73 லட்சம் பேர் பாதிப்பு.. 993 பேர் உயிரிழப்பு - 2018 ல் இயற்கைப் பேரிடர்கள்Sponsoredகடந்த சில மாதங்களாக ஐரோப்பிய நாடுகள் மிகக் கடுமையான வெப்பநிலையைச் சந்தித்துக்கொண்டிருக்கின்றன. ஆனால், அதற்கு எதிர்மாறாக, கால மாற்றத்தினால் இந்தியா அதிக மழை, வெள்ளம், போன்ற பாதிப்புகளால் தொடர்ந்து சேதமடைந்து வருகிறது. கடந்த பல்வேறு நாள்களாக வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கைச் சீற்றங்களினால் பாதிக்கப்பட்ட கேரளா, மழையின் தாக்கம் குறைந்துள்ளதால் நிவாரணப் பணிகளைச் செய்து, இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பலரும் தங்களால் முடிந்த உதவிகளைத் தொடர்ந்து செய்து வருகின்றனர்.

இந்த வருடம் மட்டும் இந்தியாவில் இயற்கைப் பேரிடர்களால் 993 பேர் உயிரிழந்துள்ளனர். மற்ற மாநிலங்களைக் காட்டிலும் கேரளா அதிகளவில் பாதிக்கப்பட்டது. கடந்த பல்வேறு ஆண்டுளாக இல்லாமல் சராசரியாகப் பெய்யும் மழையைவிட 8 மடங்கு அதிகமாக கேரளாவில் தென்மேற்குப் பருவமழை பெய்துள்ளது. கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற இயற்கைச் சீற்றத்தினால் இங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மட்டும் 387. இந்த ஆண்டு பெய்த தென்மேற்குப் பருவமழையினால், இந்தியா முழுவதும் சுமார் 993 பேர் உயிரிழந்துள்ளனர். கேரளாவில் 387 பேர் உயிரிழந்துள்ளது மட்டுமல்லாமல் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 54.1 லட்சத்துக்கும் அதிகமானவை. இவை அனைத்துக்கும் காரணம் ஒரே நாளில் பெய்த 31 செ.மீ. மழை மற்றும் அம்மாநிலத்தில் உள்ள 35 அணைகளிலிருந்து திறக்கப்பட்ட வெள்ள நீர். இதனால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் 1,722-க்கும் அதிகமான வீடுகள் முழுமையாகச் சேதமடைந்தன. 20,945 வீடுகள் பகுதியளவு சேதமடைந்தன. அதுமட்டுமன்றி கோழி, வாத்து உள்ளிட்ட 1.72 கோடி பறவைகளும், ஆடு, மாடு உள்ளிட்ட 46,867 விலங்குகளும் உயிரிழந்துள்ளன. இயற்கையின் தேசமான கேரள மாநிலமே இயற்கையினால் சூறையாடப்பட்டது. 

Sponsored


இந்தியாவில் இயற்கைப் பேரிடர்களால் 5 மாநிலங்களில் 87 மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 73.8 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு, அதில் 17 லட்சம் பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். இதில் 54.1 லட்சம் பேர் மட்டும் கேரளாவில் பாதிக்கப்பட்டவர்கள். முகாம்களில் தங்கவைக்கப்பட்டவர்களில், கேரளாவில் 14.5 லட்சம் பேரும், உத்தரப்பிரதேசத்தில் 10,888 பேரும், கர்நாடகாவில் 5,800 பேரும், அஸ்ஸாமில் 2.4 லட்சம் பேரும் அடங்குவர். இந்தப் பாதிப்பில் சிக்கி உத்தரப்பிரதேசத்தில் 204 பேரும், மேற்கு வங்கத்தில் 195 பேரும், கர்நாடகாவில் 161 பேரும், அஸ்ஸாமில் 46 பேரும் உயிரிழந்துள்ளனர். கடந்த வருடம் இந்தியா முழுவதும் வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1200. இந்த ஆண்டில் இதுவரை ஏற்பட்ட இயற்கைப் பேரிடரால் பலி எண்ணிக்கை குறைந்துள்ளது. ஆனால் பாதிப்புகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. ஆண்டுதோறும் பெருமழை பாதிப்பினால் வருடத்துக்குத் தோராயமாக ரூ.5,000 கோடி வரை இழப்பு ஏற்படுகிறது. 

Sponsored


இனி வரும் காலங்களில் இயற்கைச் சீற்றங்கள் 25% அதிகரிக்கும் என்று பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. தொடர்ந்து வரும் பாதிப்புகளை பார்த்துக் கொண்டே இருக்கும் நம்மால், இனிமேல் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து ஏற்படும் உயிரிழப்பைத் தடுக்க எந்தவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறோம். ஒவ்வொரு முறையும் இயற்கையும் எச்சரிக்கை கொடுத்துக் கொண்டே தான் இருக்கிறது. ஏற்கெனவே சென்னை சந்தித்த வெள்ளத்துக்குப் பிறகும் நாம் பாடங்களைக் கற்றுக்கொள்ளவில்லை, 2018-ல் ஜூலை மாதம் ஒடிசாவில் உள்ள புவனேஸ்வர் நகரும், அரியானா, உத்தரப்பிரதேசத்தில் பெய்த கனமழை காரணமாக யமுனை ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. இதனால் டெல்லி நகரமும் பாதிக்கப்பட்டன. மும்பை நகரமும் இந்தியாவில் அடிக்கடி வெள்ளத்தால் பாதிக்கப்படும் நகரமாக மாறிவிட்டது. 2017- ம் ஆண்டு பெங்களூரு நகரமும், 2015-ல் சென்னையும், 2014-ம் ஆண்டு ஸ்ரீநகரும் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. திடீரென்று ஏற்படும் வெள்ளத்தையும், பெருமழையையும் தடுக்க முடியாது. அதற்கு முன்னெச்சரிக்கையாக நாம்தாம் தயாராக இருக்க வேண்டும். வரக்கூடிய காலங்களில் காலநிலை நிகழ்வுகள் தீவிரமாகலாம்., அதிகமான மழைப்பொழிவு நிகழ்ந்து திடீர் வெள்ளமும் ஏற்படலாம் என்று சர்வதேச காலநிலை விஞ்ஞானிகளும், பல்வேறு ஆய்வு அமைப்புகளும் தெரிவிக்கின்றன. காலநிலை மாற்றம் தொடர்ந்து கொண்டே இருக்கும். அதை எதிர்கொள்ளும் விதமாக நாம் தயாராக வேண்டும்.Trending Articles

Sponsored