``அவங்களுக்கு `பிரைம்’ மாதிரி எங்களுக்கு `ப்ளஸ்’!” - அமேசானுடன் மோதும் ஃப்ளிப்கார்ட்



Sponsored



இந்தியாவில் இணைய வழி வணிகத்தைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தற்போதைய சந்தை நிலவரப்படி முதல் இரண்டு இடத்தில் இருப்பவை அமேசானும் ஃப்ளிப்கார்ட்டும்தான். அதிலும் அண்மையில் வால்மார்ட் நிறுவனம் ஃப்ளிப்கார்ட்டின் பெரும்பான்மையான பங்குகளை கைப்பற்றியதிலிருந்து இவற்றிற்கிடையேயான போட்டி அடுத்தகட்டத்தை நோக்கி நகர்ந்திருக்கிறது. இந்த இரண்டு நிறுவனங்களுமே வாடிக்கையாளர்களைத் தங்கள் பக்கம் இழுப்பதற்காகப் பல வழிகளைக் கடைப்பிடிக்கின்றன. அதில் ஒன்றுதான் மெம்பர்ஷிப் திட்டங்கள். ஆன்லைனில் அக்கவுன்ட் இருந்தால் யார் வேண்டுமானாலும் பொருள்களை வாங்க முடியும் என்றாலும் கூட மெம்பர்ஷிப் திட்டங்களில் இணைந்திருப்பவர்கள் கூடுதலாக சில வசதிகளைப் பெற முடியும்.

அமேசான் பிரைமுக்குப் போட்டியாக இருக்குமா ஃப்ளிப்கார்ட்டின் பிளஸ் ?

Sponsored


அமேசான் தன் கைவசம் வைத்திருப்பது `அமேசான் பிரைம்'. கடந்த 2016-ம் ஆண்டில் பிரைம் பிரீமியம் மெம்பர்ஷிப் திட்டத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது அமேசான் நிறுவனம். முதலில் அதை இவசமாகவே கொடுத்து வந்த அமேசான் அதன் பிறகு 500 ரூபாய்க்கு அளித்தது. தற்பொழுது 999 ரூபாய்க்கு ஒரு வருடத்துக்கான கட்டணமாக வசூலிக்கிறது. ஆனால், இதன் போட்டி நிறுவனமான ஃபிளிப்கார்ட்டிடம் அப்படிச் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எந்தத் திட்டங்களும் கிடையாது. இந்நிலையில்தான் ஃபிளிப்கார்ட் பிளஸ் என்ற புதிய மெம்பர்ஷிப் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது. ஆனால், இது போன்ற திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வருவது ஃப்ளிப்கார்ட்டிற்கு முதல் முறை கிடையாது. ஏற்கெனவே கடந்த 2014-ம் ஆண்டில் ஃப்ளிப்கார்ட் ஃபாஸ்ட் என்ற திட்டத்தைக் கொண்டு வந்தது. 500 ரூபாய்க்கு அறிமுகப்படுத்தப்பட்ட இது எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பைப் பெறாத காரணத்தால் நிறுத்தப்பட்டது. எனவே, இரண்டாவது முறையாக வேறு பெயரில் புதிய வசதிகளுடன் ஃப்ளிப்கார்ட்டின் பிளஸ் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. 

Sponsored


ஃப்ளிப்கார்ட்டின் பிளஸ்- மெம்பர்ஷிப்பில் இணைவது எப்படி ?

பணத்துக்குப் பதிலாக காயின்களைப் பயன்படுத்துவதன் மூலமாக இதில் இணைந்துகொள்ளலாம். அதற்குக் குறைந்தபட்சமாக 50 காயின்கள் இதற்குத் தேவைப்படும். இந்த காயின்களை பணம் செலுத்தி வாங்க முடியாது. ஆர்டர்களின் மூலமாகவே பெற முடியும். 250 ரூபாய்க்கு ஒரு பொருளை ஆர்டர் செய்தால் ஒரு காயினைப் பெற முடியும். அப்படி அதிகபட்சமாக ஒரு ஆர்டரில் 10 காயின்கள் வரை பெற முடியும். அதன்படி பார்த்தால் அதிகபட்சமாக 2500 ரூபாய் ஆர்டரில் பத்து காயின்களைப் பெறலாம். கடந்த 15-ம் தேதி முதல் அறிமுகப்படுத்தப்பட்ட இதில் ஒரு சிலருக்கு மட்டும் இலவசமாக இணைந்துகொள்ளும் வாய்ப்பைக் கொடுத்திருக்கிறது ஃப்ளிப்கார்ட். இது அவர்களின் பழைய ஆர்டர்களைப் பொறுத்து வழங்கப்பட்டிருக்கிறது. ஒரு முறை பிளஸ் மெம்பர்ஷிப்பில் இணைந்தால் ஒரு வருடத்துக்கு  அதைப் பயன்படுத்தலாம் அதன் பிறகு தேவைப்பட்டால் ஒரு 50 காயின்களைப் பயன்படுத்தி மீண்டும் இணைந்து கொள்ளலாம்.  

ஃப்ளிப்கார்ட்டின் பிளஸ்ஸின் பயன்கள் 

3.5 கோடிக்கும் அதிகமான பொருள்களை டெலிவரி சார்ஜ் இல்லாமல் ஆர்டர் செய்ய முடியும். இது  மட்டுமன்றி வழக்கத்தை விடவும் வேகமான டெலிவரியையும் இதன் மூலமாகப் பெறலாம். 

`பிக் பில்லியன் டேஸ்' போன்ற ஸ்பெஷல் சேல்களின் போது பொருள்களை மற்றவர்களை விட முன்கூட்டியே அணுக முடியும். விரைவான வாடிக்கையாளர் சேவையைப் பெற முடியும். 

ஒவ்வொரு ஆர்டரின் போதும் கிடைக்கக்கூடிய காயின்களை புக்மைஷோ, ஹாட்ஸ்டார் போன்று ஃப்ளிப்கார்ட் தரும் பிற நிறுவனங்களில் பயன்படுத்திக்கொள்ளலாம். 

ப்ரைம் மெம்பர்ஷிப்புக்காக பணம் வசூலித்தாலும் திரைப்படங்கள், மியூசிக், வீடியோ என வேறு பல பொழுதுபோக்கு வசதிகளையும் அமேசான் தருகிறது. ஃபிளிப்கார்ட்டிடம் அதைப் போல எதுவும் இல்லை என்பதால் ஹாட் ஸ்டாருடன் கைகோத்திருக்கிறது. 50 காயின்கள் இருந்தால் ஒரு வருடத்துக்கான ஹாட் ஸ்டார் ப்ரீமியம் சந்தாவைப் பெற முடியும். இது தவிர்த்து Zomato, BookMyShow, மற்றும் MakeMyTrip போன்றவற்றிலும் சில ஆஃபர்களைப் பெறலாம்.  

 அமேசான் பிரைமுக்கு ஃபிளிப்கார்ட்டின் பிளஸ் போட்டியாக இருக்குமா என்று பார்த்தால் அது சற்று சந்தேகம்தான்.



Trending Articles

Sponsored