`ஒரு கிலோ மிளகாய் விலை ரூ.400!’ - கேரள மக்களை மிரட்டும் காய்கறி விலையேற்றம்Sponsoredகேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கிக் கிடக்கிறது. 

Photo Credit: Twitter/@NDRFHQ

Sponsored


கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளம் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத பேரழிவுகளை ஏற்படுத்தியுள்ளதாகச் சொல்கிறது அம்மாநில அரசு. கடந்த 10 நாள்களுக்கும் மேலாக கடவுளின் தேசத்தைப் புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கும் கனமழைக்கு இதுவரை 350க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். சுமார் 50 லட்சம் மக்கள், தங்கள் வாழ்விடங்களை விட்டு இடம்பெயர்ந்திருப்பதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வேதனை தெரிவித்திருக்கிறார். நாடு முழுவதும் இருந்து கேரளாவுக்கு உதவிக்கரங்கள் நீண்டு கொண்டிருக்கின்றன. அண்டை மாநிலங்கள் முதல் வடமாநிலங்கள் வரை கேரளாவுக்கு நிதி உதவி அறிவித்ததுடன், பல்வேறு வகையான நிவாரணப் பொருள்களையும் அனுப்பி வைத்துள்ளனர். 

Sponsored


மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்து சேவை சீராகாததால், அத்தியாவசியத் தேவைகளான குடிநீர், காய்கறிகள், பால் உள்ளிட்டவைகளை மக்களுக்குக் கொண்டு சேர்ப்பதில் சிக்கல் நீடிக்கிறது. குடிநீர் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், தெலங்கானா அரசு ரூ.2 கோடி மதிப்பிலான 50 ஆர்.ஓ (R.O) இயந்திரங்களை கேரளாவுக்கு அனுப்புகிறது. தெற்கு ரயில்வே சார்பில் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு பெரிய டேங்குகளில் குடிநீர் கொண்டு செல்லப்பட்டுள்ளது. மேலும், பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீரைப் பல்வேறு மாநில மக்களும் கேரளாவுக்குத் தொடர்ந்து அனுப்பிய வண்ணம் இருக்கிறார்கள். 

இந்தச் சூழலில், கொச்சி நகரில் காய்கறிகள் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாகப் பொதுமக்கள் புகார் கூறுகிறார்கள். கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் நகரில் இயங்கிவந்த பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. திறக்கப்பட்டிருக்கும் ஒருசில கடைகளிலும் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை கடுமையாக உயர்த்தப்பட்டிருக்கிறது. மிளகாய் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.400 வரை விலை வைத்து விற்கப்படுவதாகக் கூறுகிறார்கள். பொதுமக்களின் புகாரைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் போலீஸார் தலையிட்டனர். இதனால், ரூ.400 என்ற விலையில் இருந்து குறைக்கப்பட்டு ரூ.120 வரை மிளகாய் விற்கப்படுகிறது. வெங்காயம், உருளைக்கிழங்கு மற்றும் முட்டைக்கோஸ் போன்றவை கிலோவுக்கு ரூ.90 வரை விற்கப்பட்டதாகவும், போலீஸாரின் எச்சரிக்கையைத் தொடர்ந்து விலை குறைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதேபோல், அரிசி மற்றும் சர்க்கரை ஆகியவற்றின் விலை ரூ.15 அளவுக்கு உயர்த்தப்பட்டிருப்பதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். Trending Articles

Sponsored