மாறும். அந்த அழுத்தமானது திடீரென மனதிலிருந்து பீறிட்டு வெறியாக மாறும். இந்த நிலையில் அவர்கள் அடைந்த தோல்வியோ, நம்பிக்கை துரோகமோ அது ஒரு தனிநபர் மீது அல்லாமல் அரசின் மீதோ அல்லது சமூகத்தின் மீதோ இருந்தால் அவர்களை பழி தீர்க்க நினைப்பார்கள். அதிலொரு விதமாக ஏதாவதொரு பொதுஇடத்தில் வெடிகுண்டு வைத்ததாக மிரட்டிவிட்டு போனை வைத்துவிடுவார்கள். தன்னை பழிவாங்கிய சமூகத்தை பதிலுக்கு பழிவாங்கியதாக ஒரு ஆசுவாசம் அவர்களுக்கு கிடைக்கும். அந்த ஆசுவாசத்திற்காக செய்கிறவர்கள்தான் இவர்கள்.

இரண்டாவது நிலை; தன்னைப் பற்றிய ஒரு தாழ்வு மனப்பான்மை நிமித்தம் எப்போதும் ஏதோ பதற்றத்துடன் இருப்பவர்கள். வேறொரு மறைக்கப்பட்ட அடையாளத்தின் வழி தன்னை தைரியம் மிக்கவனாக காட்டிக் கொள்வதற்காக இவ்வாறு செய்வார்கள். சமூக வலைதளங்களில் போலி கணக்கு ஆரம்பித்து வக்கிரங்கள் செய்பவர்களையும் இதனோடு பொருத்திக் கொள்ளலாம்.

மூன்றாவது நிலை; முற்றிலும் மனநிலை பிறழ்ந்தவர்கள். தான் என்ன செய்கிறோம் என்கிற பிரக்ஞை இவர்களுக்கு இருக்காது. ஒரு தவறு செய்தால் அதிலிருந்து, அங்கிருந்து தப்பிக்க வேண்டும் என்கிற முனைப்பும் இன்றி, குற்றம் செய்த இடத்திலேயே முழித்துக் கொண்டு இருப்பார்கள். இவர்கள் ஏன் செய்கிறார்கள் என்கிற காரணம் எளிதில் புலப்படாது. தன் காதில் வந்து யாரோ செய்யச் சொன்னதாக சொல்வார்கள். 'உலகம் அழியப்போகுது அதனால் செய்தேன்' என்பார்கள். சிலர் ஏன் செய்தோமென்று சொல்லத் தெரியாமல் முழிப்பார்கள். ரொம்பவும் பரிதாபத்துக்கும் உடனடி சிகிச்சைக்கும் உள்ளாக வேண்டியவர்கள் இவர்கள்.

இவர்களைத் தவிர, இன்னொரு சாரார் இருக்கிறார்கள். இவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் அல்ல. விளையாட்டுக்காக செய்பவர்கள், நண்பனிடம் சவால் விட்டு செய்து காண்பிக்கிறேன் பார் என்கிற திமிருடன் செய்பவர்கள், குடித்துவிட்டு போதை அதிகமாகி செய்பவர்கள். ஆளுமை பாதிப்பு ஏற்பட்ட பிரிவின் கீழ் இவர்கள் வருவார்கள். இவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள். மற்ற மூன்று தரப்பினர் இவ்வாறு செய்வதற்கு நாமும் ஏதோ ஒருவகையில் காரணம் என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும்" என்றார்.Trending Articles

Sponsored