அமேசானுக்குப் போட்டியாகக் களம் இறங்கும் ரிலையன்ஸ் இண்டஸ்டரீஸ்!Sponsoredநாளிதழ்களில் பக்கம்பக்கமாக விளம்பரம் செய்து, இணையத்தில் தள்ளுபடி விலையில் பல பொருள்களை விற்பனை செய்துவருகின்றன அமேசானும் ஃபிளிப்கார்ட்டும். இந்த நிறுவனங்களுக்கு செக் வைக்கும் வகையில், விரைவில் வெளியாக உள்ளது மத்திய அரசின் புதிய இ-காமர்ஸ் கொள்கை வரைவு. இந்தக் கொள்கை முடிவைச் செயல்படுத்தும்போது, ரிலையன்ஸ் இண்டஸ்டரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி இ-காமர்ஸ் துறையில் கொடிகட்டிப் பறப்பார். அதற்கான அனைத்து வேலைகளும் நடந்துவருவதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. 

ஃபிளிப்கார்ட் நிறுவனத்தை வால்மார்ட் நிறுவனம் கையகப்படுத்துவதன் மூலம், அமேசான் நிறுவனத்துக்குப் போட்டியாக வால்மார்ட்-ஃபிளிப்கார்ட் நிறுவனம் இருக்கும் என்று எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், அமேசான் நிறுவனத்துக்குப் போட்டியாகக் களம் இறங்கிவருகிறது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்டரீஸ் நிறுவனம். இதற்கு ஆதரவாக மத்திய அரசின் இ-காமர்ஸ் கொள்கை முடிவின் வரைவு தயாராகிவருவதாகவும், இதனால் இ-காமர்ஸ் வணிகத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்துக்குப் பெருமளவில் சாதகமாகவும், இனிவரும் காலத்தில் இ-காமர்ஸ் வணிகத்தில் ரிலையன்ஸ் முக்கிய இடத்தைப் பிடிக்கும் வகையில் இருக்கும் என்று கணித்துள்ளனர் இந்தத் துறையில் உள்ளவர்கள். 

Sponsored


ஏற்கெனவே, இ-காமர்ஸ் பிசினஸில் வெளிநாட்டு நிறுவனங்கள் நேரடியாகக் களம் இறங்க முடியாத நிலை இருக்கிறது. இதனால், அமேசான் நிறுவனம் முழுமையாக இந்தியாவுக்குள் நுழைய முடியாத நிலையில் உள்ளது. இந்நிலையில், புதிய கொள்கை வரைவில் தற்போதைய விதிகளிலிருந்து சில சலுகைகள் கிடைக்கும் என அமேசான் நிறுவனம் உள்பட இ-காமர்ஸ் துறையில் இருக்கும் பலரும் நம்பிக்கொண்டிருந்தனர். ஆனால், புதிய கொள்கை வரைவில் ஏற்கெனவே உள்ள விதிமுறைகளுடன் பல புதிய கட்டுப்பாடுகளையும் கொண்டு வர இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Sponsored


இ-காமர்ஸ் குறித்த புதிய கொள்கை வரைவு, ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு முழுமையாகச் சாதகமாகவே இருக்கும் என்ற பேச்சு நிலவுகிறது. இதைச் செயல்படுத்தும்போது ஃபிளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனங்களின் பெரிய தள்ளுபடிச் சலுகைகளுக்கும் அறிவிப்புகளுக்கும் சிக்கல் என்கின்றனர்.

ரிலையன்ஸ் நிறுவனம், ஏற்கெனவே நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் தனது ஸ்டோர்களையும் பொருள்களைச் சேர்த்துவைப்பதற்கான குடோன்களையும், பொருள்களை ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்துக்குக் கொண்டுசெல்வதற்கான வசதிகளையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், ரிலையன்ஸ் ஜியோ நெட்வோர்க் மூலம் மொபைல் தளத்தையும் விரிவாக்கிவருகிறது. ரிலையன்ஸ் ஸ்டோர்களில் உள்ள பொருள்களை ரிலையன்ஸ் ஜியோ நெட்வோர்க் மூலம் இ-காமர்ஸ் வணிகத்தின் மூலம் விற்பனையை விரிவுபடுத்தி அனைவருக்கும் தனது பொருள்களைக் கொண்டுசெல்ல முடியும் என்று நம்பி, அதற்கான வேலைகளில் இறங்கியுள்ளது ரிலையன்ஸ் இண்டஸ்டரீஸ் நிறுவனம். 

புதிய இ-காமர்ஸ் கொள்கை வரைவில், தேசியப் பாதுகாப்புக்காக சமூக வலைதளங்கள் மற்றும் தகவல் தளங்களின் விவரங்கள் அரசின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுசெல்லவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது. உள்நாட்டில் உள்ள நிறுவனங்கள், தங்களுடைய வர்த்தகப் பயன்பாட்டுக்கு வெளிநாட்டு இணையதளங்களையும், சேவைகளையும் பயன்படுத்துவதற்கும் கட்டுப்பாடு கொண்டுவரும்வகையில் விதிமுறைகளில் சேர்க்கப்பட்டுள்ளது. இதன்மூலம், இணையத்தின் வழியே நடக்கும் பணப் பரிமாற்றங்களையும் மத்திய அரசு தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிவுசெய்துள்ளது. 

சீனாவில் ஏற்கெனவே இதேபோன்ற விதிமுறைகள் உள்ளதால் அங்கு அமேசான் தனது சர்வர்களையும் இதர சொத்துகளையும் உள்ளூர் பங்குதாரர்களுக்கு விற்பனை செய்யவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. கூகுள் நிறுவனம் தன்னுடைய விரிவாக்கத்துக்கு உள்ளூர் பங்குதாரர்களை வலைவீசித் தேடவேண்டிய நிலைக்கு உள்ளாகியிருக்கிறது. 

இந்தியாவின் புதிய இ-காமர்ஸ் கொள்கை வரைவில் இந்திய நிறுவனங்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வகுக்கப்பட்டிருப்பதால், உள்நாட்டு நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவும் எனச் சொல்லப்படுகிறது. `இதை முழுமையாக முகேஷ் அம்பானியும் அவரது நிறுவனங்களும் பயன்படுத்திக்கொள்வார்கள். இதன்மூலம், டிஜிட்டல் சந்தையில் அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெஃப் பெசொஸை முந்தி முகேஷ் அம்பானி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்' என்றும் கணித்துள்ளது, சர்வதேச நிதி சார்ந்த செய்திகளை வழங்கிவரும் ப்ளூம்பெர்க் நிறுவனம்.Trending Articles

Sponsored