மீண்டும் சரிந்தது சந்தை! 04-09-2018Sponsoredஅதிகரித்து வரும் வர்த்தக யுத்தம் பற்றிய கவலை, ரூபாயின் சரிவு மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு இவை காரணமாக இந்தியப் பங்குச் சந்தையில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக, வர்த்தகம் களையிழந்து காணப்பட்டதையடுத்து பங்குகள் மீண்டும் குறிப்பிடத்தக்க அளவில் மதிப்பிழந்தன.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 154.60 புள்ளிகள் அதாவது 0.40 சதவிகிதம் சரிந்து 38,157.92 என முடிந்தது. தேசியப் பங்குச் சந்தையின் நிஃப்டி 62.05 புள்ளிகள் அதாவது 0.54 சதவிகிதம் குறைந்து 11,520.30-ல் முடிவுற்றது.

Sponsored


ஆசியச் சந்தைகளில் சில பாசிட்டிவாக முடிந்தாலும், பெரிய அளவில் உயரவில்லை. சில சந்தைகள் சற்று மந்தமான நிலையில் முடிவுற்றது. வர்த்தகப் பூசல் பற்றித் தொடர்ந்து அதிகரித்து வரும் கவலையும், அர்ஜென்டினா மற்றும் துருக்கி நாடுகளின் கரன்சிகள் டாலருக்கெதிராக சரிந்திருந்ததும் ஆசியச் சந்தைகளில் முதலீட்டாளர்கள் மனநிலை குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவுக்கு உற்சாகமாக இல்லாததற்கு காரணமாக அமைந்தன.

Sponsored


அமெரிக்கா - கனடா நாடுகளின் வர்த்தகப் பேச்சு வார்த்தை திரும்பவும் தொடங்கவிருக்கும் நிலையில், ஐரோப்பியச் சந்தைகளில் தற்போது ஒரு ஜாக்கிரதை உணர்வுடனேயே வர்த்தகம் நடந்துகொண்டிருப்பதால், பங்குகளின் விலைகளில் பெரிதான மாற்றம் ஏதும் ஏற்படவில்லை.

அமெரிக்க டாலருக்கெதிராக இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் சரிந்து டாலருக்கு, ரூபாய் 71.54 என்று ஆனது சந்தையின் சரிவுக்கு ஒரு முக்கியக் காரணம்.

கச்சா எண்ணையின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதும், இரான் மீதான அமெரிக்கத் தணிக்கைகள், மற்றும் லிபியா, வெனிஸுயலா நாடுகளில் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் அவ்வப்போது ஏற்படும் தடங்கல்கள் காரணமாகவும் கச்சா எண்ணெய் விலை மேலும் உயரக்கூடிய அபாயம் இருக்கிறது. ரூபாயின் மதிப்பு குறைந்து வரும் இவ்வேளையில் இது ஒரு பாதகமான விஷயமாகும்.

மேலும், செபி-யின் அந்நிய போர்ட்போலியோ முதலீட்டாளர்கள் அளிக்க வேண்டிய KYC விவரங்கள் மற்றும் இம்முதலீட்டாளர்கள் பின்பற்ற வேண்டிய விதிகள் காரணமாக சுமார் 75 பில்லியன் டாலர் அளவிலான அந்நிய முதலீடுகள் வெளியேறக்கூடும் என்ற சந்தேகம் மற்றும் ஐயமும் கூட சந்தையின் இன்றைய சரிவுக்குக் காரணம்.

ஆயில், உலோகம், ரியல் எஸ்டேட், பவர், எப்.எம்.சி.ஜி., ஆட்டோமொபைல், கேப்பிடல் கூட்ஸ், வங்கி, டெலிகாம் மற்றும் மருத்துவம் என, தகவல் தொழில் நுட்பத்துறை தவிர அனைத்துத் துறைப் பங்குகளும் சரிவையே கண்டன. ரூபாயின் சரிவு தகவல் தொழில் நுட்பப் பங்குகளின் உயர்வுக்குக் காரணமாக இருந்தது.

சந்தையில் இன்று விலை சரிந்த பங்குகள் :

க்ராஸிம் இண்டஸ்ட்ரீஸ் 4.1%
அல்ட்ராடெக் சிமென்ட் 3.7%
ஏசியன் பெயின்ட்ஸ் 3.5%
ஸ்டேட் பேங்க் 3.3%
டைட்டன் 3.5%
கோல் இந்தியா 2.7%
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் 3%
ஹிந்துஸ்தான் யூனிலீவர் 2.8%
பாரத் பெட்ரோலியம் 2.6%

விலை அதிகரித்த பங்குகள் :

டெக் மஹிந்திரா  2.75%
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் 2.3%
இன்போசிஸ் 2.3%
விப்ரோ 2.1%
எச்.சி.எல். டெக்னாலஜிஸ் 2.6%
ஆக்ஸிஸ் பேங்க் 2.75%
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 1.3%

இன்று மும்பை பங்குச் சந்தையில் 766 பங்குகள் மட்டுமே லாபத்துடன் முடிந்தன. 2010 பங்குகள் விலை சரிந்தும், 135 பங்குகள் முந்தைய தினத்தின் விலைகளிலிருந்து மாற்றமில்லாமலும் முடிந்தன.
 Trending Articles

Sponsored