அமெரிக்காவில் சிகிச்சை: கோவா ஆட்சியைக் கலைக்க காங்கிரஸ் வலியுறுத்தல்!



Sponsored



கோவா மாநில முதல்வராக உள்ள மனோகர் பாரிக்கருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு, அவர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருவதால், அம்மாநிலத்தில் ஆட்சியைக் கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. ஆனால், மனோகர் பாரிக்கர் தலைமையில் கோவாவில் எஞ்சிய பதவிக்காலத்தை பி.ஜே.பி கூட்டணி நிறைவு செய்யும் என்று அம்மாநிலப் பொதுப்பணித்துறை அமைச்சர் ராமகிருஷ்ண தவலிகர் உறுதியளித்துள்ளார். 

ஏற்கெனவே கோவா மாநில ஆளுநராக இருந்த மனோகர் பாரிக்கர், 2014-ம் ஆண்டு பி.ஜே.பி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைந்த சில மாதங்களில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றார். பின்னர், கோவாவில் சட்டசபைத் தேர்தல் முடிந்ததும், அங்கு பி.ஜே.பி தலைமையில் கூட்டணி ஆட்சி அமைந்தது. அப்போது, மீண்டும் கோவா முதல்வராகப் பொறுப்பேற்றார் மனோகர் பாரிக்கர். தற்போது, பாரிக்கருக்கு கணைய அழற்சி பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்காவில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், கோவா மாநிலத்தில் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரமாகாந்த் கலாப், "கோவாவில் தற்போது அரசியலமைப்பு ரீதியில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே, இம்மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வலியுறுத்தி அழுத்தம் கொடுப்பதற்காக ஆளுநரைச் சந்திக்க அனுமதி வாங்கியுள்ளோம். சிகிச்சைக்காக மனோகர் பாரிக்கர், அமெரிக்கா சென்றுள்ள நிலையில் முதல்வராக அவரால் செயலாற்ற முடியாத நிலை தொடர்ந்து நீடிக்கிறது. வேறு எந்த அமைச்சரிடமும் அவர் தன்னுடைய பொறுப்புகளை வழங்கவும் இல்லை. இதனால், மாநிலத்தில் அமைச்சரவைப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

Sponsored


Sponsored


தவிர, மின்சாரத்துறை அமைச்சர் பாண்டுரங் மட்காக்கர் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஃபிரான்சிஸ் டி'சோசா ஆகியோரும் உடல்நலக் குறைவால் செயல்பட முடியாத நிலையில் உள்ளனர். முதல்வரும் அமைச்சர்களும் எப்போது திரும்பிவந்து தங்கள் பணியைத் தொடர்வார்கள் என்று எந்தவொரு வரையறையும் இல்லை. எனவே, கோவா மாநில ஆளுநர் இப்பிரச்னையில் தலையிட்டு முடிவெடுக்க இதுவே சரியான தருணம்'' என்று குறிப்பிட்டார்.

கணைய அழற்சிக்காக மும்பை லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர், ஆகஸ்ட் மாதம் 22-ம் தேதி அவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். இந்த நிலையில், அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். ஏற்கெனவே கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலும் அவர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்றார்.

அமைச்சர் ஃபிரான்சிஸ் டி'சோசாவும் உடல்நலம் குன்றி சிகிச்சைக்காகக் கடந்த மாதம் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று வருகிறார். மற்றொரு அமைச்சரான மட்காக்கர், மூளை பாதிப்பு நோயால் பாதிக்கப்பட்டு, மும்பை மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருகிறார்.

இந்தச் சூழ்நிலையில் கோவாவில் பி.ஜே.பி-யின் கூட்டணிக் கட்சியான மகாராஷ்டிரவாடி கோமந்தக் கட்சியைச் சேர்ந்தவரும் அமைச்சருமான ராமகிருஷ்ணா தவாலிகர், ஆட்சியைக் கலைக்க வேண்டிய அவசியமில்லை என்றும், எஞ்சியுள்ள பதவிக் காலத்தை மனோகர் பாரிக்கர் தலைமையிலான அரசு நிறைவு செய்யும் என்றும் தெரிவித்துள்ளார். அரசு எடுத்துள்ள அனைத்துப் பணிகளையும் நிச்சயம் நிறைவேற்றும்; இப்போதைய சூழலில் முதல்வரை மாற்ற வேண்டும் என்று கூட்டணியில் இடம்பெற்றுள்ள யாரும் கோரிக்கை வைக்கவில்லை என்றார் அவர். அரசியல்ரீதியாகக் கருத்து தெரிவிப்பதற்கு யாருக்கும் உரிமை உண்டு; இப்போதுள்ள நிலையில் கோவாவில் அரசை மாற்ற வேண்டும் என்ற அவசியம் எழவில்லை என்றும் தவாலிகர் கூறினார். 

கோவாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 17 இடங்களில் வெற்றிபெற்ற போதிலும், அந்தக் கட்சிக்குப் பெரும்பான்மை கிடைக்காததால், 13 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்ற பி.ஜே.பி, இதர கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைத்தது. இதையடுத்து, முதல்வராக மனோகர் பாரிக்கர் பதவியேற்றார். என்றாலும், அவருடைய உடல்நிலை காரணமாக அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது, அதிக நாள்கள் அமெரிக்காவில் தங்கியிருந்து சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பதால் இந்தச் சர்ச்சை எழுந்துள்ளது. 

ஆளுநரைச் சந்தித்து காங்கிரஸ் கட்சி, பி.ஜே.பி கூட்டணி அரசுக்கு எதிராகக் கொடி பிடித்துள்ள நிலையில், கோவா அரசியலில் சூடு பிடித்துள்ளது. மனோகர் பாரிக்கருக்குப் பதிலாக வேறு ஒருவரை முதல்வராக நியமிப்பது அல்லது பாரிக்கர் திரும்பியதும் உடனடியாக அரசுப் பணிகளைக் கவனிப்பது மட்டுமே அதற்கெல்லாம் ஒரே தீர்வாக அமையும் என்கின்றனர் மாநிலக் காங்கிரஸ் கட்சியினர்...



Trending Articles

Sponsored