வீட்டில் சங்கிலியால் கட்டிவைக்கப்பட்ட இளம்பெண்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு மீட்ட சப்-கலெக்டர்Sponsoredமனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணை 6 ஆண்டுகளுக்குப் பிறகு மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 

ஒடிசா மாநிலம் மயூரபஞ்சி மாவட்டத்தில், மனச்சிதைவு நோயால் (Schizophrenia) பசந்தி ஹோ என்ற 26 வயதுப் பெண் ஒருவர் பாதிக்கப்பட்டிருந்தார். இதன் காரணமாக, பசந்தியை அவரது பெற்றோரே, கடந்த 6 ஆண்டுகளாகச் சங்கிலியால் கட்டி வைத்திருந்தனர். இது குறித்து பத்திரிகையாளர் ஒருவர், அம்மாவட்ட சப்-கலெக்டரிடம் தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, அங்கு விரைந்த அதிகாரிகள், பசந்தியை மீட்டு மாவட்டத் தலைமை பொது மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து பசந்தியின் தந்தை மங்குலு ஹோ கூறுகையில், `நாங்கள் வேண்டும் என்றே பசந்தியைக் கட்டி வைக்கவில்லை. திடீர்திடீரென எனது மகள் ஆடைகளை கிழித்துக்கொண்டு தெருவில் ஓடிவார். அவரை எங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. அரசு உதவியுடன் மருத்துவ சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொண்டோம். ஆனால், தோல்வியில் முடிந்தது. என்ன செய்வது என்று புரியாமல் மனக் குமுறலுடன் இருந்தோம். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வெளியோ ஓடிவிடுவார். இதனால், மகளைச் சங்கிலியால் கட்டி வைத்தோம். உரிய நேரத்துக்கு உணவு வழங்கிவந்தோம். மகளைச் சங்கிலியால் கட்டி வைத்ததில் எந்த உள்நோக்கமும் இல்லை. எனது ஒரே மகள். அவரைப் பாதுகாக்கவே இவ்வாறு செய்தோம்' என்று தெரிவித்தார்.

இதுகுறித்து சப்-கலெக்டர் அசோக் புரோஹி கூறுகையில், `அப்பெண்ணின் பரிதாபமான நிலை மற்றும் அவரது தந்தையின் நிலை மிகவும் கவலை அளிக்கிறது. அவர் ஒரு சிறைச்சாலையில் வாழ்ந்துகொண்டிருந்தார். பத்திரிகையாளர் அளித்த தகவலின் அடுத்தே, பசந்தியை மீட்டெடுத்தோம். மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட அவருக்குச் சிறந்த சிகிச்சை அளிக்க முயன்று வருகிறோம்' என்றார். 

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored