``வெள்ளம், நிலச்சரிவு, உயிரிழப்பு!” - வடகிழக்கு மாநிலங்களையும் விட்டுவைக்காத வெள்ளம்Sponsoredகேரளா இப்போதுதான் மிகப்பெரிய இயற்கைப் பேரிடரைச் சந்தித்து மீண்டு கொண்டிருக்கிறது. வெள்ள நிவாரண முகாம்களில் இருந்த மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறார்கள். கேரளா வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருந்த நேரத்தில்தான் இந்தியாவின் வடகிழக்கு பகுதியும் மிகப்பெரிய இயற்கைப் பேரிடரை எதிர்கொண்டுள்ளது, இப்போதும் எதிர் கொண்டிருக்கிறது. இப்போதுவரை ஏகப்பட்ட உயிரிழப்புகளையும் சந்தித்துள்ளன வடகிழக்கு மாநிலங்கள். 

வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, அருணாசலப் பிரதேசம், மேகாலயா, அஸ்ஸாம் போன்றவை வெள்ளத்தாலும் நிலச்சரிவுகளாலும் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த மாநிலங்களைச் சேர்ந்த மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலானோர் நிவாரண முகாம்களில் உள்ளனர். 

நாகாலாந்தில் இதுவரை 12 பேர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளுக்கு உயிரிழந்துள்ளனர். கடந்த ஒரு மாதமாக இடைவிடாத கனமழையினால் மிகப்பெரிய வெள்ளப்பாதிப்பும் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. 5000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். 536 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. 359 இடங்கள் நிலச்சரிவினால் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளன. நாகாலாந்தின் அனைத்துச் சாலைகளும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன. 

Sponsored


Sponsored


நாகாலாந்தின் நில அமைப்பில் மேற்புற மண் பரப்பானது எளிதில் நிலச்சரிவை ஏற்படுத்தக்கூடியது. அதன் காரணமாக நிவாரணப் பொருள்களை எடுத்துச் செல்வதற்குக்கூட வழியில்லாமல் திண்டாடி வருகின்றனர். முக்கியமாக நாகாலாந்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள கிபிரே மாவட்டம்(Kiphire) ஜுலை 26 ம் தேதியன்றே முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுவிட்டது. நாகாலாந்தின் வர்த்தக மையம் அமைந்திருக்கும் திமபூர் பகுதிக்குச் செல்வதற்கும் வழியில்லை. முக்கியச் சாலையின் வழியாக திமபூர் (Dimapur) செல்வதற்கு 12 மணி நேரமானால் நிலச்சரிவுகளின் காரணமாக தற்போது இரண்டு மூன்று நாள்கள் வரை ஆகின்றன. கிபிரே அமைந்திருப்பது மியான்மாரின் எல்லைப் பகுதி. மியான்மாரிலும் தற்போது வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அதுவும் கிபிரேவை அதிகமாகப் பாதிக்கிறது. நாகாலாந்தின் தலைநகரான கோஹிமா (Kohima) பகுதியும் வெள்ளப் பாதிப்பில் சிக்கியுள்ளது. 

கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி நாகாலாந்து மாநில முதல்வர் நெய்பியூ ரியோ(Neiphiu Rio) ட்விட்டரில் நாகாலாந்து வெள்ளச் சேதத்துக்கு உதவி அளிக்குமாறு பதிவிட்டுள்ளார். அஸ்ஸாமையும் நாகாலாந்தையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையான NH29 முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. டொயங் ஹைட்ரோ மின் திட்டமும் (DOYANG HYDRO ELECTRIC PROJECT | NEEPCO) செயல்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

வெள்ள நிவாரணமாக உடனடியாக 219 கோடி ரூபாய் வேண்டும் என நாகாலாந்து முதல்வர் நெய்பியூ ரியோ மத்திய அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளார். வெள்ளப் பாதிப்பு, நிலச்சரிவிலிருந்து நாகாலாந்தை மீட்டுருவாக்கம் செய்ய 800 கோடி ரூபாய் வரை தேவைப்படும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். நாகாலாந்து முதலமைச்சர் நிவாரண நிதி வழியாகவும் நிதி உதவி அளிக்கலாம். வெள்ளப் பேரிடரை ஆய்வு செய்வதற்காக மத்திய அரசின் குழு செப்டம்பர் 4, 5 தேதிகளில் நாகாலாந்து வருகிறது. கேரளாவில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்ட போது நாகாலாந்து அரசு சார்பாக ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதியாக அளித்துள்ளனர். இப்போது அதுவே பேரிடரில் சிக்கியுள்ளது.

அருணாசலப் பிரதேசத்திலும் வெள்ளப் பாதிப்பும் நிலச்சரிவும் கடுமையாகக் காணப்படுகிறது. அருணாசலப் பிரதேசத்தின் கிழக்கு சியாங் (East Siang) மாவட்டம் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டத்தில் பாயக்கூடிய நதியான சியாங் நதியின் மூலம் சீனாவில் இருந்து வருகிறது. சியாங் நதியானது (Siang River) சீனாவில் ஆரம்பித்து இந்தியாவுக்குள் பாயக்கூடியது. சீனாவில் சங்போ(Tsangpo) என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த சங்போ நதி அருணாசலப் பிரதேசத்திற்குள் நுழைந்தபின் சியாங் என்று அழைக்கப்பட்டு அதன்பின் பிரம்மபுத்திரா நதியோடு இணைந்துவிடுகிறது. வழக்கமாகத் திறந்துவிடப்படும் தண்ணீர் அளவை விடச் அதிக அளவு தண்ணீர் திறந்துவிடப்பட்டதே வெள்ளத்துக்குக் காரணம். ஆனால், தண்ணீரைத் திறந்துவிடுவதற்கு முன்பே சீன, இந்திய அரசை எச்சரிக்கை செய்தது. அப்படியிருந்தும் அங்கிருக்கும் மக்களை வெளியேற்றுவதற்கான வேலை தாமதமாகத்தான் நடந்துள்ளது. 

சீனா, பிரம்மபுத்திரா மற்றும் சட்லெஜ் நதிகளின் நீர்வளத் தரவுகளை 2006-ம் ஆண்டிலிருந்து இந்தியாவோடு பகிர்ந்து வருகிறது. அதன்மூலம் எவ்வளவு தண்ணீர் இந்தியப் பகுதிக்குத் திறக்கப்படும் என்பதை முன்கூடியே அந்தத் தரவுகளில் சொல்லிவிடும். அதேபோன்று இந்த ஆண்டுக்கான நீர்த் திறப்புத் தகவல்களையும் கொடுத்து எச்சரிக்கை செய்துள்ளது. ஆகஸ்ட் 29-ம் தேதி காலை 9.02 மில்லியன் லிட்டர் தண்ணீர் சங்போ நதியிலிருந்து திறக்கப்படும் என முன்னெச்சரிக்கை செய்திருந்தது. கடந்த 50 வருடங்களில் இந்த நீர்வரத்து அதிகம். சீனாவில் ஏற்பட்ட கனமழையும் வெள்ளப்பெருக்கும்தாம் இதற்குக் காரணம். அதுமட்டுமல்லாமல் அருணாசலப் பிரதேசத்திலும் கன மழை பெய்து வருகிறது. சங்போ நதியிலிருந்து 8,070 கியூபிக் மீட்டர் தண்ணீரானது ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியேற்றப்படும் என்றும் அதனால் பொதுமக்களுக்கோ பயிர்களுக்கோ சேதம் ஏற்படக் கூடாது என மத்திய நீர்வள ஆணையம் தெரிவித்துள்ளது. 

இதே போன்று அஸ்ஸாமில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக அங்கும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அஸ்ஸாமில் பாயக்கூடிய பிரம்மபுத்திரா, தன்சிரி (Dhansiri), ஜியபரகி (Jia bharali) ஆகிய நதிகள் அபாய அளவைத் தாண்டிவிட்டன. காஸிரங்கா உயிரியல் பூங்கா உட்பட பல இடங்களும் வெள்ளத்தால் தத்தளிக்கின்றன. அஸ்ஸாம் இயல்பாகவே வெள்ள அபாயம் உள்ள பகுதி. 2014-ம் ஆண்டிலிருந்து கடந்த நான்கு வருடங்களாக ஆகஸ்ட்- செப்டம்பர் மாதங்களில் இதேபோன்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. 2016-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின்போது காஸிரங்கா உயிரியல் பூங்காவில் 503 விலங்குகளும் கடந்த வருடம் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பில் 225 விலங்குகளும் உயிரிழந்துள்ளன. தற்போதைய வெள்ளத்தில் எத்தனை விலங்குகள் உயிரிழந்துள்ளன என இன்னும் சரியாகத் தெரியவில்லை. ஒவ்வொரு வருடமும் அப்போதைய வெள்ள மீட்பு நடவடிக்கைகளைத் தவிர அதன்பின் அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படுவதில்லை. 

மத்திய உள்துறை அமைச்சகத்தின் தேசிய அவசர உதவி மையம் அளித்துள்ள தரவுகளின்படி இந்த ஆண்டில் மட்டும் இதுவரை நிகழ்ந்துள்ள இயற்கைப் பேரிடர்களின் மூலம் இந்தியா முழுவதும் 1400 பேருக்கும் மேல் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாகக் கேரளாவில் 488 பேர் உயிரிழந்துள்ளனர். 

கேரளா - 488 பேர் 
உத்திரப் பிரதேசம் - 254 பேர்
மேற்கு வங்காளம் - 210 பேர் 
கர்நாடகா - 170 பேர்
மஹாராஷ்டிரா - 139 பேர்
குஜராத் - 52 பேர் 
அஸ்ஸாம் - 50 பேர் 
உத்தரகாண்ட் - 37 பேர்
ஒடிசா - 29 பேர்
நாகாலாந்து - 12 பேர்

இந்தியா முழுவதும் இயற்கைப் பேரிடரில் 43 பேர் காணாமல் போயுள்ளனர். 386 பேர் படுகாயமடைந்துள்ளனர். 

குறுகிய நேரத்தில் அதிகமான மழைப்பொழிவே இந்த வெள்ளத்துக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. ஏனென்றால் நாகாலாந்து மாநிலமானது இந்தப் பருவத்தில் வழக்கமான மழைப்பொழிவை விட 28 சதவிகிதம் குறைவான மழைப்பொழிவையே பெற்றுள்ளது. குறைந்த நேரத்தில் மிக அதிக மழைப்பொழிவும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போதும் நீர்ப் பற்றாக்குறை ஏற்படுவதும் காலநிலை மாற்றத்தின் விளைவுகளாக இருப்பினும், நீர் திறக்கப்படுவதைச் சரியாகக் கையாளாமல் விட்டதும் மிக அதிகமான மழைப்பொழிவை முன்கூட்டியே கணிக்க முடிந்தாலும் பொதுமக்களைப் பாதுகாப்பாக இடம்பெயர்க்காமல் விட்டது என நிர்வாகத் திறன் குறைவால் பல உயிர்கள் பலியாகியுள்ளன. இனிவரும் காலங்களில் முறையான பருவ மழைப்பொழிவு என்பது சாத்தியமில்லாத ஒன்றாகவே சொல்லப்படுகிறது. குறுகிய காலத்தில் அதீத மழைப்பொழிவு ஏற்படுவது சாதாரணமாக நிகழலாம் எனச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிப்பதைக் கணக்கில் எடுத்துக்கொண்டு அதற்கேற்ற வகையில் வசதிகளை மேற்கொண்டால் இப்படியான பெரிய இழப்புகள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.Trending Articles

Sponsored