`தங்க கேக் அலமாரியை அலங்கரிப்பதால் என்ன பயன்?!’- கேரளாவுக்கு வழங்கிய துபாய் மாணவிSponsoredகேரள மாநிலம், மழை வெள்ளத்தால் சிதறுண்டுபோனது. 400-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். வெள்ளச் சேத மதிப்பு 35 ஆயிரம் கோடி ரூபாயைத் தாண்டும் எனச் சொல்லப்படுகிறது. 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். 1,435 வெள்ள நிவாரண முகாம்கள் கேரளாவில் அமைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலானவை பள்ளிகளில்தாம் அமைக்கப்பட்டுள்ளன. வரும் புதன்கிழமை முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவுள்ளதால், நிவாரண முகாம்களை வேறு இடங்களுக்கு மாற்றவேண்டிய நிலையில் கேரள அரசு உள்ளது. தனியார் கட்டடங்களை வாடகைக்கு எடுத்து அதில் மக்களைத் தங்கவைப்பது குறித்து கேரள அரசு ஆலோசித்துவருகிறது.

கேரள மழைக்கு மனிதர்களே தப்பிப் பிழைக்க முடியாத நிலையில், பறவைகள் என்ன செய்யும். சுமார் 3.64 லட்சம் பறவைகள் மழையில் சிக்கி, பரிதாபமாக இறந்துபோயின. 14,274 சிறு விலங்குகளும், 3,285 பெரிய விலங்குகளும் வெள்ளத்துக்குப் பலியாகின. இவற்றின் உடல்கள் மீட்கப்பட்டு ஆங்காங்கே எரியூட்டப்பட்டுவருகின்றன. மாநிலத்தைச் சீரமைக்க, குறைந்தது 18 மாதம் ஆகும். சாலைவசதி சீர்ப்படுத்த மட்டும் 5,815 கோடி ரூபாய் தேவை என மதிப்பிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, சாலைகளைப் பராமரிப்புக்காக கேரள அரசு 1,000 கோடி ரூபாயைக் ஒதுக்கியுள்ளது. 

Sponsored


சீரமைப்புப் பணிகளுக்குக் கோடிக்கணக்கில் நிதி தேவை என்பதால், சாமானியர்கள் முதல் செல்வந்தர்கள் வரை தங்களால் இயன்ற நிதியைக் கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்பிவருகின்றனர். கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ``மலையாள மக்கள், தங்கள் ஒரு மாதச் சம்பளத்தை முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும்'' என வெளிப்படையாகவே கோரிக்கைவிடுத்துள்ளார். பல நாடுகளிலிருந்தும் கேரளாவுக்கு நிதி குவிந்துவரும் நிலையில், துபாயைச் சேர்ந்த மாணவி பிரணதி, தனது பிறந்த நாள் பரிசாக தந்தை வழங்கிய தங்க கேக்கை விற்று கிடைத்த தொகையைக் கேரள முதலமைச்சருக்கு அனுப்பிவைத்துள்ளார். 

Sponsored


கேரள மாநிலம் பையனுரைச் சேர்ந்தவர் விவேக் கல்லத்தில். துபாயில் `பிரவாதி கன்ஸ்டிரக்‌ஷன்' என்ற பெயரில் கட்டுமான நிறுவனம் நடத்திவருகிறார். இவருக்கு பிரணதி, வர்ணிகாக, த்யூதி என்று மூன்று பெண் குழந்தைகள். விசேஷம் என்னவென்றால், இவர்கள் மூவரும் ஒரே பிரசவத்தில் பிறந்தவர்கள். கடந்த வாரத்தில் பிரணதி உள்ளிட்ட மூன்று பேருக்கும் 12-வது பிறந்த நாள் வந்தது. மகள்களின் பிறந்த நாளை முன்னிட்டு, துபாயில் உள்ள மலபார் ஜூவல்லரியில் 22 காரட் தங்கத்தினால் ஆன கேக் ஆர்டர் செய்திருந்தார் விவேக். இதன் மதிப்பு 19 லட்சம் ரூபாய். இதற்குள் கேரளாவை மழை புரட்டிப்போட்டுவிட, மக்கள் படும் துயரத்தைத் தொலைக்காட்சியில் பார்த்த பிரணதிக்கு, துக்கம் தொண்டயை அடைத்தது. 

பிரணதியின் தந்தை நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவரின் மனைவி, கைக்குழந்தையுடன் வீட்டு மொட்டைமாடியில் தவித்துள்ளார். இந்தத் தகவலையெல்லாம் கேள்விப்பட்ட பிரணதி, தனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என முடிவெடுத்து, பிறந்த நாளுக்குத் தந்தை பரிசாக அளித்த தங்க கேக்கை விற்று அந்தத் தொகையைக் கேரளாவுக்கு வழங்கும்படி தந்தையிடம் கேட்டுக்கொண்டார். மகளின் விருப்பத்தை அறிந்த தந்தை விவேக் கல்லத்தில், மனமகிழ்ந்து தங்க கேக்கை விற்று 19 லட்சம் ரூபாயைக் கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அளித்தார். தங்க கேக்கைத் தயாரித்த மலபார் நிறுவனமே விவேக்கிடமிருந்து தங்க கேக்கை வாங்கிக்கொண்டது. 

மலபார் நிறுவனத்தின் மேலாளர் அனுப் கூறுகையில், ``இந்தத் தங்க கேக்கைத் தயாரிக்க, கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆனது. கேக்கின் மேற்புறம் துருக்கியிலிருந்து வரவழைக்கப்பட்ட பிரத்தியேக தங்கத்தால் வடிவமைக்கப்பட்டது. நாங்கள் பார்த்துப் பார்த்து வடிவமைத்து பிரணதியின் தந்தையிடம் வழங்கினோம்''  என்கிறார்.

விவேக் தன் மகளின் ஈகை குணம் கண்டு மெச்சுகிறார். ``என் குழந்தைகள் துபாயில் வளர்ந்தாலும் தாய்நாடு மீது பற்றுகொண்டவர்களாக இருக்க வேண்டும் என்பதில் மிகுந்த கவனத்துடன் இருப்பேன். பிரணதிக்கு மிகவும் இளகிய மனது. ஒருமுறை சென்னை சென்றபோது, காஞ்சி காமகோடி அறக்கட்டளை மருத்துவமனைக்குச் சென்றிருந்தோம். மருத்துவமனையில் 15 வயதுச் சிறுமியின் இதய அறுவைசிகிச்சைக்குப் பணம் இல்லாமல் பெற்றோர் தவித்தனர். பிரணதி அந்தச் சிறுமியின் அறுவைசிகிச்சைக்கு உதவுமாறு என்னிடம் கூறினாள். 3 லட்சம் ரூபாய் செலவில் அந்தச் சிறுமிக்கு அறுவைசிகிச்சை செய்ய ஏற்பாடு செய்தேன்''  என்று தன் மகள் குறித்து விவேக் பெருமையுடன் கூறுகிறார்.  

சிறுமி பிரணதியோ, ``இந்த தங்க கேக், யாருக்கும் எந்தப் பயனும் இல்லாமல் அலமாரியை அலங்கரிப்பதால் என்ன பயன் ஏற்பட்டுவிடப்போகிறது. இப்போதுதான் அதன் மதிப்பு பல மடங்கு உயர்ந்திருக்கிறது'' என்கிறார்.

தங்க கேக் மட்டுமல்ல, பிரணதியும் பல மடங்கு உயர்ந்துவிட்டார்!Trending Articles

Sponsored