கணவன் மனைவிக்கு இடையே நடந்த `கிளாசிக்’ வழக்கு! - உச்ச நீதிமன்றத்தின் பதிலடிSponsored``என் மனைவியை நான் திருமணம் செய்யும்போது, தன்னுடைய எம்.சி.ஏ படிப்பை முடித்துவிட்டதாக அவரும் அவரின் பெற்றோரும் கூறியிருந்தனர். ஆனால், திருமணத்துக்குப் பிறகுதான் தெரிந்தது, அவர் அந்தப்  படிப்பை முடிக்கவில்லை என்று. என் மனைவி இந்த விஷயத்தில் என்னை ஏமாற்றிவிட்டார்!”

- உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த சந்தீப் பால் என்பவர், திருமணமாகி நான்கு வருடங்களுக்குப் பிறகு, மனைவி அனுப்ரியா பால் மீது இப்படி ஒரு வழக்கு பதிவுசெய்கிறார்.

இந்த வழக்கை அலகாபாத் உயர் நீதிமன்றம் விசாரித்தது. அனுப்ரியா பால் மற்றும் அவர் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கும் சம்மன் அனுப்பியது. அதற்குப் பதில் அளித்து இந்த வழக்கைத் தள்ளுபடி செய்யுமாறு கோரி அனுப்ரியா தரப்பு மனு அளித்ததற்கு, ``கணவர் சந்தீப் தரப்பில் நியாயமில்லை என்று கூறமுடியாதே” எனக் கூறி, இந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய மறுத்தது. பிறகு, அனுப்ரியா உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

Sponsored


இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவர்களின் பின்னணி அறிந்து, வேறு கோணத்தில் விசாரிக்கத் தொடங்கியது.

Sponsored


2007-ம் ஆண்டு, சந்தீப்புக்கும் அனுப்ரியாவுக்கும் திருமணமானது. அப்போது, அனுப்ரியா எம்.சி.ஏ இறுதியாண்டு படித்துக்கொண்டிருந்தார். திருமணமான இரண்டு மாதங்களுக்குப் பிறகுதான், எம்.பி.பி.எஸ் படிப்பை முடித்திருக்கிறார் சந்தீப். அனுப்ரியாவும் எம்.பி.ஏ படிப்பில் சேர்ந்திருக்கிறார். இதற்கிடையே, சந்தீப் வரதட்சணை கேட்டு தொல்லை செய்ததால், மத்திய பிரதேசத்தில் உள்ள தன் தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டார் அனுப்ரியா. அப்போது, சந்தீப்புக்கு அதே மாவட்டத்தில் தற்காலிக மருத்துவ அதிகாரியாகப் பணிபுரியும் வேலை கிடைத்தது. அதனால், 2008 ஏப்ரல் இறுதி வரை, அனுப்ரியாவின்  பெற்றோர் வீட்டிலேயே இருவரும் தங்கினர். அதன்பிறகு, உத்தரப்பிரதேசத்தில் நிரந்தர மருத்துவ அதிகாரியாக மாற்றலாகிச் சென்றுவிட்டார். 2008 ஜூன் மாதம், அனுப்ரியாவுக்குத் தாய் வீட்டில் முதல் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையுடன் புகுந்த வீட்டுக்குச் சென்ற அனுப்ரியா, அங்கே கொடுமை தாங்காமல் மீண்டும் பெற்றோர் வீட்டுக்கே வந்துவிட்டார்.

2008-ம் ஆண்டு, அனுப்ரியா குடும்ப நலவழக்கு மையத்தில் (Family Conciliation Centre), கணவர் மீது புகார் அளிக்கிறார். அதற்கு, சந்தீப் நேரில் ஆஜராகி, இனி மனைவியைக் கொடுமை செய்ய மாட்டேன் என உறுதியளித்தார். அனுப்ரியாவும் புகுந்த வீட்டுக்குச் சென்றார். ஆனால், மீண்டும் 2009 ஜூலை மாதம், சந்தீப் மீதும் அவரின் குடும்பத்தினர் மீதும் புகார் அளிந்தார். ஒரு மாதம் கால இடைவெளிக்குள்ளே மற்றொரு புகாரும் அளித்தார். இதற்கிடையே, அவருக்கு இரண்டாவது குழந்தையும் பிறந்தது. 2011 ஜூன் மாதம், தன் பெற்றோர் வீட்டுக்கே திரும்பிய அனுப்ரியா, குற்றவியல் சட்டத்தின் 125 பிரிவின்கீழ், கணவரிடமிருந்து 35,000 ரூபாய் அளிக்குமாறு மனுத்தாக்கல் செய்திருக்கிறார்.

இந்தச் சமயத்தில்தான், அனுப்ரியாவை பழி வாங்க, அவர் மீது 420 பிரிவின்கீழ், தன்னை ஏமாற்றியதாக வழக்குத் தொடுத்தார் சந்தீப்.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ``இந்த வழக்கில், சம்பந்தப்பட்டவர் எம்.சி.ஏ முடிக்காததால், அவரின் கணவர் அவர் மீது வழக்குத் தொடுத்தார் என்றில்லை. பல சண்டை சச்சரவுகளுக்கு இடையே இருவரும் 8 வருடங்கள் வாழ்ந்திருக்கின்றனர். இரண்டு குழந்தைகள் பெற்றிருக்கின்றனர். இதற்கிடையே கணவர் மீது அவர் பல புகார்கள் அளித்திருக்கிறார். அவரைப் பழி வாங்கவே, கணவர் இப்படியான வழக்கைத் தொடுத்திருக்கிறார் என்பது மிகத் தெளிவாக தெரிகிறது. இந்த விவகாரத்தை உயர் நீதிமன்றம்கூட இந்தக் கோணத்தில் சிந்திக்காதது மிகவும் ஆச்சர்யம் அளிக்கிறது. நீதிமன்றங்கள் குற்றவியல் புகார்களை எப்படி இயந்திரத்தானமாக இயக்குகின்றன என்பதற்கு இந்த வழக்கு ஒரு கிளாசிக் உதாரணம்'' என்று கூறி, அனுப்ரியா மீது போடப்பட்ட வழக்கைத் தள்ளுபடி செய்துள்ளது.Trending Articles

Sponsored