`சவால்களை நம்மால் சமாளிக்க முடியும்' - மலையாள மக்களுக்கு பினராயி முக்கிய வேண்டுகோள்Sponsoredவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவை மறுசீரமைக்க உலகெங்கும் வசிக்கும் மலையாளிகள் தங்கள் ஒரு மாதச் சம்பளத்தை நிதியுதவியாக அளிக்க வேண்டும் எனக் கேரள முதல்வர் பினராயி விஜயன் கோரிக்கை விடுத்துள்ளார். 

தென்மேற்குப் பருவமழையின் கோரத்தாண்டவத்துக்கு இந்தியா முழுவதும் சுமார் 993 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் 387 பேர் கேரளாவில் மட்டும் உயிரிழந்துள்ளனர். கனமழை, வெள்ளம், நிலச்சரிவு என இந்த மாதம் கேரளா மக்களுக்குச் சோகமாகவே அமைந்தது. சுமார் 54 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பலர் தங்கள் வீடு, உடைமைகளை இழந்து நிவாரண முகாம்களில் தவித்து வருகின்றனர். நகரங்கள், கிராமங்கள், மலைப்பகுதிகள் என அனைத்தும் சேதங்களுக்குத் தப்பவில்லை. கிட்டத்தட்ட 26,000 கோடி அளவுக்கு பொருளாதார இழப்பைச் சந்தித்துள்ளது அம்மாநிலம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலரும் உதவிக்கரம் நீட்டிவருகின்றனர். இந்நிலையில், ``பலத்த சேதத்தை எதிர்கொண்டுள்ள கேரளத்தை மறுசீரமைப்பது கடினமான பணியாக இருக்கும். எனவே, அனைவரும் கேரள மக்களுக்கு உதவ வேண்டும்'' என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். 

Sponsored


அவரின் கோரிக்கைக்கு ஏற்ப ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட சில நாடுகளும், தனியார் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்டவை உதவ முன்வந்துள்ளன. இதற்கிடையே, உலகெங்கும் வசிக்கும் மலையாளிகளுக்கு முதல்வர் பினராயி விஜயன் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். ``உலகெங்கும் வசிக்கும் மலையாளிகள் தங்களின் ஒரு மாத சம்பளத்தை கேரள மீள்உருவாக்கத்துக்கு தந்து உதவ வேண்டும். இது முடியாத பட்சத்தில் ஒவ்வொரு மாதமும் 3 நாள்கள் சம்பளத்தை நிவாரண நிதிக்கு அளிக்க வேண்டும். அதேநேரம் பெரிய நிலையில் இல்லாதவர்களும் தங்களால் முடிந்த சிறுதொகையை தவணைமுறையில் அளிக்க முடியும். நாம் ஒன்றாக இருந்தால் சவால்களை சமாளிக்க முடியும்" என ட்விட்டரில்  குறிப்பிட்டுள்ளார். 

Sponsored
Trending Articles

Sponsored