`என் மாநில மக்கள் நிலைமை மனதைப் பிசைகிறது' - நிவின் பாலி உருக்கம்!



கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளம் தொடர்பாக நடிகர் நிவின்பாலி உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கேரளா, வீழ்ச்சியிலிருந்து எழுந்து வீறுநடைபோடும் என உறுதிபட தெரிவித்துள்ளார்.

Sponsored


இயற்கையின் கோரப் பசிக்கு கேரளா உணவாகியுள்ளது. எங்கு நோக்கினும் வெள்ளம், நிலச்சரிவு, தண்ணீர் என நான்கு திசைகளும் பேரிடர்களாலே நிரம்பிக் கிடக்கிறது. அம்மாநில மக்களின் கண்கள் சூரிய வெளிச்சத்தைப் பார்த்தே பல நாள்களானதால், நீர் தழும்பி வாடிக்கிடக்கின்றன . `கேரளாவை மீட்டெடுப்போம்' என்ற உறுதியில் அண்டை மாநிலத்தின் கரங்கள் உதவிக்காக நீண்டுள்ளன. இந்நிலையில் நடிகர் நிவின்பாலி கேரளா வெள்ளம் குறித்து உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Sponsored


அதில், ``கடவுளின் தேசம் எனப்படும் கேரளாவில் பிறந்தவன் என்பதிலும், அந்தக் கேரளா, இந்தியா என்கிற மாபெரும் தேசத்தின் ஒரு பகுதி என்பதில் சிறுவயது முதலே பெருமைப்பட்டுக்கொண்டிருந்தேன்; எப்போதும் பெருமைப்பட்டுக்கொண்டிருப்பேன். ஆனால், அந்தக் கடவுளின் தேசம் இன்று வெள்ளத்தாலும், நிலச்சரிவாலும் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளது. பல நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். பலர் தங்கள் உடமையை இழந்து, உணவு, வீடு,உள்ளிட்ட அடிப்படை வசதியின்றி தவித்து வருகின்றனர். என் மாநில மக்களின் நிலமை என் மனதைப் பிசைகின்றது. இப்படியான சூழலிலும், எனக்குள் நம்பிக்கை கீற்றைப் பாய்ச்சுவது, என் தேச மக்களின் ஒற்றுமைதான். `வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற தத்துவத்தில் நம்பிக்கை உள்ள என் தேசத்து மக்கள், என் மாநிலத்தையும், மாநில மக்களையும் கைவிட மாட்டார்கள் என நம்புகிறேன். வரலாறு காணாத இந்த வீழ்ச்சியிலிருந்து வீறுகொண்டு எழுந்து, மீண்டும் ராஜநடை போடும் கேரளா என்பதில் ஐயமே இல்லை. உங்களால் முடிந்த அளவுக்கு அத்தியாவசியப் பொருள்களை உடனடியாகக் கேரளாவுக்கு அனுப்புங்கள். கடவுளின் தேசத்தை மனிதநேயம் மீட்டுக் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் நான் உள்ளேன். கைகூப்பி வேண்டுகிறேன்” என உருக்கமாக அவர் தெரிவித்துள்ளார்.

Sponsored




Trending Articles

Sponsored