ஏ.டி.எம் கேஷ் வேன் கொள்ளையைத் தடுக்க அரசு புது யோசனை!Sponsoredகடந்த ஆண்டு மும்பையில் ஏ.டி.எம்-மில் பணம் நிரப்ப வந்த வேனைத் தாக்கி, 1.56 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. குர்கான் பகுதியில் கேஷ் வேன் பணியாளரே ஒரு கோடி ரூபாயைக் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்படியாக, ஏ.டி.எம் சென்டர் கொள்ளைச் சம்பவங்கள், தற்போது ஏ.டி.எம் மெஷினில் நிரப்புவதற்காகப் பணத்தோடு வரும் கேஷ் வேன்களை மடக்கிக் கொள்ளையடிப்பது வரை வந்துவிட்டது.

இந்தியாவில் சுமார் 8,000 கேஷ் வேன்கள் ஏ.டி.எம்-மில் பணம் நிரப்பும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. நாள்தோறும் 15,000 கோடி ரூபாய் வரை இந்த வாகனங்கள் சுமந்து செல்கின்றன. பணம் நிரப்பும் பணியானது இரவு நேரங்களில்கூட நடக்கின்றன. அந்நேரங்களில் பாதுகாப்பு குறைபாடு காரணமாகக் கொள்ளைச் சம்பவங்கள் நடக்கின்றன. ஆயுதம் ஏந்திய காவலர்களின் பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தும்கூட இந்தக் கொள்ளைச்சம்பவங்கள் நடப்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. எனவே, ஏ.டி.எம் மெஷினில் பாதுகாப்பாகப் பணம் நிரப்புவதை உறுதிப்படுத்த, உள்துறை அமைச்சகம் சில விதிமுறைகளை வகுத்து, அவற்றை அடுத்த ஆண்டு பிப்ரவரி 8, 2019 முதல் அமல்படுத்தவுள்ளது. அதில் பணம் நிரப்பும் நேரத்தை வரையறை செய்துள்ளது.

Sponsored


சில ஏ.டி.எம் சென்டர்கள் மட்டுமே மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் அமைந்துள்ளன. பல சென்டர்கள், மக்கள் நடமாட்டம் குறைவாகவுள்ள சிறிய சாலைகள், தெருக்களில் அமைந்துள்ளன. இவற்றில் பணத்தை நிரப்பும் வாகனம் வரும்போது பாதுகாப்பு கொடுப்பதற்கு மிகவும் சிரமப்படவேண்டியிருக்கும். எனவே, மாலை 6 மணிக்குமேல் நகர்ப்புறங்களில் உள்ள ஏ.டி.எம் சென்டர்களில் பணத்தை நிரப்ப அனுமதி கிடையாது. தீவிரவாதிகளின் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் மாலை 4 மணிக்குமேல் ஏ.டி.எம்-மில் பணத்தை நிரப்ப அனுமதி கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sponsored


அடுத்ததாக, பாதுகாப்பாக வேன்களில் பணத்தை எடுத்துவரும்போது கடைப்பிடிக்கவேண்டிய விதிமுறைகளையும் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, பணத்தை எடுத்துவரும் வேனுக்கு ஓர் ஓட்டுநர், ஆயுதம் ஏந்திய காவலர்கள் இருவர் மற்றும் இரண்டு ஏ.டி.எம் அலுவலர்கள்/பொறுப்பாளர்கள் இருக்கவேண்டும். இந்தக் காவலர்களில் ஒருவர், வாகனத்தின் முன்புறம் ஓட்டுநருக்கு அருகே அமர்ந்திருக்க வேண்டும். இன்னொரு காவலர் வாகனத்தின் பின்புறம் அமர்ந்திருக்க வேண்டும். பணத்தை வேனில் ஏற்றி இறக்குதல், சிறுநீர் கழிக்கச் செல்லுதல், மதிய உணவு உண்ணச் செல்லுதல் என எந்தவொரு சூழலிலும் வாகனத்தை ஆயுதம் ஏந்திய பாதுகாவலர்கள் யாரும் இல்லாமல் அஜாக்கிரதையாக விடக் கூடாது. இருவரில் ஒரு காவலரேனும் அந்த வேனின் அருகே எந்த நேரத்திலும் இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஏ.டி.எம் அலுவலர்கள் மீது காவல்நிலையத்தில் ஏதேனும் புகார் பதியப்பட்டுள்ளதா, ஆதார் அட்டை, குடியிருக்கும் முகவரி சரிபார்ப்பு, இதற்கு முந்தைய பணி விவரம், அவர்களுக்கு இருக்கும் கடன் விவரங்கள், இன்ஷூரன்ஸ் விவரங்கள் போன்றவற்றை விசாரித்து, அனைத்தும் சரியானதாக இருந்தால் மட்டுமே பணியில் அமர்த்த வேண்டும். முன்னாள் ராணுவ அதிகாரியை ஏ.டி.எம் வாகனப் பணத்துக்கான பாதுகாப்பு அதிகாரியாகப் பணியமர்த்தலாம். ஐந்து நாள்களுக்கான காட்சிகளைப் பதிவுசெய்யும் வசதியுடன் கூடிய மூன்று சிசிடிவி கேமராக்களை பணம் எடுத்துவரும் வாகனத்தின் முன்புறமும், பின்புறமும், உட்புறமும் நிறுவ வேண்டும். மேலும், இந்த வேன் ஜி.பி.எஸ் தொழில்நுட்பத்துடன் அது செல்லும் வழிகள் கண்காணிப்புக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். தீயணைப்புக் கருவிகள் மற்றும் வேன் மீது தாக்குதல் நடந்தால், எச்சரிக்கை கொடுக்கும் அவசர விளக்கு அம்சங்கள் பொருத்தப்பட வேண்டும். பாதுகாப்பு அலாரம் மற்றும் ஜி.எஸ்.எம் அடிப்படையிலான ஆட்டோ டயலர், மோட்டார் சைரன் போன்றவை பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.

ஏ.டி.எம்-மில் நிரப்பப்படவுள்ள பணத்தை, குறிப்பிட்ட பாதுகாப்பு வழிகாட்டுதல்களுக்கு இணங்க, பாதுகாப்பான இடத்தில் வைத்துக் கணக்கிட்டு, வகைப்படுத்தப்பட்டு கட்டுகளாகப் பிரித்து அடுக்குகிறார்கள் என்பதை இந்தப் பணியில் ஈடுபடும் தனியார் நிறுவனம் உறுதிப்படுத்த வேண்டும். அந்த இடம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, ஒன்றில் பொதுவான அலுவலகச் செயல்பாடுகள் அனைத்தும் நடைபெற வேண்டும். இன்னொரு பகுதியில் பணச் செயல்பாடுகளான  பணச்சேகரிப்பு, வைப்பு, வரிசைப்படுத்துதல், எண்ணிக்கை பார்த்தல் மற்றும் பணம் கொண்டு செல்லும் வேனுக்குள் ஏற்றுவது என அனைத்தும் இங்கே நடக்க வேண்டும். இத்தகைய விதிமுறைகளை நடைமுறைக்குக் கொண்டுவர, அடுத்த ஆண்டு பிப்ரவரி 8-ம் தேதி வரை கெடு கொடுத்திருக்கிறது உள்துறை அமைச்சகம். Trending Articles

Sponsored