ஆயிரம் அடி நீளம்; 2.99  லட்சம் டன் கொள்ளளவு... இந்த `மதர்ஷிப்' சென்னைக்கு ஏன் ஸ்பெஷல்?ந்தியாவில் 12 மிகப் பெரிய துறைமுகங்கள் உள்ளன. மும்பை ஜவஹர்லால் நேரு துறைமுகம் மிகப் பெரியது. இந்தியாவின் இறங்கும் 40 சதவிகித கன்டெய்னர்களை இந்தத் துறைமுகமே கையாள்கிறது. காரணம், இயற்கைத் துறைமுகமான மும்பைத் துறைமுகம் ஆழமாக இருப்பதால், எளிதாக மதர்ஷிப்புகள் துறைமுகத்துக்குள் வந்துசெல்ல முடியும்.  சென்னைத் துறைமுகம் அப்படியில்லை. இது ஒரு  செயற்கைத் துறைமுகம். ஆழம் குறைவாக இருந்ததால், பிரமாண்டமான மதர் ஷிப்புகளைக் கையாள முடியாத சூழல் இருந்தது.

Sponsored


தனியார் துறைமுகங்களும் தற்போது போட்டிபோடுவதால், சென்னைத் துறைமுகத்தில் பிரமாண்டமான மதர்ஷிப்புகள் வரும் வகையில் ஆழப்படுத்தும் பணிகள் நடைபெற்றுவந்தன. ஆழம் 14.5 மீட்டராக அதிகரிக்கப்பட்டதையடுத்து, VLCC - ரகத்தைச் சேர்ந்த  மிகப் பெரிய க்ரூட் ஆயில் கப்பலான நியூ டைமண்ட், ஈராக்கில் இருந்து சென்னைத் துறைமுகத்துக்கு நேற்று வந்தது. இந்தக் கப்பலின் மொத்தக் கொள்முதல் திறன் 2.99 லட்சம் டன் ஆகும்.  333 மீட்டர் நீளம் (சுமார் 1000 அடி) கொண்ட இந்தக் கப்பல், 60 மீட்டர் அகலம் கொண்டது.  

Sponsored


ஈராக்கின் பாஸ்ரா நகரில் இருந்து இந்தியன் ஆயில் நிறுவனத்துக்காக 1.33 லட்சம் டன் கச்சா எண்ணெயை சென்னைக்கு நியூ டைமண்ட் கொண்டு வந்துள்ளது. ஆகஸ்ட் 19-ம் தேதி அங்கிருந்து புறப்பட்ட இந்தக் கப்பல், 10 நாள்களில் சென்னையை எட்டியது. முழுக் கொள்ளளவுடன் இந்க்த கப்பல் துறைமுகத்துக்குள் வர வேண்டுமென்றால், 20 மீட்டர் ஆழம் தேவை. 137 ஆண்டுக்கால சென்னைத் துறைமுகத்தின் வரலாற்றில் கையாளப்பட்ட மிகப் பெரிய கப்பல் இதுதான்.

Sponsored


சென்னைத் துறைமுகத்தில் 16 மீட்டர் அளவுக்கு ஆழப்படுத்தும் பணிகள் நடைபெறப்போகின்றன. படிப்படியாக 20 மீட்டர் ஆழம் வரை அதிகரிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நியூ டைமண்ட் கப்பலை சென்னைக்கு  கச்சா எண்ணெய் கொண்டு வருவதற்காகக் கடந்த ஓராண்டுக்காலமாக முயற்சி மேற்கொள்ளப்பட்டுவந்தது. கப்பலை துறைமுகத்தில் நிலை நிறுத்த, துறைமுக ஊழியர்களுக்கு சிறப்புப் பயிற்சியும் அளிக்கப்பட்டுவந்தது. நியூ டைமண்டைத் தொடர்ந்து, சென்னைத் துறைமுகத்துக்கு வரும் மதர்ஷிப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

Porto Emporios Shipping Inc என்ற நிறுவனத்துக்குச் சொந்தமான நியூ டைமண்ட் கப்பலின் கேப்டன், கிரீஸ் நாட்டைச் சேர்ந்த நிக்கிடாஸ் ஆவார். கப்பலில் 24 பணியாளர்கள் உள்ளனர். 


 Trending Articles

Sponsored