வரலாறு படைத்த கேரள மழை - 20 நாளில் 771 மிமீ மழை பதிவு



Sponsored



கேரளாவில் பெய்த கனமழை இதுவரை எப்போதும் இல்லாத அளவு புதிய உச்சத்தை அடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

கேரளாவில் ஆகஸ்ட் மாத ஆரம்பத்தில் இருந்தே கனமழை பொழியத் தொடங்கியது. சுமார் 15 நாள்களுக்கும் மேலாக விடாமல் பெய்த மழையால் அனைத்து அணைகளும் நிரம்பின. இதனால் அங்குள்ள 80 அணைகளின் மதகுகளும் திறக்கப்பட்டன. அணைகள் திறப்பு மற்றும் அடைமழை ஆகிய இரண்டும் சேர்ந்து கேரளாவைப் புரட்டிப்போட்டுள்ளது. கேரள வரலாற்றில் வெள்ளத்தை சந்தித்திடாத மாவட்டங்கள் கூட இந்த வருடம் வெள்ளநீரில் தத்தளித்தது. 

Sponsored


இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள தகவலில், ’இதுவரை கேரளாவில் பெய்த மழை அளவைவிட இந்த வருடம் 2.5 மடங்கு அதிகமாகப் பொழிந்துள்ளது. ஆகஸ்ட் 1 முதல் 20 வரை மாநிலம் முழுவதும் பதிவான மழையின் அளவு 771 மிமீ ஆக உள்ளது. கடந்த 87 ஆண்டுகளுக்குப் பிறகு அங்கு இவ்வளவு மழை பொழிவு பதிவாகியுள்ளது. மேலும், இந்த ஆண்டு கேரள வெள்ளத்தில் அதிகம் பாதிக்கப்பட்டது இடுக்கி மாவட்டம்தான். அங்கு சுமார் 111 வருடங்களுக்குப் பிறகு அதிக மழை பொழிந்துள்ளது. இடுக்கியில் மட்டும் கடந்த இருபது நாள்களில் 1,419 மிமீ மழை பதிவாகியுள்ளது. முன்னதாக 1907-ம் வருடம் 1,387 மிமீ மழை பொழிந்துள்ளது. இதுவே இடுக்கியின் அதிகபட்ச மழைப் பொழிவாக இருந்தது, தற்போது அந்த அளவு தகர்க்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Sponsored


இந்த வருடம் இவ்வளவு மழை பொழியும் என கேரளா எதிர்பார்க்கவில்லை அதனால் அவர்களால் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கமுடியாமல் போனது. கடந்த சில வருடங்களாக அங்கு நல்ல மழை பொழியும் என எதிர்பார்த்து ஏமாற்றமே கிடைத்தது . அதேபோன்று இந்த வருடமும் மழை அதிகளவில் பொழியாது என கருதப்பட்டது. ஆனால், இந்த வருடம் வரலாறு காணாத மழை பொழிந்துள்ளது’ என இந்திய வானிலை ஆய்வு மையத்தின் காலநிலை தரவு மேலாண்மை இயக்குநர் புலாக் குஹதகுர்தா தெரிவித்துள்ளார்.



Trending Articles

Sponsored