இன்ஷூரன்ஸின் அவசியத்தை உணர்த்திய கேரள மழை வெள்ளம்! கேரளா, மழை வெள்ள பாதிப்பிலிருந்து மீளத் தொடங்கிவிட்ட நிலையில், வெள்ளத்தால் ஏற்பட்ட இழப்பு சுமார் 21,000 கோடி ரூபாய் அளவுக்கு இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இன்ஷூரன்ஸ் நிறுவனங்களோ சுமார் 1,000 கோடி ரூபாய் அளவுக்குத்தான் தங்களிடம் க்ளெய்ம் கோரி விண்ணப்பங்கள் வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளன. இதற்கு, இன்ஷூரன்ஸ் குறித்த போதிய விழிப்பு உணர்வு மக்களிடையே இல்லாததுதான் முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

Sponsored


இந்தியாவைப் பொறுத்தவரை, இன்ஷூரன்ஸ் துறை இன்னமும் முழு அளவில் வளர்ச்சி பெறாத துறையாகவே உள்ளது. இதற்கு இன்ஷூரன்ஸ் எடுப்பதை மக்கள் இன்னமும் அவசியம் இல்லாதது என்று கருதுவதே காரணம். அதிலும், ஓரளவுக்கு இன்ஷூரன்ஸ் எடுக்க முன் வருபவர்கள் கூட ஆயுள் காப்பீட்டு பாலிசியை மட்டுமே எடுக்க முன் வருகிறார்களே தவிர, ஹெல்த் இன்ஷூரன்ஸ், வீடு மற்றும் உடைமைகள் போன்றவற்றுக்கான இன்ஷூரன்ஸை எடுக்க முன் வருவதில்லை. அதன் பலனைத்தான் தற்போது கேரள மாநிலம் உணரத்தொடங்கி உள்ளது.

Sponsored


தற்போது கடந்த நூறாண்டுகளில் சந்தித்திராத மழையை, கேரளா இந்த முறை எதிர்கொண்டுள்ளது. மழை வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் பாதிப்புகளுக்கான பொருளாதார இழப்பீடுகளைக் கேரள அரசோ அல்லது பாதிப்புக்குள்ளான மக்களேதான் எதிர்கொள்ள வேண்டியதுள்ளது. ஏனெனில், காயமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் தரப்பில் மிக மிகச் சொற்ப அளவிலேயே இன்ஷூரன்ஸ் எடுத்துள்ளனர். அதேபோன்று உடைமைகளுக்கான இன்ஷூரன்ஸ் ஏறக்குறைய எடுக்கப்படவே இல்லை.

Sponsored


பொருளாதார இழப்பு  

கடந்த 2015-ம் ஆண்டு ஏற்பட்ட சென்னை பெரு வெள்ளத்தின்போதும் ஏறக்குறைய இதே நிலைமைதான் காணப்பட்டது. வெள்ளத்தினால் வீடு, வாகனங்கள் மற்றும் உடைமைகளுக்கு ஏராளமான சேதங்கள் ஏற்பட்டன. இவற்றில் பெரும்பாலானவற்றுக்கு இன்ஷூரன்ஸ் எடுக்கப்படவில்லை என்பதால், பாதிக்கப்பட்டவர்களுக்கான பொருளாதார இழப்பு மிக அதிக அளவில் இருந்தது. வழக்கமாக இதுபோன்ற இயற்கை பேரழிவுகளுக்குப் பின்னால், இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் தீவிரமாக களத்தில் இறங்கி, பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடுகளைக் கொடுப்பதற்கான விசாரணைகளைத் தொடங்கும். ஆனால், வெள்ளம் வடிந்து இயல்பு நிலை திரும்பிய பின்னர், அப்படி இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் செய்தவர்கள் எத்தனை பேர் என்று பார்த்தால், அந்த எண்ணிக்கை மிகச் சொற்ப அளவிலேயே இருந்ததாகக் காப்பீட்டு நிறுவனங்கள் அப்போது தெரிவித்திருந்தன.

இந்த நிலையில், தற்போது கேரளாவில் வெள்ளத்தினால் குடியிருப்புகள் உள்பட சுமார் 1 லட்சம் கட்டடங்கள் அழிந்துபோனதாகவும், 10,000 கி.மீ. தொலைவுக்கான சாலைகள் சேதமடைந்துள்ளன. பல லட்சம் ஹெக்டேர்களில் பயிரிடட்டப்பட்ட பயிர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இதனால் ஏற்பட்ட பொருளாதார இழப்பு 21,000 கோடி ரூபாயாக முதல்கட்டமாக மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், அதில் வெறும் 5 % அளவுக்குத்தான், இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் கோரப்பட்டுள்ளதாகவும், இது சுமார் ரூ. 500 கோடி முதல் 1000 கோடி வரைக்கும் இருக்கலாம் என்றும் தனியார் இன்ஷூரன்ஸ் நிறுவன உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

துரிதமாக வழங்கப்பட்ட இன்ஷூரன்ஸ் க்ளெய்ம்

அதே சமயம் இன்ஷூரன்ஸ் எடுத்தவர்களுக்கான க்ளெய்ம்களை உடனடியாக செய்து கொடுப்பதற்கான நடவடிக்கைகளுக்காக, ஒவ்வொரு காப்பீட்டு நிறுவனங்களுமே தனித்தனியாக சிறப்புக் குழுக்களை அமைத்திருந்தன. பல்வேறு இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் கணிசமான உதவிக் கோரும் தொலைப்பேசி எண்களை அறிவித்திருந்தன. தனியான இணையதளங்களையும் ஏற்படுத்தி இருந்தன. இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம், க்ளெய்ம் கோருபவர்களுக்கான செயலாக்க நடைமுறைகளை எளிமைப்படுத்தி இழப்பீட்டுத் தொகையை வழங்குமாறு இன்ஷூரன்ஸ் நிறுவனங்களை அறிவுறுத்தியதன் பேரிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனால், காப்பீடு எடுத்தவர்கள் அதிக அலைச்சல் மற்றும் சிரமம் இல்லாமல் தங்களுக்கான இழப்புத் தொகையைப் பெற்றுக்கொண்டனர். இதில் அதிகபட்சமாக இழப்பீடு கோரப்பட்டது மோட்டார் வாகனங்கள் மற்றும் தனி நபர் விபத்துக் காப்பீடுகள்தான்.

இந்த நிலையில், தனி நபர்களுக்கும், அவர்களது விலை மதிப்பு மிக்க உடைமைகளுக்கும் இன்ஷூரன்ஸ் எடுப்பது எவ்வளவு அவசியம் என்பதை கேரளாவில் தற்போது ஏற்பட்டுள்ள மழை வெள்ளம் போன்ற இயற்கை பேரழிவுகள் நமக்கு மீண்டும் ஒரு முறை உணர்த்தி உள்ளன. இதுபோன்ற தருணங்களில், ஏற்கெனவே இன்ஷூரன்ஸ் எடுத்திருந்தால் அது சம்பந்தப்பட்ட நபருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பாக அமைந்திருக்கும். உயிரிழப்போ, காயமோ அல்லது உடல் நலக்குறைவோ அல்லது உடைமைகளுக்குச் சேதமோ ஏற்பட்டாலும் கூட, அதனால் ஏற்படும் பொருளாதார பின்னடைவிலிருந்து குடும்பத்தினர் மீண்டெழ முடியும்.

"வழக்கமாக இந்தியாவில் இதுபோன்ற இயற்கை சீற்றங்களுக்குப் பின்னர் ஏற்படும் பொருளாதார இழப்பு, இன்ஷூரன்ஸ் எடுத்தவர்களுக்கான இழப்பை விட மிக அதிகமாக இருந்து வந்துள்ளது. இது, மக்களிடையே இன்ஷூரன்ஸின் முக்கியத்துவம் குறித்த விழிப்பு உணர்வு இல்லாததும், 'நமக்கு ஒன்றும் நடக்காது' என்ற மனப்பான்மையுமே காரணம். இன்ஷூரன்ஸ் குறித்து அதிகம் பேர் கேட்டு விசாரிக்கின்றனர். ஆனால், அவர்களில் இன்ஷூரன்ஸ் எடுப்பவர்களின் எண்ணிக்கை மிக மிகச் சொற்பமாகவே இருக்கிறது" என்கிறார் எல்ஐசி உயரதிகாரி ஒருவர்.

இன்ஷூரன்ஸ் எடுப்பதைக் கட்டாயமாக்கலாமா?

இத்தகைய சூழலில், "இன்ஷூரன்ஸ் எடுப்பதைக் கட்டாயமாக்குவது இதுபோன்ற தருணங்களுக்குத் தீர்வாக அமையுமா?" என்று கேட்டால், இல்லை என்றே சொல்கின்றன இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள். அதற்கு உதாரணமாக மோட்டார் இன்ஷூரன்ஸ் துறையைச் சுட்டிக்காட்டும் இத்துறை வல்லுநர்கள், வாகன இன்ஷூரன்ஸ் எடுப்பது கட்டாயம் என்றபோதிலும், பெரும்பான்மையானோர் அதற்கான பாலிசியை புதுப்பிக்கத் தவறி விடுகின்றனர் அல்லது அதுகுறித்துக் கவலைப்படுவதுமில்லை. இதனால், பல இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் தற்போது நீண்ட கால இன்ஷூரன்ஸ் பாலிசிகளை அறிமுகப்படுத்தத் தொடங்கியுள்ள போதிலும், அது போதுமானதாக இல்லை.

எனவே, மக்களிடையே இதுபோன்ற இயற்கை சீற்றங்களால் ஏற்படும் அபாயங்கள் குறித்த விழிப்பு உணர்வை அதிகரிப்பதுதான் ஓரளவு முன்னேற்றத்தை ஏற்படுத்தும். இதையும் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களும், அரசாங்கமும் தங்களது பணியில் ஒரு அங்கமாகக் கருதி செய்ய வேண்டும். குறிப்பாக ஹெல்த் இன்ஷூரன்ஸ் குறித்து மிக அதிகமாக விழிப்பு உணர்வு பிரசாரத்தை அரசு தரப்பில் அதிக அளவு மேற்கொள்ளப்பட வேண்டும் என்கின்றன இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள்.

மொத்தத்தில் இன்ஷூரன்ஸ் எடுப்பதன் அவசியத்தை மீண்டும் ஒரு முறை மக்களுக்கு உணர்த்திச் சென்றுள்ளது கேரள மழை வெள்ளம். எனவே, இனியாவது ஆயுள் காப்பீட்டு பாலிசி மட்டுமல்லாது இதுபோன்ற இயற்கை பேரழிவுகளையும் சமாளிக்கும் வகையிலான இதர இன்ஷூரன்ஸ்களையும் எடுக்கத் தொடங்குவோம்!

                                                                                          3 முக்கிய துறைகளில் கடும் பாதிப்பு!

இந்திய மக்கள் தொகையில் 2.8 சதவிகிதத்தைக் கொண்டுள்ள கேரளா, இந்தியப் பொருளாதாரத்துக்கு ஏறக்குறைய 4% பங்களிப்பை அளித்து வந்தது. அதே சமயம் தொழில் துறை மாநிலமாக அல்லாமல் நுகர்வு சார்ந்த மாநிலமாகத்தான் கேரளா அறியப்பட்டது.

இந்த நிலையில், மழை வெள்ளம் காரணமாக கேரளாவில் ஆட்டோமொபைல், ரப்பர் மற்றும் ஐடி ஆகிய 3 முக்கிய துறைகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்கமாக ஓணம் பண்டிகையையொட்டிய தினங்களில் நுகர்வு பொருள்கள் மிக அதிகமாக விற்பனையாகும். இந்த முறை ஆகஸ்ட் 24 - செப்டம்பர் 4 வரையிலான ஓணம் பண்டிகை நாள்களில் அப்படியான விற்பனை எதுவும் காணப்படவில்லை. அத்தியாவசியம் அல்லாத பொருள்களுக்கு மக்கள் முன்னுரிமை அளிக்கவில்லை.

ஆட்டோமொபைல்

ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்ட இழப்பு சுமார் 1,000 கோடி ரூபாயாக இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் இன்ஷூரன்ஸ் செய்யப்பட்டவற்றுக்கு போதிய இழப்பீடு கிடைக்கும் என்றாலும், இன்ஷூரன் எடுத்தவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. இதனிடையே தற்போதைய இழப்பு தவிர, ஆட்டோமொபைல் துறையில் இன்னும் 2 மாதங்களுக்கு விற்பனையும் மிகவும் மந்தமாக இருக்கும் என்றும், இயல்பு நிலை திரும்ப மேலும் 4 மாதங்களாகும் என்றும் இத்துறையைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், கேரளாவில் மிக வலுவாகக் காலூன்றியுள்ள மாருதி சுஸூகி மற்றும் ஹூண்டாய் உள்ளிட்ட ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பாதிப்புக்குள்ளாகும் .

ரப்பர்

இந்தியாவின் ரப்பர் உற்பத்தியில் 85 சதவிகிதத்தைக் கேரளா அளிக்கிறது. தற்போது சப்ளை பாதிக்கப்பட்டுள்ளதால் ஜேகே டயர்ஸ், அப்போலோ டயர்ஸ், சியேட், எம்ஆர்எஃப் போன்ற டயர் தயாரிப்பு நிறுவனங்கள் பாதிப்புக்குள்ளாகும். இந்த நிறுவனங்கள், இங்கே ஏராளமான உற்பத்தி ஆலைகளை வைத்துள்ள நிலையில், மழை வெள்ளத்தால் அவற்றின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இயல்பு நிலை திரும்ப இன்னும் ஒரு வாரக் காலமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஐடி

கேரளாவில் 10 ஐடி பூங்காக்கள் உள்ள நிலையில், சுமார் 2 லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற்று வந்தனர். தற்போதைய மழை வெள்ளம் காரணமாக பல்வேறு ஐடி நிறுவனங்கள், தங்களது அலுவலகங்களை வேறு இடங்களுக்கு மாற்ற முயலலாம். இதனால், பணிகள் செய்து கொடுப்பது (புராஜக்ட்) குறுகிய காலத்துக்குப் பாதிக்கப்படும். இந்தத் தாமதம் காரணமாக, ஆர்டர் கொடுத்தவர்கள் அதைத் திரும்பப் பெற்றால், ஐடி நிறுவனங்களின் வருவாய் பாதிக்கப்படும்.Trending Articles

Sponsored