"இதுதாம்மா என் பென்ச்..!" - கேரளாவில் மகள் பள்ளிக்குள் ஒரு காட்சி #SpotVisit #KeralaFloods



வயநாடு கல்பெட்டாவுக்கு அருகில் மணியங்கோடு ஆற்றோரத்தில் இருக்கிறது லட்சுமி அம்மாவின் வீடு. அவருக்கு வயது 40. பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். கணவர் 3 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.  மூன்று பெண் குழந்தைகள். ராதிகா,சிதாரா,யாகேது. பிள்ளைகளில் இரண்டு பேர் பள்ளிக்குச் செல்கிறார்கள். அவரது அம்மாவும் அவருடன்தான் வசிக்கிறார். பக்கத்தில் இருக்கிற ஓர் ஆசிரியரின் வீட்டில் வீட்டு வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றிவருகிறார்.  அவர்கள் பகுதியில் 8ம் தேதி காலையில் இருந்தே தண்ணீர் வர ஆரம்பித்துவிட்டது. பெரிய விளைவுகளை ஏற்படுத்துமென அப்போது லட்சுமி அம்மாவுக்குத் தெரியாமல் போனது. நேரம் போக போக தண்ணீரின் அளவு அதிகரித்தது. வேறு யாரும் உதவிக்குக் கூட ஆளில்லாத நிலை. இரவு 8 மணிக்குத் திடீரென தண்ணீர் வீட்டை ஆக்கிரமித்தது. மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறி போகிற லட்சுமியம்மா பிள்ளைகளைக் காப்பாற்றினால் போதுமென எல்லோரையும் கூட்டிக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறுகிறார். மழை இன்னும் அதிகமானது. தண்ணீரின் அளவு அதிகரித்தது.

பிள்ளைகளைப் பிடித்துக் கொண்டு மழையில் நனைந்து கொண்டே உதவிக் கேட்டு கத்துகிறார். பெயர் தெரியாத யாரோ ஒருவர் பரிசலில் லட்சுமி அம்மா இருக்கிற இடத்திற்கு வந்து அவர்களைப் பரிசலில் ஏற்றிச் செல்கிறார். லட்சுமி அம்மா குடும்பத்தைத் தவிர வேறு ஒரு குடும்பத்தாரும் பரிசலில் இருக்கிறார்கள். எப்படியாவது தண்ணீரைக் கடந்து கல்பெட்டா நகரத்திற்குச் சென்றால் போதும். நனைந்து கொண்டே பயணிக்கிறார்கள். இரவு 10 மணிக்குத்  தண்ணீரின் வேகத்தில் பரிசல் கட்டுப்பாட்டை இழந்து வேகமாகச் சுழல ஆரம்பிக்கிறது. பிள்ளைகளைக் கெட்டியாக பிடித்துக் கொள்கிறார். பிள்ளைகள் பயத்தில் அம்மா அம்மா எனக் கத்துகிறார்கள். தோணியைக் கட்டுப்படுத்த பெயர் தெரியாத மனிதர் முயற்சி செய்கிறார். கிட்டத்தட்ட எல்லாம் முடிந்துவிட்டதென லட்சுமி அம்மா நினைத்துக் கொள்கிறார். நல்ல வேளையாகப் பரிசல்  ஓரிடத்தில் நின்றுவிடுகிறது. அங்கிருந்து நடந்தே நகரத்திற்கு வருகிறார்கள். பிள்ளைகள், வயதான பாட்டியென எல்லோரும் நனைந்துவிடுகிறார்கள். மழையில் எங்கே செல்வதென தெரியாமல் இருக்கிற லட்சுமியம்மா குடும்பத்தாரை முண்டேரியில் இருக்கிற அரசுப் பள்ளியில் தங்க வைக்கிறார்கள். அன்றைய இரவு பத்து குடும்பங்கள் வரை அங்கே தங்க வைக்கப்படுகிறார்கள். மாற்று உடை ஏதும் இல்லாததால் அன்றைய இரவு நனைந்த உடையிலேயே தங்குகிறார்கள். நேரம் ஆக ஆகப் பல குடும்பங்களும் லட்சுமி அம்மாவைப் போலவே வீடுகளை இழந்த பலரும் பள்ளியில் அடைக்கலமாகிறார்கள். முண்டேரி அரசுப் பள்ளி நிவாரண முகாமாக மாறுகிறது.

Sponsored


Sponsored


9ம் தேதி 1200க்கு மேற்பட்டோர் முகாமில் தஞ்சமடைகிறார்கள். அவர்களுக்கான உணவு, உடை அத்தியாவசியப் பொருட்களை தமிழகம் மற்றும் பெங்களூரிலிருந்து வந்த தன்னார்வ தொண்டர்கள் கொடுத்திருக்கிறார்கள்.  நேற்று வயநாடு முண்டேரி  முகாமிற்குச் சென்றிருந்தோம். முகாம் வாசலில் எல்லோருக்குமான உணவை ஒரு சிலர் தயார் செய்து கொண்டிருந்தார்கள். முகாமிலிருந்த 90 சதவிகித மக்கள் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள். ஒவ்வொரு பள்ளி அறையிலும் நான்கு குடுப்பங்கள் வரை தங்கியிருக்கிறார்கள். பிறந்த குழந்தையிலிருந்து 75 வயதான முதியவர்கள் வரை இருக்கிறார்கள்.

Sponsored


ஐந்தாம் வகுப்பு B பிரிவிலிருந்த  லட்சுமி அம்மாவைச்  சந்தித்தோம். நான்கு குடும்பங்கள் இருக்கிற அந்தப் பள்ளியறையில் தன்னுடைய அம்மா மற்றும் பிள்ளைகளோடு அமர்ந்திருந்தார். "நாங்க தப்பிச்சு வந்தத இப்ப கூட நம்ப முடியல, கடவுளுக்கு நன்றி சொல்லியே ஆகணும். வீடு இந்நேரம்  தண்ணியில மூழ்கியிருக்கும். மழை விட்டு தண்ணி எல்லாம் வடிந்து போனதுக்கு பிறகுதான் வீட்டுக்குப் போகணும். வீட்டுக்குள்ள மண்ணு தேங்கியிருக்கும். அத எடுத்து வீட்ட சுத்தம் பண்ணவே ரெண்டு நாளுக்கு மேல ஆகிடும், சீக்கிரம் வீட்டுக்கு போகனும். இங்க வந்து இன்னையோட பத்து நாள் ஆச்சு. தேவையான எல்லாமே இங்க குடுக்குறாங்க. உதவி செய்த எல்லோருக்கும் நன்றி" என்றவரின் குரல் உடைய ஆரம்பித்தது.  தன்னுடைய பத்து  வயது மகள் ராதிகாவை அழைத்து பக்கத்தில் வைத்துக்கொண்டு "இவ இந்த பள்ளிகூடத்துலதான் படிக்கிறா, நாங்க இப்ப தங்கியிருக்குறது ராதிகா படிக்கிற கிளாஸ்தான் என்றார். ராதிகா "இங்கதான் நான் உட்கார்ந்து இருப்பேன்" என ஒரிடத்தைக் காண்பித்து  பெருமிதத்தில் சிரிக்க ஆரம்பிக்கிறார். எப்படி அந்தச் சிரிப்பை ரசிக்க முடியுமெனத் தெரியாமல் நாம் வெளியேறினோம்.

மீண்டு வருவது மட்டுமல்ல; மீட்டு வருவதும் மனிதம்தான். கேரளாவிற்குக் கைகொடுப்போம்.  



Trending Articles

Sponsored