ஏழு மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள்! பின்னணி விவரங்கள்Sponsoredம்மு-காஷ்மீர் உட்பட ஏழு மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அது தவிர்த்து, பீகார், ஹரியானா, உத்தரகாண்ட், சிக்கிம், மேகாலயா மற்றும் திரிபுரா மாநிலங்களுக்கும் ஆளுநர்கள் நியமனத்திற்கான உத்தரவை அவர் நேற்று வெளியிட்டுள்ளார். 

பீகார் மாநில ஆளுநராக இருந்த சத்யபால் மாலிக், ஜம்மு-காஷ்மீர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். பீகார் மாநில புதிய ஆளுநராக லால்ஜி டாண்டன் நியமிக்கப்பட்டுள்ளார். மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு நெருக்கமானவர் லால்ஜி டாண்டன் என்பது குறிப்பிடத்தக்கது. ஹரியானா ஆளுநராக இருந்த கப்தான் சிங் சோலங்கி, திரிபுரா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். ஹரியானா மாநிலத்தின் புதிய ஆளுநராக சத்யதேவ் நாராயண் ஆர்யா நியமிக்கப்பட்டுள்ளார். திரிபுரா ஆளுநராக இருந்த ததாகடா ராய் மேகாலயா ஆளுநராகவும், அங்கு ஆளுநராக இருந்த கங்கா பிரசாத் சிக்கிம் ஆளுநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
உத்தரகாண்ட் மாநில புதிய ஆளுநராகப் பேபி ராணி மௌர்யா நியமிக்கப்பட்டுள்ளார். 

Sponsored


புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளவர்களின் பின்னணி குறித்த தகவல்கள்:

Sponsored


சத்யபால் மாலிக் - ஜம்மு-காஷ்மீர்:

நாட்டின் எல்லைப்பகுதி மாநிலமான ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, முன்னாள் அரசு உயரதிகாரிகள், ராணுவ முன்னாள் அதிகாரிகளே ஆளுநர்களாக நியமிக்கப்பட்டு வந்தனர். ஆனால், தற்போது முதல் முறையாக அரசியல் பின்புலத்தைக் கொண்டு ஒருவர் இம்மாநிலத்தில் ஆளுராக நியமிக்கப்பட்டுள்ளார். மாணவராக இருந்தபோதே, சமூக செயற்பாட்டாளராகத் திகழ்ந்த சத்யபால் மாலிக், பி.ஜே.பி-யின் துணைத் தலைவர் பதவியை வகித்தவர். கடந்த ஆண்டு பீகார் ஆளுநராக நியமிக்கப்பட்டார். தற்போது ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் கவர்னராகியுள்ளார். ஜம்மு-காஷ்மீரில் மெகபூபா முஃப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயக் கட்சிக்கும் பி.ஜே.பி-க்கும் இடையே இருந்த கூட்டணி, கடந்த ஜூன் மாதத்தில் முறிந்ததைத் தொடர்ந்து, அங்கு ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இத்தகைய சூழலில், சத்யபால் மாலிக் கவர்னராக நியமிக்கப்பட்டிருப்பது, அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ததாகதா ராய் - மேகாலயா:

இந்துத்துவா கொள்கையில் தீவிர ஈடுபாடு கொண்டவர். பல்வேறு சர்ச்சைக்குரிய அறிக்கைகளால் பேசப்பட்டவர். 2002 முதல் 2006-ம் ஆண்டுவரை மேற்குவங்க மாநில பி.ஜே.பி தலைவராக இருந்தார். மக்களவைக்கு அந்த மாநிலத்திலிருந்து இரண்டு முறை போட்டியிட்டு தோல்விடைந்தார். 1990-ம் ஆண்டு முதல் தீவிர அரசியலில் ஈடுபட்டார். அதற்கு முன் கொல்கத்தா மெட்ரோ ரயில் திட்டத்தில் பணியாற்றினார். '2002-ம் ஆண்டு கோத்ரா சம்பவத்தைத் தொடர்ந்து, குஜராத்தில் ஏற்பட்ட கலவரத்தின்போது, அப்போதைய முதல்வர் மோடிக்கு முதல் ஆளாக ஆதரவு தெரிவித்தவர்' என்று ஆங்கில நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது. பாரதிய ஜன சங்கத்தை சியாமா பிரசாத் முகர்ஜி எவ்வாறு தொடங்கினார் என்றும், இந்து - முஸ்லிம்களுக்கு இடையேயான பிரச்னை உள்நாட்டில் போர் ஏற்படாமல் முடிவுக்கு வராது என்றும் கடந்த 2017 ஜனவரி மாதம், ட்விட்டரில் பதிவிட்டு மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கியவர். தவிர, பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்தவர் ததாகதா ராய்.

லால்ஜி டாண்டன் - பீகார்:

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இவர், மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு மிகவும் நெருக்கமானவர். லக்னோவிலும்  உத்தரப்பிரதேசத்திலும் பி.ஜே.பி-யின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றியவர். மாநிலச் சட்டமேலவையில் இரண்டு முறையும் சட்டசபையில் மூன்று முறையும் உறுப்பினராக இருந்தவர். இவருடைய பிறந்தநாளையொட்டி, இலவசமாகச் சேலைகள் வழங்கினார். அப்போது லக்னோ மார்க்கெட் பகுதியில் மக்கள் கூட்டம் அதிகரித்ததில், நெரிசலில் சிக்கி ஏராளமானோர் காயம் அடைந்தனர். அதுதொடர்பான வழக்கிலிருந்து 2007-ம் ஆண்டு விடுவிக்கப்பட்டார்.

கங்கா பிரசாத் - சிக்கிம்:

பீகார் மாநில சட்டசபை உறுப்பினராக 18 ஆண்டுகள் இருந்தவர். பீகார் சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார். அடிப்படையில் தொழிலதிபரான இவர், 1967-ல் ஜனசங்கத்தில் உறுப்பினராகச் சேர்ந்து, அரசியல் வாழ்வைத் தொடங்கினார். பி.ஜே.பி-யில் பல்வேறு பதவிகளை வகித்தவர். மேகாலயா ஆளுநராக இருந்து வரும் இவர், மலைப்பகுதியான காஷி ஹில்ஸ்-ஐ தனி மாவட்டமாக அறிவிக்கக் கோரும் மாநில அரசின் சட்டத்திருத்தத்தை திருப்பி அனுப்பியவர். 

கப்தான் சிங் சோலங்கி - திரிபுரா:

முன்னாள் ராஜ்யசபா உறுப்பினரான இவர், 2014-ம் ஆண்டு ஹரியானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். 2009-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

சத்யதேவ் நாராயண் ஆர்யா - ஹரியானா:

பீகார் மாநிலத்தில் எட்டு முறை சட்டசபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். 73 வயதான சத்யதேவ், 2010-ம் ஆண்டு பீகாரில் பி.ஜே.பி - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி அரசில் அமைச்சராகப் பதவி வகித்தார். 

பேபி ராணி மௌர்யா - உத்தரகாண்ட்:

ஆக்ராவைச் சேர்ந்த பி.ஜே.பி தலைவரான பேபி ராணி மௌர்யாவுக்கு 61 வயதாகிறது. ஆக்ரா மேயராகவும் இவர் பதவி வகித்தவர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. Trending Articles

Sponsored