விபத்தில் சிக்கிய கேரள மாணவி ஹனான்! - புகார் கொடுக்கச் சென்றபோது நடந்த சோகம்



குடும்ப வறுமையைப் போக்கவும், கல்லூரி படிப்புச் செலவுக்காகவும் மீன் விற்பனை செய்துவந்த கேரள கல்லூரி மாணவி ஹனான், கார் விபத்தில் படுகாயம் அடைந்தார். பிரதமர் மோடியை விமர்சித்து ஃபேஸ்புக் பதிவிட்டதாக சர்ச்சை கிளம்பியதைத் தொடர்ந்து விபத்து ஏற்பட்டிருப்பதாக ஹனான் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Sponsored


திருச்சூரைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஹனான், கொச்சியில் தாய் மற்றும் சகோதரனுடன் வசித்துவருகிறார். மருத்துவர் ஆகும் கனவில் தொடுபுழாவில் உள்ள ஒரு கல்லூரியில் வேதியியல் படித்துவருகிறார். குடும்ப வறுமையைப் போக்கவும் படிப்புச் செலவுக்காகவும் காலையில் கல்லூரிக்குச் சென்றுவிட்டு மாலையில் மீன் விற்கும் தொழில் செய்துவந்தார். ஹனானின் இந்த முயற்சிக்கு தொடக்கத்தில் சமூக வலைதளங்களில் ஆதரவு பெருகியது. பின்னர், அவருக்கு `ராம்லீலா' இயக்குநர் அருண் கோபி தனது அடுத்த தயாரிப்பான `21-ம் நூற்றாண்டு' என்ற படத்தில் நல்ல கதாபாத்திரம் அளிக்க முன்வந்தார். இதைத் தொடர்ந்து, பட வாய்ப்புக்காகத் தன் துயரக்கதையை வெளியே கூறியதாக, சமூக வலைதளவாசிகள் ஹனான்மீது பாய்ந்தனர். இதைத் தொடர்ந்து, ஹனானுக்கு ஆதரவாக கேரள முதல்வர் பினராயி விஜயன் கருத்து தெரிவித்ததுடன், அவரை நேரில் சந்தித்து வாழ்த்தவும் செய்தார். டி.வி ஷோ-க்களில் சிறு வேடங்களில் நடித்துவரும் ஹனான், மேடை நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வது வழக்கம்.

Sponsored


Sponsored


இந்த நிலையில், கொடுங்கல்லூரில் ஒரு மேடை நிகழ்ச்சியில் பங்கெடுத்துவிட்டு ஹனான் காரில் திரும்பியிருக்கிறார். அப்போது, திடீரென சாலையின் குறுக்கே ஒருவர் கடந்துசென்றிருக்கிறார். அவர்மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் காரை திருப்பியபோது, சாலை ஓரத்தில் நின்ற மின் கம்பத்தில் கார் மோதியுள்ளது. இதில், ஹனானின் முதுகுத்தண்டில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. கார் ஓட்டுநரும் காயம் அடைந்துள்ளார். உடனடியாகக் கொடுங்கல்லூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட ஹனான், மேல் சிகிச்சைக்காக கொச்சி மெடிக்கல் டிரஸ்ட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 

இந்த நிலையில், மருத்துவமனையில் படுத்திருக்கும் ஹனான் பேசுவது போன்ற ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அதில் பேசும் ஹனான், "நான் சமூக வலைதளங்களில் பிரதமர் மோடியைத் தவறாகப் பதிவிட்டதாகக் கூறி, நிறைய போன் கால்கள் வந்தன. நான் அதுபோன்ற பதிவுகள் எதுவும் போடவில்லை. எனவே, இது சம்பந்தமாக காவல் துறை கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுப்பதற்காகச் சென்றுகொண்டிருந்தேன். அப்போதுதான் விபத்து ஏற்பட்டது. இப்போது, ஒரு காலை அசைக்க முடியவில்லை; கடுமையாக வலிக்கிறது" என அழுதபடியே கூறுகிறார். கல்லூரி மாணவி ஹனான் விபத்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Trending Articles

Sponsored