இறுதிச் சடங்கு செய்த வளர்ப்பு மகள் - டெல்லி ஸ்மிருதி ஸ்தலில் வாஜ்பாய் உடல் தகனம்!Sponsoredமுன்னாள் பிரதமரும் பா.ஜ.க-வின் மூத்த தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாயின் உடல் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக நடந்த இறுதி ஊர்வலத்தில் பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் நடந்து சென்றனர். 

வயது மூப்பின் காரணமாக நீண்ட காலமாக அரசியலிலிருந்து ஓய்வில் இருந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு சிறுநீரகத் தொற்று ஏற்பட்டது. நோய்த் தொற்று காரணமாகக் கடந்த ஜூன் மாதம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், சிகிச்சை பலனளிக்காததால் நேற்று மாலை 5.05 மணிக்கு வாஜ்பாய் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் டெல்லி கிருஷ்ணா மேனன் பார்க்கில் உள்ள அவரது இல்லத்தில் தலைவர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

Sponsored


பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ், பா.ஜ.க தலைவர் அமித் ஷா, பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலிசெலுத்தினர். பின்னர், பா.ஜ.க தலைமையகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

Sponsored


அஞ்சலிக்குப் பின் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் வாஜ்பாய் உடல் வைக்கப்பட்டு இறுதி ஊர்வலம் மதியம் 1.30 மணிக்கு தொடங்கியது. பா.ஜ.க அலுவலகத்திலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ள ஸ்மிருதி ஸ்தல் என்ற இடத்துக்கு அவரது உடல் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது. அப்போது பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் பாதுகாவலர்கள் புடைசூழ 4 கி.மீ தூரம் நடந்தே சென்றனர்.

இதேபோல் இறுதி ஊர்வலத்தில் பூடான் மன்னர், ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர், வங்கதேசம், நேபாள அமைச்சர்கள்  உள்ளிட்ட வெளிநாட்டு தலைவர்களும் பங்கேற்றனர். மேலும் பல்லாயிரக்கணக்கான மக்களும் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர். பின்னர் ஸ்மிருதி ஸ்தல் கொண்டுவரப்பட்ட அவரது உடலுக்கு முப்படை வீரர்களின் மரியாதை செய்யப்பட்டது. ராம்நாத் கோவிந்த், மோடி, ராகுல் காந்தி, மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். அவர் உடல் மீது போர்த்தப்பட்டிருந்த தேசியக் கொடி அவரது பேத்தி நிகாரிகாவிடம் ஒப்படைக்கப்பட்டது. வாஜ்பாய் வளர்ப்பு மகள் நமீதா அவருக்கு இறுதிச் சடங்குகளைச் செய்தார். இறுதிச் சடங்குகள் செய்யப்பட்ட பிறகு, வாஜ்பாய் உடல் ஸ்மிருதி ஸ்தலில் தகனம் செய்யப்பட்டது. Trending Articles

Sponsored