`கேரள மக்களுக்கு உதவக்கூடாது' - ஃபேஸ்புக்கில் பதிவிட்ட வாலிபருக்கு பறிபோனது வேலை!Sponsoredகேரளாவில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவக்கூடாது எனச் சமூகவலைதளத்தில் கருத்து பதிவிட்ட நபரை வேலையில் இருந்து நீக்கியுள்ளது பிரபல லூலூ மால் நிறுவனம்.

கனமழை குறைந்து வருவதால் நிம்மதி பெருமூச்சுவிடத் தொடங்கியுள்ளனர் கேரள மக்கள். மழை குறைந்துள்ளதை அடுத்து நிவாரணப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், நிவாரணப் பொருள்கள் மக்களுக்கு வழங்கும் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை 350க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். எனினும் இந்தப் பேரிழப்பால் ஏற்பட்ட சேதம் குறித்த முழுமையான விவரம் வெளிவரவில்லை. மழைநீர் முழுமையாக வடிந்த பிறகே சேதம் குறித்த அறிவிப்பு வெளியாகும். இதற்கிடையே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வலியுறுத்தி பலரும் சமூகவலைதளங்களில் கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர். 

Sponsored


அதன்படி, பல நாடுகளிலிருந்தும் மக்கள் மனிதாபிமான அடிப்படையில் தங்களால் இயன்ற உதவியை கேரள மக்களுக்கு உதவி வருகின்றனர். இந்த நிலையில், ஓமனில் வசித்து வரும் ஒருவர் கனமழையால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவக் கூடாது எனச் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டுள்ளார். கருத்து பதிவிட்டவர் ராகுல் புத்தலத்து. இவரும் கேரளாவைச் சேர்ந்தவர்தான். ஓமன் நாட்டில் உள்ள லூலூ நிறுவனத்தில் கேஷியராக வேலைப் பார்த்து வந்தார். இவர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவக்கூடாது என்றும், பெண்கள் உதவி கேட்டது குறித்தும், ஆளும் கம்யூனிஸ்ட் அரசு குறித்தும் சில மோசமான பதிவை ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். இவரின் பதிவுக்கு பலரும் கண்டனங்கள் எழுப்பினர். மேலும், அவர் தனது பதிவில் பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும் கருத்துத் தெரிவித்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. 

Sponsored


உடனடியாக சுதாரித்துக்கொண்ட ராகுல், தான் வெளியிட்ட கருத்துக்கு மன்னிப்புக் கேட்டு ஃபேஸ்புக்கில் வீடியோ வெளியிட்டார். அதில், ``நான் செய்தது 100 சதவிகிதம் தவறு. இதற்காக என் நண்பர்கள், நண்பரில்லாதவர் என அனைவரும் என்னைத் திட்டிவருகின்றனர். நான் ஃபேஸ்புக்கில் கருத்து பதிவிட்டபோது குடித்திருந்தேன். அதனால்தான் இவ்வாறு செய்துவிட்டேன். இதற்காக அனைவரிடமும் மன்னிப்பு கேட்கிறேன். இவ்வாறு கருத்து பதிவிட்டது தெரிந்தால் எனது வேலை பறிபோகும்" எனக் கூறினார். ராகுல் சொன்னது மாதிரி, அவரின் பதிவைப் பார்த்த லூலூ நிறுவனம் உடனடியாக அவரை வேலையை விட்டு நீக்கி உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக லூலூ நிறுவனத்தின் உரிமையாளர் யூசுப் அலி, தன்னுடைய ஹெலிகாப்டரில் சென்று கேரளா வெள்ளச் சேதங்களை பார்வையிட்டதுடன், வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விதமாக ரூ.18 கோடி அறிவித்துள்ளார். மேலும், கேரள மக்களுக்காக அனைவரும் பிரார்த்திக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். Trending Articles

Sponsored