அட்டவணைப்படி தேர்வுகள் நடைபெறும் - ரயில்வே தேர்வாணையம் அறிவிப்பு!



Sponsored



வாஜ்பாய் மறைவையொட்டி பல்வேறு மாநிலங்களில் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இன்று அட்டவணைப்படி ரயில்வே பணியாளர் தேர்வுகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பா.ஜ.க-வின் மூத்த தலைவரும் இந்தியாவின் முன்னாள் பிரதமருமான அடல் பிஹாரி வாஜ்பாய், வயது மூப்பின் காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் ஒரு மாதத்துக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்தார். சில தினங்களுக்கு முன், அவர் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டு, நேற்று மாலை உயிரிழந்தார். டெல்லியில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள வாஜ்பாயின் உடலுக்கு நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலிசெலுத்திவருகின்றனர். அவரின் இறுதி ஊர்வலம் இன்று மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. வாஜ்பாயின் மறைவையொட்டி 12 மாநிலங்களில் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசு சார்பில் அரை தினம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 7 நாள்களுக்கு மத்திய அரசு துக்கம் அனுசரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Sponsored


முன்னதாக, நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் இன்று ரயில்வே பணியாளர் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. திடீரென வாஜ்பாயின் மறைவினால் விடுமுறை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து குழப்பம் ஏற்பட்டது. இந்நிலையில், இன்று அட்டவணைப் படி தேர்வுகள் நடைபெறும் எனத் தேர்வாணையம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Sponsored


இதுகுறித்துப் பேசிய ரயில்வே தகவல் மற்றும் செய்தித் தொடர்பாளர் ராஜேஷ் பாஜ்பாய், “இன்று அறிவிக்கப்பட்டிருந்த ரயில்வே பணியாளர் தேவுகள் அட்டவணைப்படி நடைபெறும். இது தொடர்பாக ரயில்வே தேர்வாணைய இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் இருந்து விண்ணப்பித்திருந்த 4.36 லட்சம் தேர்வாளர்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. மேலும், கேரளாவில் மழை வெள்ளம் காரணமாக அங்கு தேர்வு நடத்தமுடியாத சூழ்நிலை உள்ளது. எனவே, கேரளாவில் மட்டும் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன” எனக் கூறினார். கேரளாவில் இருந்து மட்டும் சுமார் 27,000 பேர் ரயில்வே பணியாளர் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது



Trending Articles

Sponsored