`ஹெலிகாப்டரின் மொத்த எடையையும் மாடியில் இறக்கவில்லை' - 8 நிமிடங்களில் 26 பேரை மீட்ட கடற்படை விமானியின் அசாத்திய செயல்கேரளாவில், பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தி கடற்படை ஹெலிகாப்டர்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டுவருகின்றன. சாலக்குடியில் மொட்டைமாடி ஒன்றில் ஹெலிகாப்டர் இறங்கி, 8 நிமிடங்களில் 26 பேரை மீட்டுள்ளது. கேரளாவில் நடந்த மீட்புப்பணிகளில் இதுதான் அசாத்தியமானது என்று கடற்படை தரப்பில் சொல்லப்படுகிறது, 

Sponsored


இந்த ஹெலிகாப்டரை செலுத்திய விமானியின் பெயர், லெப்டினன்ட் கமோடர் அபிஜித் கருட் ஆவார். சாலக்குடியில் நடந்த மீட்புப்பணி குறித்து அபிஜித் கூறுகையில், ``கயிறு வழியாக 4 பேரை மீட்டோம். எஞ்சியிருந்த 22 பேரை மீட்க வேண்டுமானால், ஹெலிகாப்டரை நீண்ட நேரம் அந்தரத்தில் அப்படியே நிறுத்த வேண்டும். அதனால், ஹெலிகாப்டரை மொட்டைமாடியில் இறக்க முடிவு செய்தேன். இதை rooftop landing என்று சொல்வார்கள். இந்த முறையில், ஹெலிகாப்டரின் மொத்த எடையும் கட்டத்தின்மீது இருக்காது. ஹெலிகாப்டரின் மொத்த எடையையும் இறக்கினால், கட்டடம் உடைந்துபோக வாய்ப்பு உண்டு. இறக்கைகள் சுழன்றுகொண்டே இருப்பதால் ஹெலிகாப்டரின் எடை கட்டடத்தின்மீது இறங்காது.

Sponsored


சாலக்குடியில் நிவாரணப் பொருள்களை போட்டுக்கொண்டிருந்தபோதுதான், மொட்டைமாடியின்மீது இருந்து ஏராளமானோர் உதவி கேட்டு சட்டைகளைச் சுழற்றியதைப் பார்த்தேன். அதில், 80 வயது மூதாட்டி ஒருவரும் இருந்தார். ஏராளமான பெண்கள், குழந்தைகள் இருந்தனர். இவர்கள் ஒவ்வொருவரையும் கயிறு வழியாக மீட்பது கடினம். பெண்கள் குழந்தைகள் பயந்துபோகக்கூடும். வயதானவர்களுக்கு மாரடைப்புகூட வந்துவிட வாய்ப்புள்ளது. இதனால், மொட்டைமாடியில் ஹெலிகாப்டரை இறக்கி, மிக வேகமாக 22 பேரையும் ஏற்றிக்கொண்டு மீண்டும் பறக்கத் தொடங்கினோம். இதற்கு வெறும் 8 நிமிடங்களே பிடித்தன'' என்கிறார். 

Sponsored


மொட்டைமாடியில் ஹெலிகாப்டர் நிற்கும் வீடியோவை இந்திய கடற்படை தன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. லெப்டினன்ட் கமோடர் ரஜனீஷ் ( கோ பைலட் ) நேவிகேட்டர் சத்யார்த், விஞ்ச் ஆபரேட்டர் அஜித், ஃப்ரீ டிரைவர் ராஜன் ஆகியோர் இந்த அசாத்தியமான பணியில் பைலட்டுக்குத் துணை நின்றனர். 

சல்யூட் நேவி!
 Trending Articles

Sponsored