`மீண்டும் தொடங்குமா இந்தியா-பாகிஸ்தான் அமைதிப் பேச்சு?'- மோடி கடிதத்தின் பின்னணி!Sponsoredபாகிஸ்தானின் புதிய பிரதமராக முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெஹ்ரிக் -இ- இன்சாஃப் கட்சித் தலைவருமான இம்ரான் கான் பதவியேற்றுள்ளார். பிரதமராகப் பொறுப்பேற்ற பின்னர் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் நல்லுறவுகளை வளர்க்கவே தாம் விரும்புவதாகக் கூறினார். அண்டை நாடுகளுடன் நல்லுறவுகள் நீடித்தால் மட்டுமே பாகிஸ்தானில் அமைதி நிலவ முடியும் என்றார் அவர்.

இந்தச் சூழ்நிலையில், பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெகமூத் குரேஷி, ``பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், இந்தியாவுடன் அமைதிப் பேச்சை தொடங்க மோடி அழைப்பு விடுத்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கப்பட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார். குரேஷியின் இந்தத் தகவலை பாகிஸ்தானிலிருந்து வெளியாகும் ஆங்கில நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது. ஆனால், பாகிஸ்தானுடன் பேச்சு நடத்துவதற்குப் பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருப்பதாகக் கூறி கடிதம் எழுதியிருப்பதாக வெளியான தகவலை மத்திய அரசு மறுத்துள்ளது. பிரதமராக இம்ரான் கான் பதவியேற்று இருப்பதற்காக, அவருக்கு வாழ்த்து தெரிவித்து மட்டுமே மோடி கடிதம் எழுதியிருந்தார் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Sponsored


இதற்கிடையே குரேஷி அளித்த பேட்டியில், காஷ்மீர் பிரச்னையின் முக்கியத்துவத்தை இந்தியா புரிந்துகொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும், ``இருநாடுகளுக்கு இடையே நிலவும் பனிப்போர் என்பது, சாகசத்துக்கான தளம் அல்ல என்று இந்தியாவுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். இந்தியாவைப் பொறுத்தவரை, அண்டை நாடு மட்டுமல்ல; அணு ஆயுதத் திறன் கொண்ட நாடும்கூட" என்றார். இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நிலுவையில் உள்ள அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு காண்பதற்கு, தடையற்ற பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று குரேஷி கேட்டுக் கொண்டார். 

Sponsored


இம்ரான் கான் தலைமையில் 21 பேர் கொண்ட அமைச்சரவை பதவியேற்ற ஒருசில நிமிடங்களில், குரேஷி இதுபோன்ற கருத்துகளைத் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, பாகிஸ்தான் தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு இம்ரான் கான் ஆற்றிய உரையில், பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

குரேஷியைப் பொறுத்தவரை, 2008 முதல் 2011-ம் ஆண்டுவரை பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆட்சியில் இருந்தபோது வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தவர். தற்போது, மீண்டும் வெளியுறவுத் துறை அமைச்சராகியுள்ளார். மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது, இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் இருந்தவர் குரேஷி என்பது நினைவுகூரத்தக்கது. இந்தியா மட்டுமல்லாது, கிழக்கு மற்றும் மேற்குப் பகுதியில் உள்ள நாடுகளுடன் நல்லுறவையும், அமைதியையும் மீண்டும் ஏற்படுத்த பாகிஸ்தான் விரும்புவதாகவும் அவர் கூறினார். முன்னதாக, இம்ரான் கான் தன்னுடைய கட்சி தனிப்பெரும் கட்சியாக 116 இடங்களில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியபோது, இந்தியாவுடனான உறவுகளை மேம்படுத்தப் பாகிஸ்தான் தயாராக உள்ளது என்றும், இருதரப்பையும் சேர்ந்த தலைவர்கள் அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வுகாண தன்னுடைய தலைமையிலான அரசு முயற்சி மேற்கொள்ளும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்தியா - பாகிஸ்தான் இடையே நீண்டகாலமாக அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்காத நிலையில், கடந்த 2016-ம் ஆண்டில் மீண்டும் இருதரப்புப் பேச்சுகளை நடத்த மத்திய பி.ஜே.பி. அரசும், நவாஸ் ஷெரீப் தலைமையிலான அப்போதைய பாகிஸ்தான் அரசும் முடிவு செய்திருந்தன. ஆனால், 2016-ல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, அவர்களை விரட்டியடிக்கும் நடவடிக்கையாக `சர்ஜிகல் ஸ்டிரைக்'-ஐ இந்தியா நடத்தியது. மேலும் இந்தியாவைச் சேர்ந்த குல்பூஷன் ஜாதவுக்கு, பாகிஸ்தானில் உளவு பார்த்ததாகக் கூறி, அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதத்தில் மரண தண்டனை விதித்ததால், அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே சுமூகமான உறவு ஏற்படுவதில் பின்னடைவு ஏற்பட்டது. 

இந்த நிலையில், பாகிஸ்தானில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால், மீண்டும் அமைதிப் பேச்சுகளைத் தொடங்கலாம் என்பது இருநாட்டுத் தலைவர்களின் எண்ணமாக உள்ளது. தவிர, அடுத்தாண்டு இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் சூழலில், பாகிஸ்தானுடன் நல்லுறவை வளர்த்துக்கொள்வதில் தீவிர கவனம் செலுத்தலாம் என்பது மத்திய அரசின் திட்டம் என்று தெரிய வந்துள்ளது. அதன் அடிப்படையிலேயே பிரதமர் மோடி, இம்ரான் கானுக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், இருதரப்புப் பேச்சுவார்த்தையைத் தொடங்குவதற்கு பச்சைக் கொடி காட்டியிருக்கலாம் என்று ஊடகங்களில் செய்திகள் பரவலாக வெளியாகி வருகின்றன. இரு நாடுகளுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கும்பட்சத்தில், இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே சர்வதேசப் போட்டிகளும் தொடங்கும் என எதிர்பார்க்கலாம். 

கடந்த 2014-ம் ஆண்டு நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்ற விழாவில், அப்போது பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப் பங்கேற்றார். ஆசிய மண்டலத்தில் அமைதியை உருவாக்கவும், அந்தப் பகுதியில் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டும், நீண்ட நெடுங்காலமாக இருநாடுகளுக்கும் இடையே நீடிக்கும் நல்லுறவுகளைத் தொடரவும் விரும்புவதாக அப்போது நவாஸ் ஷெரீஃப் குறிப்பிட்டிருந்தார். நவாஸ் ஷெரீஃப் விரும்பியபடி, பாகிஸ்தானுடன் நல்லுறவுகளை வளர்த்துக்கொள்வதற்கு தற்போது பிரதமர் மோடியும், அந்நாட்டில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றமும் வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.Trending Articles

Sponsored